என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, October 6, 2012

வள்ளலார் இல்லம்


ஆயுள் முழுவதும் அன்பை போதித்த வள்ளல் பெருமானை உருவாக்கியதில் தருமமிகு சென்னைக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. சென்னை ஏழுகிணறுப் பகுதியில் வீராசாமித் தெருவில் உள்ள ஒரு ஒண்டிக் குடித்தன வீட்டில் தான் அந்த மாமனிதர் சுமார் 33 ஆண்டுகள் வசித்து வந்தார்.

கடலூர் மாவட்டம் மருதூரில் 1823இல் ராமலிங்கம் பிறந்தார். அவர் பிறந்த சில மாதங்களிலேயே தந்தையை பறிகொடுத்தார். எனவே தாயார் சின்னம்மை தனது 5 குழந்தைகளுடன் சொந்த ஊரான சின்னக் காவனத்திற்குச் வந்து விட்டார். தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகில் இருக்கிறது இந்த கிராமம். சென்னைக்கு சென்று விட்டால் வாழ்க்கை வளப்படும் என ராமலிங்கத்தின் பெரிய அண்ணன் சபாபதி கருதியதால் குடும்பம் ஏழு கிணறு பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இப்படித்தான் இரண்டு வயது சிறுவனாக வீராசாமி தெருவில் உள்ள 31ம் நம்பர் வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தார் ராமலிங்கம். சிறிது காலத்தில் தாயார் சின்னம்மை காலமான பின்னர், சுமார் 33 ஆண்டுகள் அவர் இந்த வீட்டில் தான் தனது அண்ணனோடும், அண்ணியோடும் தங்கி இருந்தார்.
வீராசாமி தெருவில் வள்ளலார் வீடு
ராமலிங்கம் முறையாக பள்ளிக்குப் போகவில்லை. தமிழ் ஆசிரியர் ஒருவரிடமும், பின்னர் சொற்பொழிவாளராக இருந்த அண்ணன் சபாபதியிடமுமே பாடம் பயின்று வந்தார். மற்ற நேரங்களில் அருகில் உள்ள கந்தசாமிக் கோவிலுக்கு சென்று தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். ஒருமுறை அவர் சரியாகப் படிக்கவில்லை என கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் சபாபதி. அப்போதும் ராமலிங்கம் தஞ்சமடைந்த இடம் இந்த கோவில்தான். பின்னாட்களில் வள்ளலாராக உயர்ந்த ராமலிங்க அடிகள் திருவருட்பா பாடியதும் இந்த தலத்தில்தான்.

ராமலிங்கம் திருவொற்றியூர் வடிவுடையம்மன் மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார். ஏழு கிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபட்டு வருவது அவர் வழக்கம். ஒரு முறை நீண்ட நேரம் கோவிலில் மெய்மறந்து இருந்துவிட்டு, இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தார் ராமலிங்கம். கதவு மூடியிருந்ததால் வெளியில் உள்ள திண்ணையிலேயே படுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு அம்பிகையே அண்ணியின் உருவில் வந்து உணவு பரிமாறியதாக கூறப்படுகிறது.

ஒரு நாள் ராமலிங்கம் மாடியறையில் தீவிர முருக வழிபாட்டில் ஈடுபட்டபோது, சுவரிலிருந்த கண்ணாடியில் திருத்தணி முருகன் காட்சியளித்ததாகவும் சொல்லப்படுகிறது. வீராசாமி தெரு வீட்டில் வள்ளலார் வசித்தபோது இப்படி பல அற்புதங்கள் நிகழ்ந்ததாக அவரது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வள்ளலாரின் மாடி அறை

புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே ராமலிங்கத்தை அனுப்பி வைத்தார். அன்றைய தினம் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். பின்னர் அருமையான ஒரு சொற்பொழிவையும் நிகழ்த்தினார். இப்படி வள்ளலாரின் முதல் சொற்பொழிவு அரங்கேறியதும் சென்னையில்தான்.

வள்ளலாரின் பாடல்களை அவரது மாணவர்கள் அருட்பா
என்று அழைத்தனர். அதுவரை தேவார, திருவாசகத்தை மட்டுமே அவ்வாறு அழைத்து வந்தனர். இதனால் ஆறுமுக நாவலர் என்பவர் அருட்பா என்று அழைப்பது தவறென நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் வள்ளலாரே தனக்காக வாதாடினார், வழக்கில் வெற்றியும் பெற்றார்.

இதனிடையே பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் இருபத்தேழாவது வயதில் தனது சகோதரியின் மகளை திருமணம் செய்துகொண்டார். ராமலிங்கம் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன என்று அறிய விரும்பியவர். எனவே, 1858ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை அடைந்தார்.

பின்னர் அவர் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை நிறுவி பசிப் பிணி போக்கியது எல்லாம் வரலாறு. இறுதியில் வள்ளலார், 1874ல் தை மாதம் 19ம் தேதி வடலூருக்கு அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் இருக்கும் சித்திவளாக மாளிகை அறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள். அன்று முதல் வள்ளலார் உருவத்தை துறந்து அருவமாக மாறி விட்டதாக சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் தனது 51 ஆண்டு கால வாழ்வில், பெரும்பகுதியை அவர் சென்னையில்தான் கழித்திருக்கிறார். பாரிமுனை, ஏழு கிணறு, திருவொற்றியூர் என நகரின் பல இடங்களிலும் அந்த வள்ளல் பெருமான் வலம் வந்திருக்கிறார். இறைத் தேடலில் அவருக்கு கிடைத்த பல்வேறு அனுபவங்களை வீராசாமித் தெரு வீடு பார்த்திருக்கிறது. ஆனால் இந்த நினைவுகளை எல்லாம் நெஞ்சில் சுமந்தபடி அந்த வீட்டிற்கு இன்று போனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

சுமார் 187 ஆண்டுகளைக் கடந்த பின்னும், சென்னையின் மத்திய தர குடும்பங்கள் வசிக்கும் ஒரு சாதாரண ஒண்டிக்குடித்தனமாகத் தான் இன்றும் அந்த வீடு இருக்கிறது. தண்ணீர் பிடிப்பது, வேலைக்கு கிளம்புவது என பக்கத்து போர்ஷன்காரர்கள் அன்றாட அலுவல்களில் மும்முரமாக இருக்கிறார்கள். மாடியில் வசித்த மாமனிதரை நினைப்பதெற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த வீடு தற்போது தனியார் வசம் இருந்தாலும், உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மாபெரும் மனிதர் வாழ்ந்த வீடு என்பதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. வள்ளலாரின் நினைவாகத் தான் அந்த பகுதியே இன்று வள்ளலார் நகர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவர் வாழ்ந்த வீட்டை முறையாகப் பராமரிக்கத்தான் ஆள் இல்லை. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வீட்டைப் பார்க்கும்போது நம் மனம் வாடித்தான் போகிறது.

நன்றி - தினத்தந்தி


1 comment:

  1. பல அறிய பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete