என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, February 5, 2012

செயின்ட் தாமஸ் மவுண்ட்

மவுண்ட் ரோடு, சாந்தோம், செயின்ட் தாமஸ் மவுண்ட்.. என மெட்ராசின் பழமையான பல விஷயங்களுக்கு காரணமானவர் புனித தோமையார் என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ். ஏசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித தாமஸ், கிபி 52இல் இந்தியாவின் கேரளப் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அங்கு மதப் பிரசாரத்தில் ஈடுபட்ட தாமஸ், பின்னர் கடல் வழியாக மயிலாப்பூருக்கு வந்தார்.

இங்கும் தீவிர மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே சைதாப்பேட்டை அருகில் இருக்கும் சின்னமலையில் சில காலம் மறைந்து வாழ்ந்தார். அப்போது அருகில் இருக்கும் பெரிய மலை என்று அழைக்கப்பட்ட இன்றைய செயின்ட் தாமஸ் மவுண்ட்டிற்கு சென்று ஜபம் செய்வார். அப்படி ஜபம் செய்து கொண்டிருந்தபோது, கிபி 72இல் எதிரிகளால் பின்னால் இருந்து ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. மலையில் மயில் வேட்டையாடுவதற்காக வந்த ஒருவனின் ஈட்டி பாய்ந்து இறந்தார் என்று மார்க்கோ போலோ தனது இந்தியப் பயணக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.

அப்படி தாமஸ் உயிர்நீத்த இடத்தில் இன்று ஒரு அமைதியான சிறிய தேவாலயம் இருக்கிறது. 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டுபிடித்த பின்னர் நிறைய போர்த்துகீசிய வணிகர்கள் கேரளத்திற்கும், மயிலாப்பூருக்கும் வணிகம் செய்ய வந்து சென்றனர். அப்படி வந்த வணிகர்கள் சிலர், கடல்மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் இருக்கும் இந்த பெரிய மலையில் தேவாலயம் ஒன்றை கட்ட விரும்பினர். அதற்காக அவர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது, புனித தாமஸ் வழிபட்ட கற்சிலுவை இரத்தத் திட்டுகளுடன் கிடைத்ததாக கூறப்படுகிறது (இந்த கற்சிலுவையை தாமஸ் தனது கைகளால் செதுக்கினார்). எனவே தாமஸ் கொலையுண்ட அதே இடத்தில் கிபி 1523ஆம் ஆண்டு ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.

தாமஸ் வழிபட்ட அந்த சிலுவை இன்றும் தேவாலயத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கிறது. இந்த சிலுவையில் இருந்து இரத்தம் வடிந்ததைப் பார்த்ததாக நிறைய தகவல்கள் இருக்கின்றன. கடைசியாக 1704இல் இந்த இரத்த வியர்வை காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அருகில் கிபி 50இல் புனித லூக்காவினால் வரையப்பட்ட அன்னை மரியாளின் ஓவியம் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே மிகப் பழமையான கிறிஸ்தவ ஓவியமாக கருதப்படும் இதை, இந்தியாவிற்கு வரும்போது தாமஸ் தம்முடன் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதைப் பற்றி கேள்விப்பட்ட சந்திரகிரி மன்னன், 1559இல் இந்த ஓவியத்தை தனது மாளிகைக்கு கொண்டு வரச் செய்து பார்த்ததாகவும், பின்னர் அரசு பல்லக்கில் வைத்து இதனை பெரிய மலைக்கே திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பழமையான வண்ண ஓவியங்களும் இந்த தேவாலயத்தை அலங்கரிக்கின்றன. இயேசு நாதர், அவரின் 12 சீடர்கள், புனித பவுல் என மொத்தம் 14 ஓவியங்கள் இருக்கின்றன. இவை 1727இல் வரையப்பட்டவை. அதாவது சுமார் 300 ஆண்டுகள் பழமையானவை.

மேரி மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், 'எதிர்பார்த்த அன்னையின் ஆலயம்' என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றபடி ஏசுவை கருவில் சுமந்தபடி அமர்ந்திருக்கும் மேரி மாதாவின் அழகிய சிற்பம் ஒன்று இங்கிருக்கிறது. இதுதவிர புனித தாமஸின் சிறிய எலும்புத் துண்டும் இங்கு ஒரு சிலுவையில் பதித்து வைக்கப்பட்டிருக்கிறது.

மெட்ராசில் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆர்மீனிய வணிகர்கள் இந்த தேவாலயத்திற்கு நிறைய நன்கொடைகளை அளித்திருக்கின்றனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் பெட்ரூஸ் உஸ்கான். இந்த புனித தேவாலயத்திற்கு சென்னையில் உள்ள அனைவரும் எளிதில் வரவேண்டும் என்பதற்காக, இவர் தனது சொந்த செலவில் அடையாற்றின் குறுக்கே 1726இல் ஒரு பாலத்தை கட்டிக் கொடுத்தார். அதுதான் அடையாறில் இருக்கும் மர்மலாங் பாலம். இதுமட்டுமின்றி மலை மீது ஏறுவதற்கு வசதியாக 135 படிகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

போர்த்துகீசியர்கள் புனித தாமஸின் நினைவாகத்தான் மயிலாப்பூருக்கு அருகில் அமைத்துக் கொண்ட தங்களின் இருப்பிடத்திற்கு சாந்தோம் என்று பெயரிட்டனர். அதாவது புனித தோமா (SAN+THOME) என்று அர்த்தம். ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய பிறகு, செயிண்ட் தாமஸ் மவுண்ட்டிற்கு வந்து வழிபட வசதியாக ஒரு சாலை வேண்டும் என்று நினைத்ததின் விளைவுதான் இன்றைய மவுண்ட் ரோடு.

இப்படி மெட்ராசின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது இந்த மலை. இதன் உச்சியில் இருந்து பரந்து விரிந்திருக்கும் இன்றைய சென்னையைப் பார்க்கும்போது, ஏதோ கால இயந்திரத்தில் அமர்ந்தபடி பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பார்ப்பது போன்றதொரு பரவச அனுபவம் கிடைக்கிறது.


நன்றி - தினத்தந்தி

* போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால், 1986ஆம் ஆண்டு இங்கு வருகை புரிந்திருக்கிறார்.

* 2011ஆம் ஆண்டு இந்த தேவாலயம் தேசியத் திருத்தலமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

* இந்த மலையைச் சுற்றிலும் நிறைய ஐரோப்பியர்கள் வசித்ததால் இதனை உள்ளூர் மக்கள் பரங்கி மலை (பரங்கியர் வசிக்கும் மலை) என்று அழைத்தனர்.

* சென்னை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், இங்கிருந்தபடி விமானங்கள் ஏறுவதையும், இறங்குவதையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

No comments:

Post a Comment