என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, August 12, 2012

ஆளுநர் மாளிகை


மாநகரின் நெரிசல்களில் இருந்து தப்பித்து ஏதாவது காட்டுப் பகுதியில் அமைதியாக ஓய்வெடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் அனேகமாக சென்னைவாசிகள் எல்லோருக்கும் இருக்கும். இந்த கனவை நனவாக்கும் ஒரு காட்டுப் பகுதி சென்னை நகருக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் நாம் அங்கு சென்று ஓய்வெடுக்க முடியாது. அதுதான் கிண்டியில் அமைந்திருக்கும் ராஜ் பவன் எனப்படும் ஆளுநர் மாளிகை.

ராஜ் பவன் தொடங்கி தரமணி வரை நீளும் கிண்டி ரிசர்வ் காடு தான் சென்னை நகரில் இன்று எஞ்சியிருக்கும் ஒரே காட்டுப் பகுதி. நடுவே ஐ.ஐ.டி வளாகம், காந்தி மண்டபம், ராஜாஜி, பக்தவத்சலம், காமராஜ் ஆகியோரின் நினைவு மண்டபங்கள், குழந்தைகள் பூங்கா, பாம்புப் பூங்கா, புற்றுநோய் மையம் ஆகியவை காட்டை சற்றே அழித்துவிட்டபோதும் இன்னும் இது பெரிய காடுதான். சென்னை மாகாண ஆளுநர்கள் இந்த காட்டுக்கு இடம்பெயர்ந்த கதை ரொம்பவே சுவாரஸ்யமானது.
கிண்டி ஆளுநர் மாளிகை
ஆரம்ப நாட்களில் சென்னையின் ஆளுநர் புனித ஜார்ஜ் கோட்டைக்குள்தான் இருந்தார். முதன்முதலாக கோட்டைக்கு வெளியே தனிக்குடித்தனம் போனவர் கவர்னர் ஸ்ட்ரேய்ன்ஷம் மாஸ்டர். கோட்டைக்குள் கூட்டம் அதிகமாகிவிட்டதால், இன்று சட்டக்கல்லூரி இருக்கும் இடத்தில் ஒரு தோட்ட வீட்டிற்கு அவர் இடம்பெயர்ந்தார். பின்னர் இந்த பகுதியில் கருப்பர் நகரம் வேகமாக வளர்ந்ததால், 1680களில் அவர் கூவம் நதிக்கரையில் உள்ள ஒரு தோட்ட வீட்டிற்கு மாறியதாக கூறப்படுகிறது. ஆனால் இவரைத் தொடர்ந்து வந்த ஆளுநர்கள் இந்த வீட்டை அதிகமாக பயன்படுத்தவில்லை.

இதனிடையே 1746இல் சென்னையை முற்றுகையிட்ட பிரெஞ்சுப் படைகள், இந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டன. சென்னை மீண்டும் பிரிட்டீஷார் வசம் வந்ததும், ஆளுநருக்கு வீடு தேடும் படலம் தொடங்கியது. அப்போதுதான் இன்று புதிய தலைமைச் செயலகம் இருக்கும் அரசினர் தோட்டத்தில் அன்று இருந்த ஒரு சிதிலமடைந்த வீடு விலைக்கு வாங்கப்பட்டது. அண்டோனியோ தி மதீராஸ் என்ற செல்வச் சீமாட்டிக்கு இந்த இடம் சொந்தமானதாக இருந்தது. கஷ்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்கே நிதி உதவி செய்தவர் இந்த மதீராஸ். இவரது குடும்பத்தின் நினைவாகத்தான் சென்னைக்கு மதராஸ் என்ற பெயர் வந்தது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

