என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, July 7, 2012

இரட்டைக் கோவில்கள்


சென்னையில் பட்டணம் பெருமாள் கோவில் எங்கிருக்கிறது என்று விசாரித்தால், நிச்சயம் உங்களை ஏற இறங்கப் பார்ப்பார்கள். ஆனால் ஒரு காலத்தில் இந்த நகரின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்திருக்கிறது இந்தக் கோவில். அவ்வளவு ஏன், மெட்ராசிற்கு சென்னை என்ற பெயர் வரக் காரணமே இந்த கோவில்தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

மெட்ராஸ் என்ற மணல்வெளியில் கிழக்கிந்திய கம்பெனியார் குடியேறுவதற்கு முன்பிருந்தே திருவொற்றியூர், மயிலாப்பூர் போன்ற இடங்களில் புராதன கோவில்கள் இருந்தன. ஆனால் இவை எல்லாம் அப்போது மெட்ராஸ் என்ற எல்லைக்குள் வரவில்லை. அந்த வகையில் மெட்ராஸ் நகருக்குள் கட்டப்பட்ட முதல் பெரிய கோவில் சென்ன கேசவப் பெருமாள் கோவில்தான்.

ஃபிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் சந்திரகிரி மன்னரிடம் இருந்து இந்த பகுதியை 1639இல் குடிக்கூலிக்கு பெற உதவியாக இருந்த திம்மண்ணா என்ற வணிகர்தான் இந்த கோவிலைக் கட்டியவர். 1640களில் தாம் கட்டிய இந்த கோவிலை, ஏப்ரல் 24, 1648இல் நாராயணய்யர் என்பவருக்கு திம்மண்ணா தானமாக அளித்ததற்கான ஆவணங்கள் இருக்கின்றன. இந்த கோவில் அப்போது கோட்டைக்கு வெளியே தற்போது உயர்நீதிமன்ற கட்டடம் இருக்கும் இடத்தில் இருந்தது. சென்னையின் பூர்வகுடிகள் வசித்த அந்த பகுதி முழுவதும் கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்டது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கிருந்தபடி சென்னைவாசிகளுக்கு அருள் பாலித்த சென்ன கேசவப் பெருமாளுக்கு 1757இல் ஆபத்து வந்தது. அடிக்கடி கோட்டையைத் தாக்கும் பிரெஞ்சுப் படைகளை சமாளிப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு யோசனை தான் இந்த ஆபத்தை வரவைத்தது. கோட்டையைச் சுற்றி இருக்கும் அனைத்து கட்டடங்களையும் இடித்து தரைமட்டமாக்கிவிட்டால் எதிரிப் படைகள் தூரத்தில் வரும் போதே உஷாராகிவிடலாம் என்பதுதான் அந்த யோசனை.

இதன்படி கோட்டைக்கு வெளியில் இருந்த கருப்பர்நகரக் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சென்ன கேசவப் பெருமாளும் இதற்கு விதிவிலக்கல்ல என்று சொல்லிவிட்டது கிழக்கிந்திய கம்பெனி. ஒரு வழியாக கோவிலை இடித்து விட்டார்களே தவிர அதனால் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பை கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே தற்போதைய பூக்கடை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட கருப்பர் நகரத்தில் சென்ன கேசவப் பெருமாளுக்கு கோவில் கட்டித் தருவது என முடிவு செய்யப்பட்டது.

லார்ட் பிகட்டுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த மணலி முத்துகிருஷ்ண முதலியார், இன்றைய பூக்கடை பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை இதற்காக தானமாகக் கொடுத்தார். மேலும் சில இடங்களை அதற்குரிய மாற்று இடங்களைக் கொடுத்து உரியவர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி பெற்றுத் தந்தது. இவ்வாறு சென்ன கேசவப் பெருமாள் கோவிலுக்காக சுமார் 24,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இதுதவிர 1173 பகோடாக்களையும் (அன்றைய பணம்) கம்பெனி தானமாக வழங்கியது. மணலி முத்துகிருஷ்ண முதலியார் தமது பங்காக 5000 பகோடாக்களை அளித்ததோடு உள்ளூர்வாசிகளிடம் இருந்து நன்கொடையும் வசூலித்து மொத்தம் 15,000 பகோடாக்களை சேகரித்தார். இந்த பணத்தைக் கொண்டு 1762இல் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

இந்த இடத்தில்தான் கதையில் ஒரு திருப்பம். சென்ன கேசவப் பெருமாளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கூடவே சென்ன மல்லீஸ்வரருக்கும் ஒரு கோவில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. ஆக இரண்டு கோவில்களைக் கட்டும் பணி களைகட்டியது. ஆனால் பல காரணங்களால் இந்த பணிகள் தாமதமாகி 1780 வரை நடைபெற்றன. கிழக்கிந்திய கம்பெனியார் உதவியால் கட்டப்பட்ட இந்த கோவில், கம்பெனி கோவில் என்றும் சில காலம் அழைக்கப்பட்டு வந்தது.

உயர்நீதிமன்றம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த மூலவர் தான் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஹைதர் அலியின் படை எடுப்பின்போது, பழைய கோவிலில் இருந்த மூலவரை காப்பாற்றுவதற்காக அதனை கோவில் குருக்கள், திருநீர் மலைக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் மணலி முத்துகிருஷ்ண முதலி ஈடுபட்டாலும், அவருக்கு அது கிடைக்கவில்லை. எனவே திருநீர்மலைக் கோவிலில் இருந்து ஒரு சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததாக நரசய்யா தனது மதராசப்பட்டினம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்றில் இருந்து இன்று வரை மணலி முத்துகிருஷ்ண முதலியின் குடும்பத்தினர்தான் இந்த கோவிலை நிர்வகித்து வருகின்றனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மணலி கிருஷ்ணசாமி முதலியார், சரவண முதலியார் உள்ளிட்டவர்களின் கருங்கல் சிலைகள் இந்த கோவில் தூண்களில் நம்மை வரவேற்கின்றன.

ஒரு காலத்தில் ஜூன் மாதம் நடைபெறும் பெரியாழ்வார் திருவிழாவின் போது, நாகஸ்வர கலைஞர் ஒருவரை இங்கு வரவழைத்து 10 நாட்கள் இசைக் கச்சேரி வெகு விமர்சையாக நடத்தப்பட்டிருக்கிறது. 1917ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியாழ்வார் திருவிழாவில் பிரபல நாகஸ்வர கலைஞர் டி.என். ராஜரத்தினம் பிள்ளை இந்த கோவிலில் இசைக் கச்சேரி செய்திருக்கிறார். கோவிலுக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் தெருவில் நின்றபடி ஏராளமானோர் இந்த மயக்கும் இசையை ரசித்திருக்கிறார்கள்.

இப்படி நாகஸ்வரங்களை ரசித்துக் கொண்டிருந்த சென்ன கேசவப் பெருமாளும், சென்ன மல்லீஸ்வரரும் இப்போது தேவராஜ முதலி தெருவிலும், நைனியப்பன் தெருவிலும் விரைந்து கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்ஷாக்களின் மணி ஓசையை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி - தினத்தந்தி

* தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோவிலில் இருந்து என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சென்ன மல்லீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது.
* 1710இல் தயாரிக்கப்பட்ட மெட்ராஸ் வரைபடத்தில் இந்த கோவில், பெரிய கோவில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
* சென்ன கேசவப் பெருமாள் இருப்பதால் தான் இந்த ஊருக்கு சென்னை என்று பெயர் வந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

No comments:

Post a Comment