என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, August 20, 2011

புனித ஜார்ஜ் கோட்டை

சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்பவற்றில் முதன்மையானது புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George). இந்த கோட்டைதான் இன்றைய சென்னை மாநகரம் உருவாகவே காரணமாக இருந்தது. ஆம், இந்தியாவில் பிரிட்டீஷார் கட்டிய முதலாவது கோட்டை இதுதான். 1600ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனி சூரத்தில் அனுமதி பெற்று தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. வங்கக் கடலில் தனது வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் தங்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அருகில் ஒரு துறைமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என கிழக்கிந்தியக் கம்பெனியினர் கருதினர்.

அதற்காக நிலம் தேடும் பணி கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்ட் பிரான்சிஸ் டே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து, ஒரு பொட்டல்வெளியை விலைக்கு வாங்கினார். அங்கு போர்ட் ஹவுஸ் என்ற சிறிய கட்டிடத்தை கட்டினார். இதனைத் தொடர்ந்து ஒரு துறைமுகமும், கோட்டையும் கட்டப்பட்டன. இந்த கோட்டை 1640ம் ஆண்டு, ஏப்ரல் 23ந் தேதி கட்டி முடிக்கப்பட்டது. அது புனித ஜார்ஜ் நினைவு தினம் என்பதால் அந்த கோட்டைக்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிட்டனர். அந்த கோட்டைதான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

1678ல் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் மிகத்தொன்மையான புனித மேரி ஆலயம் கட்டப்பட்டது. அந்தப் பேராலயத்தில்தான் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு வித்திட்ட இராபர்ட் கிளைவின் திருமணம் 1753ல் நடைபெற்றது. 1670களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மெட்ராஸ் கவர்னராக இருந்தார். அவர் கோல்கொன்டா சுல்தானிடமிருந்து, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை,எழும்பூர் போன்ற கிராமங்களை விலைக்கு வாங்கி பிரிட்டிஷ் பகுதியின் எல்லையை விரிவுபடுத்தினார்.

பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஒரு பள்ளிக்கு தனது சொத்தில் ஒரு பகுதியை தானமாக அளித்தார். அதுதான் வளர்ந்து இன்று புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. அந்த பிரபல யேலின் திருமணமும் இந்த தேவாலயத்தில்தான் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆங்கிலேயர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை மிகவும் முக்கியமானதாக கருதியதால், இதனைப் பாதுகாக்க சுற்றிலும் சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பினர். 1695ஆம் ஆண்டு பிரான்சிஸ் டே கட்டிய போர்ட் ஹவுஸ் கட்டிடம் இடிக்கப்பட்டு, தற்போது தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் வளாகத்தின் நடுவே அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்பட்டு, அதில் ஆங்கிலேய ஆளுநர் இல்லமும், அலுவலகமும் அமைக்கப்பட்டது. அங்கு ஆங்கிலேய வணிகர்கள் வீடுகளை கட்டிக் கொண்டு குடியேறினர். செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் வெள்ளையர் நகரம் என்றும், வெளிப்புறப் பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான கலைஞர்களும், நெசவாளர்களும் வாழ்ந்த பகுதி கருப்பர் நகரம் என்றும் இரு நகரங்கள் உருவாகின. கருப்பர் நகரம்தான் பின்னர் ஜார்ஜ் டவுன் ஆனது.

1700 முதல் 1774 வரை புனித ஜார்ஜ் கோட்டைதான் ஆங்கிலேயர்களுக்கு தலைமையிடமாகத் திகழ்ந்தது. அதன்பிறகுதான் கல்கத்தா தலைமையிடமாக மாறியது. ஆங்கில பேரரசை தொடங்கி வைத்த ராபர்ட் கிளைவுடன் பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் போரிட்டு 1746இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றினர். கோட்டை பலவீனமாக இருந்ததால் எளிதில் பிரெஞ்சு படைகளிடம் வீழ்ந்துவிட்டது. அப்போது சிறைபிடிக்கப்பட்ட ராபர்ட் கிளைவ் சாதுர்யமாகத் தப்பி கடலூரில் உள்ள டேவிட் கோட்டைக்கு சென்றுவிட்டார். இது அக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

1749இல் பிரெஞ்சுகாரர்களிடம் இருந்து ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் மீண்டும் கைப்பற்றினர். இதனையடுத்து ராபர்ட் கிளைவ் மீண்டும் சென்னை திரும்பி கோட்டை பொறுப்பாளர் ஆனார். உடனடியாக கோட்டையை பலப்படுத்தும் பணி தொடங்கியது. கோட்டையைச் சுற்றி அகழி ஏற்படுத்தி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வடக்கே ஓடிக் கொண்டிருந்த எழும்பூர் ஆற்றின் பாதையை மாற்றி அதனை ஒரு அகழியாக்க முயற்சி மேற்கொண்டனர்.