1753இல் அப்போதைய ஆளுநர் தாமஸ் சாண்ட்ரிஸ் இந்த வீட்டை வெறும் ரூ.75,000க்கு வாங்கினார். பின்னர் காலப்போக்கில் கர்நாடக நவாப்பின் பண்ணையின் சில பகுதிகள் இணைக்கப்பட்டு இந்த இடம் மெல்ல விஸ்தரிக்கப்பட்டது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அன்றைய அரசு அதிகாரிகள் கவர்னருக்காக நகருக்கு வெளியே ஒரு பரந்து விரிந்த தோட்ட வீடு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர். அப்போது அவர்கள் கண்ணில்பட்டதுதான் கிண்டி லாட்ஜ்.
கிண்டி லாட்ஜ்
இன்றைய ராஜ் பவன் 1670களில் கிண்டி லாட்ஜ் என்று அழைக்கப்பட்டது. புனித தோமையார் மலைக்கு இந்த வழியாக சென்ற கவர்னர் வில்லியம் லாங்ஹார்ன் கிண்டி காட்டுப் பகுதியின் அழகில் மனதைப் பறிகொடுத்ததால் இங்கு ஒரு வீடு கட்டி, அதனைச் சுற்றி தோட்டம் அமைத்தார். வார இறுதி நாட்களில் இங்கு தங்கி ஓய்வெடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் 1678இல் ஒரேயடியாக இங்கிலாந்துக்கு புறப்பட்ட கவர்னர், சின்ன வெங்கடாத்ரிக்கு இந்த வீட்டை விற்றுவிட்டார். ஆங்கிலேயர்களுக்கு மெட்ராஸ் என்ற நிலப்பகுதியை பெற்றுத் தந்த பேரி திம்மப்பாவின் இளைய சகோதரர்தான் இந்த சின்ன வெங்கடாத்ரி.

ஆனால் சின்ன வெங்கடாத்ரிக்கும் இந்த வீட்டிற்கும் ராசியில்லை. கிழக்கிந்திய கம்பெனியோடு சில பிரச்னைகள் வந்தபோது, கம்பெனியை சரி கட்டுவதற்காக இந்த வீட்டை அடிமாட்டு விலைக்கு கொடுத்துவிட்டார். பின்னர் சில பல கைகள் மாறி கடைசியில் அரசு வங்கியிடம் அடமானத்திற்கு வந்தது இந்த வீடு. 1821இல் இந்த வீட்டையும், இதற்கு அருகில் ஷாமியர் என்ற ஆர்மீனியரின் சொத்தையும் அரசாங்கம் வாங்கிக் கொண்டது. அப்போது ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்றோ, இடையூறு இல்லாமல் பொதுவிஷயங்களை கவனிக்க ஒரு இடம் தேவை என்று விரும்பியதால், இந்த வீடு வாங்கப்பட்டது.

தாமஸ் மன்றோ இங்கிருந்தபடி தனது அலுவல்களைப் பார்த்தார். இப்படித்தான் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்ற கவுரவம் கிண்டி லாட்ஜிற்கு கிடைத்தது. இவருக்கு கோட்டைக்குள்ளேயும் ஒரு வீடு இருந்தது. பின்னர் ராஜ் பவன் மெல்ல விஸ்தரிக்கப்பட்டது. 1837இல் ஆளுநராக பொறுப்பேற்ற லார்ட் எல்ஃபின்ஸ்டன்தான் ராஜ்பவனை இன்றைய நிலைக்கு கொண்டு வந்தவர். இந்த வீட்டிற்கும் மவுண்ட் ரோட்டுக்கும் இடையில் சைதாப்பேட்டை வழியாக சாலை அமைத்தவர் இவர்தான். அடுத்தடுத்து வந்த ஆளுநர்களும் தங்கள் பங்கிற்கு ஆளுநர் மாளிகையை மெருகேற்றினர். ஆனாலும் இது கோட்டையில் இருந்து அதிக தூரத்தில் இருந்ததால், மவுண்ட் ரோடு அரசினர் இல்லம்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் வரை கவர்னரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது.

ஆனால் சுதந்திர இந்தியாவில் தமிழக ஆளுநர்கள் இங்குதான் வசித்து வருகின்றனர். எனவே இன்றும் அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது இந்த ஆங்கிலேயக் கட்டிடம். மொத்தத்தில் காலச்சக்கரத்தில் 300 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும், இந்த ஆளுநர் மாளிகையின் ஒவ்வொரு கல்லும் ஏராளமான கதைகளால் நிறைந்து கிடக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* அரிய வகை மான்கள், விதவிதமான பறவைகள் ஆகியவற்றை இங்கு தாராளமாகப் பார்க்கலாம்.

* கோடை காலத்தில் மெட்ராஸ் கவர்னர்கள் ஊட்டிக்கு மலை ஏறியதால், அங்கும் ஒரு ராஜ் பவன் கட்டப்பட்டது.

1 comment:

  1. விளக்கமான பகிர்வு...

    பதிவாகத் தந்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete