என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, April 22, 2012

சென்னை பொது தபால் நிலையம் (ஜி.பி.ஓ)

இன்று உறவுப் பாலங்களுக்கு உரம் சேர்க்க இ-மெயில், எஸ்.எம்.எஸ், சாட்டிங் என தொழில்நுட்பம் நிறைய வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் இல்லாத காலத்தில் தபால்கள் மட்டுமே உறவுகளையும், உணர்வுகளையும் சுமந்தபடி தூது சென்று கொண்டிருந்தன. அந்த தபால்கள் மெட்ராஸ் மாநகரில் முதன்முதலில் எப்படி முளைத்து பின் விஸ்வரூபம் எடுத்தன என்பது ஒரு சுவாரஸ்யமான கதை.

1639ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியார் மெட்ராசில் கோட்டை கட்டி குடியேறிவிட்டாலும், ஆரம்ப காலத்தில் அவர்களிடம் சரியான தபால் முறைகள் எதுவும் இல்லை. 1736ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதிதான் இதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. மெட்ராஸ் ராஜ்தானியில் இருந்து பிற இடங்களுக்கு அனுப்பப்படும் பல கடிதங்கள் அல்லது பார்சல்கள் உரியவர்களை சென்று சேராததை அடுத்து, இது குறித்து விவாதிப்பதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதனை மெட்ராஸ் ராஜ்தானிக்கு உட்பட்ட அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன்படி அன்று முதல் அனுப்பப்படும் கடிதங்கள் அல்லது பார்சல்களின் மீது எண்களை குறிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அந்த பார்சல் ஒரு இடத்தை அடைந்ததும், அங்கிருந்து அடுத்த இடத்திற்கு அது பட்டுவாடா செய்யப்படும் தேதி, நேரம் ஆகியவை பார்சலின் மீதுள்ள வில்லையில் குறிக்கப்பட்டு பின்னரே அனுப்பப்படும். அங்கும் இதே முறை கடைபிடிக்கப்படும். இப்படி பல இடங்கள் மாறி உரிய இடத்தை அடையும்போது, அந்த பார்சல் எங்கெங்கிருந்து எப்போது புறப்பட்டு வந்திருக்கிறது என்ற தகவலை அறிந்துகொள்ள முடியும். கடைசியாக பார்சலைப் பெற்றவர் அதற்கு முன் அது எங்கிருந்து வந்ததோ அந்த அதிகாரியிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதன்மூலம் காலதாமதம் ஏற்பட்டாலோ, பார்சல் வராவிட்டாலோ, எந்த இடத்தில் பிரச்னை என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சுமார் 40 ஆண்டு காலம் இதே முறைதான் பின்பற்றப்பட்டது.

1774இல்தான் முதன்முறையாக தனியார் கடிதங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரு கடிதம் எத்தனை மைல்கள் பயணப்படுகிறது என்பதை வைத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக இப்போது நாம் ஸ்டாம்ப் பயன்படுத்துவது போல, அந்த காலத்தில் செப்பு வில்லைகளை கடிதத்தின் மீது ஒட்டி அனுப்புவார்கள்.

1785ஆம் ஆண்டு தபால் அலுவலகத்திற்கான விதிமுறைகள் திருத்தப்பட்டன. அடுத்த ஆண்டு மெட்ராசில் இருந்து பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களுக்கு கடிதங்களை கொண்டு செல்லும் மெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் இந்த சேவை கிடைக்கும். இதேஆண்டில்தான் மெட்ராஸ் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் தொடங்கப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநரின் உதவியாளரான கேம்ப்பெல் என்பவர் முதல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

இவருக்கு கீழ் ஒரு துணை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலும், ஒரு கிளார்க்கும், தபால்களை பிரிப்பதற்கு 5 பேரும், ஒரு தலைமை பியூனும், பத்து தபால்காரர்களும் இருந்தனர். இவர்கள்தான் அன்று மெட்ராஸூக்கு வந்த அனைத்து கடிதங்களையும் கையாண்டனர். தலைமைத் தபால் நிலையம் முதலில் கோட்டைக்குள் செயல்பட்டு பின்னர் பிராட்வே போய் இறுதியாக தற்போதைய இடத்தை வந்தடைந்தது.

மெட்ராசில் கடிதப் போக்குவரத்து அதிகரித்ததை அடுத்து தபால் நிலையத்திற்கென தனியாக ஒரு பெரிய கட்டடம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்காக இந்திய அரசும், மெட்ராஸ் அரசும் இணைந்து ரூ.2 லட்சம் ஒதுக்கின. பம்பாய் மற்றும் கல்கத்தாவில் தலைமை தபால் நிலையங்கள் கட்ட பணம் கொடுத்துவிட்டதால் அதற்கு மேல் ஒதுக்க நிதி இல்லை என இந்திய அரசு தெரிவித்துவிட்டது. எனவே 1873ஆம் ஆண்டே தபால் நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்துவிட்டபோதிலும், பணம் இல்லாததால் 1880 வரை பணிகள் சூடுபிடிக்கவில்லை.

பின்னர் 1884இல் ஒருவழியாக கடற்கரைச் சாலையில் மொத்தம் ரூ.6,80,000 செலவில் பிரம்மாண்டமான மூன்று மாடிக் கட்டடம் கட்டப்பட்டது. மெட்ராஸ் வர்த்தக சபை இதில் கணிசமான தொகையை வழங்கியது. 352 அடி நீளமும், 162 அடி அகலமும், 125 அடி உயர இரட்டை கோபுரங்களையும் கொண்ட இந்த அழகிய கட்டடத்தை அப்போதைய அரசின் மூத்த கட்டட ஆலோசகரான ராபர்ட் சிஸ்ஹோம் வடிவமைத்துக் கொடுத்தார். அன்று முதல் இன்று வரை மெட்ராஸ் மாநகரின் மிக அழகிய கட்டடங்களில் ஒன்றாக இந்த இந்தோ-சராசனிக் பாணி கட்டடம் திகழ்ந்து வருகிறது.

இதனிடையே 1853ஆம் ஆண்டு மெட்ராசில் இருந்து ரயில் மூலம் கடிதங்களை அனுப்பும் முறை தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டுதான் முதன்முதலில் மெட்ராசில் தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டது. 1864ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநகரில் மொத்தம் 9 தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. 1870-1880 காலகட்டத்தில் பல புதிய விஷயங்கள் தபால் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அலுவலக கடிதங்களுக்கு அதிக கட்டணம், வி.பி.தபால்கள், மணியார்டர் போன்றவை நடைமுறைக்கு வந்தன.

1872இல் கப்பல் மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை மெட்ராசில் இருந்து பர்மாவின் ரங்கூன் நகருக்கு கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன. 1886இல் மெட்ராசில் இருந்து இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு இதேபோன்ற சேவை தொடங்கியது.

1915ஆம் ஆண்டு வரை, மெட்ராஸ் மாநகரில் குதிரை வண்டிகள் மூலம் தான் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்பட்டன. பின்னர் சோதனை முறையில் இரண்டு மோட்டார் வாகனங்கள் தபால் துறைக்கு வழங்கப்பட்டன. அவை அதிக பயன் அளித்ததால், 1918ஆம் ஆண்டு குதிரைகளின் இடத்தை மோட்டார் வாகனங்கள் முழுமையாக பிடித்துக் கொண்டன.

பின்னர் வேகமெடுத்த தபால் துறை பல்வேறு சேவைகள் மூலம் மெட்ராஸ்வாசிகளின் வாழ்வின் பிரிக்க முடியாததொரு அங்கமாகிப் போனது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தபால் நிலையங்களின் அவசியம் தற்போது குறைந்துவிட்டாலும், உறவுகளிடம் இருந்து வந்த கடிதங்களை ஆர்வமுடன் பிரித்து படித்த, அந்த பழைய நினைவுகள் மட்டும் அப்படியே நெஞ்சில் நிழலாடுகிறது.

நன்றி - தினத்தந்தி

* 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் கட்டடத்தின் ஒரு பகுதியை தீ தின்றதால், இது மீண்டும் புனரமைக்கப்பட்டது.
* 2011ஆம் ஆண்டு பெருமழை காரணமாக இந்த கட்டடத்தின் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்தது.
* 1852இல் தான் ஆசியாவிலேயே முதன்முறையாக தற்போதைய பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் ஸ்டாம்ப் அறிமுகமானது
* தற்போது இந்தியாவில் மொத்தம் 1,55,333 தபால் நிலையங்கள் இருக்கின்றன.

No comments:

Post a Comment