1758-59இல் பிரெஞ்சுக்காரரான லாலி என்பவரால் கோட்டை மீண்டும் முற்றுகையிடப்பட்டது. இதனையடுத்து, 1783 வரை கோட்டையை புனரமைத்து, பலப்படுத்தும் பணி தொடர்ந்தது. கருப்பர் நகரப் பகுதி முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டு, பீரங்கிகள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் விரிவுபடுத்தப்பட்ட கோட்டையின் வடிவத்தில் பெரும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. 107.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் வெல்லஸ்லி இல்லம், கிளைவ் இல்லம், டவுன் ஹால், ஆங்கிலேயப் படைகள் தங்கிய பாரக்ஸ் கட்டிடம் ஆகியவை தற்போதும் உள்ளன.

இந்தக் கோட்டைதான் தமிழக சட்டசபையாக இத்தனை ஆண்டுகள் ஓய்வின்றி (திமுக அரசு இதற்கு சற்று ஓய்வு கொடுக்க முயற்சித்தது) பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் முதல் சட்டசபை 1921ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று பெயர். இந்த சட்டமன்றம் முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில், 1921ஆம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி கூடியது. கன்னாட் கோமகன் இதை தொடங்கி வைத்தார்.

முதல் உலகப் போரிலும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு பங்கு இருக்கிறது. 1914ஆம் ஆண்டு, செப்டம்பர் 22ந் தேதி இரவு 9.30 மணியளவில் ஜெர்மானிய கடற்படையைச் சேர்ந்த 'எம்டன்' கம்பல் மெட்ராஸ் நகரம் மீது பீரங்கிக் குண்டுகளை வீசியது. எம்டனிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதிமன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன.

கோட்டையைப் போன்றே அதில் கம்பீரமாக வானுயரக் காட்சியளிக்கும் கொடி மரமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. புனித ஜார்ஜ் கோட்டையின் முகப்பில் தேக்கு மரத்தினாலான கொடிக் கம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனி கொடி பறந்து கொண்டிருந்தது. அதில் கவர்னர் யேல் காலத்தில் பிரிட்டிஷ் அரசின் கொடி பறக்கவிடப்பட்டது. கடற்கரையில் தரைதட்டி உடைந்த லாயல் அட்வெஞ்சர் என்ற கப்பலில் இருந்த தேக்கு மரத்தாலான கம்பம் எடுக்கப்பட்டு கோட்டை கொத்தளத்தில் நிறுவப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட இந்தக் கொடிக் கம்பம்தான், இந்தியாவிலேயே உயரமானதாகும். இந்திய சுதந்திரத்தின் போது, இதில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. தேக்கு மரத்திலான இந்தக் கொடிக் கம்பம் பழுதடைந்ததால், 1994ஆம் ஆண்டு இரும்பு கம்பம் நிறுவப்பட்டது.

கடற்கரையோரம் பெரிய மதிற்சுவர் போலத் தோன்றும் இந்தக் கோட்டைக்குள் ஆயிரம் அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. தமிழக சட்டமன்றம், தலைமைச் செயலகம், ராணுவம் மற்றும் தொல்லியல் துறை அலுவலகங்கள் இங்கு இயங்கி வருகின்றன. இங்கு ஓர் அருங்காட்சியகமும் இருக்கிறது. ஐரோப்பிய பாணியிலான பழம்பெரும் ஓவியங்கள் இங்குள்ளன.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததும் ஆங்கிலேயர்கள் கப்பலேறிப் போய்விட்டார்கள். ஆனால் வங்கக் கடலை வெறித்தபடி தனது 370 ஆண்டு கால நினைவுகளை சுமந்துகொண்டு இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது புனித ஜார்ஜ் கோட்டை.

நன்றி: தினத்தந்தி

2 comments: