என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, November 28, 2010

தங்கத் தேரை

அமெரிக்க கண்டத்தில் உள்ள கோஸ்டா ரிக்கா நாட்டு காடுகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தத்தித் தத்தி ஓடிக் கொண்டிருந்த அழகான குட்டியூண்டு தேரைதான் Golden Toad எனப்படும் தங்கத் தேரை. பார்ப்பதற்கு கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு வண்ணத்தில் பளபளவென மின்னியதால் இதற்கு இந்தப் பெயரை வைத்துவிட்டார்கள். இதில் கூட ஆண் தேரைதான் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். பெண் தேரை மஞ்சள் நிறத்தில் கருப்பு புள்ளிகளுடன் காட்சியளிக்கும்.

கோஸ்டா ரிக்கா நாட்டின் மாண்ட்வர்டி (Monteverde) நகரின் மேல் அமைந்திருந்த காடுகளில், இந்த வகை தேரைகள் அதிகளவில் வாழ்ந்து வந்தன. 1966ஆம் ஆண்டு ஜா சாவேஜ் (Jay Savage) என்ற ஆய்வாளர்தான் இப்படி ஒரு அழகிய உயிரினம் காட்டுக்குள் தாவிக் கொண்டிருப்பதை உலகிற்கு அறிவித்தார். முதல்முறை இவற்றைப் பார்த்த ஜா சாவேஜ் தன் கண்களையே நம்பவில்லை. சில தேரைகளைப் பிடித்து யாரோ எனாமல் பெயிண்டில் முக்கி எடுத்து வெளியில் விட்டிருக்கிறார்களோ என்று சந்தேகப்பட்டதாக அவரே தனது குறிப்பில் கூறியிருக்கிறார். திடீரென பார்க்கும்போது காட்டில் சிதறிக் கிடக்கும் தங்க நகைகள் போல் அவை காட்சியளித்ததாக மார்த்தா கிரம்ப் என்ற ஆய்வாளர் தனது புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார்.

இந்த வகை தேரைகள் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும். ஆண் தேரை 5 சென்டிமீட்டர் நீளம்தான் இருக்கும். பெண் தேரை அதைவிட சற்று கூடுதல் நீளமாக இருக்கும், அவ்வளவுதான். இவை அதிகம் வெளியில் தலைகாட்டாது. நிழல் உலக தாதாக்கள் போல இவை பெரும்பாலும் அண்டர்கிரவுண்டில் தான் இருக்கும். இனப் பெருக்கத்திற்காக ஆண்டில் சில வாரங்கள் மட்டுமே வெளியில் வரும்.

கோஸ்டா ரிக்கா காடுகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மழை பெய்யும். இந்த காலகட்டத்தில் ஆண் தேரைகள் கூட்டம் கூட்டமாக வெளியில் வந்து பெண் தேரைகளுக்காக காத்திருக்கும். இனப்பெருக்கம் முடிந்ததும், மழையால் தேங்கியிருக்கும் குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் முட்டையிட்டுவிட்டு அவை மீண்டும் பாதாள லோகத்திற்கு திரும்பிவிடும். இரண்டு மாதங்கள் கழித்து இந்த முட்டைகளில் இருந்து குட்டிக் குட்டி தங்கக் கட்டிகள் எட்டிப் பார்க்கும்.

1989ஆம் ஆண்டில் இருந்து இவற்றில் ஒரு தேரை கூட யார் கண்ணிலும் படவில்லை. எனவே இவற்றை அழிந்துபோன உயிரினம் என சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துவிட்டது. இவற்றின் அழிவிற்கு யார் காரணம் தெரியுமா? நாம் தான். நாம் பூமியை வெப்பமடைய வைத்ததுதான் இந்த குட்டி ஜீவன்களை சாகடித்துவிட்டது.

1987ஆம் ஆண்டு கோஸ்டா ரிக்கா காடுகளில் கடுமையான வெப்பம் நிலவியது. போதுமான மழை இல்லாததால் காடு காய்ந்து நீர்நிலைகள் எல்லாம் வற்றிவிட்டன. தண்ணீர் இல்லாததால் அவற்றால் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முடியவில்லை. அப்போது தொடங்கிய அதன் அழிவுக் காலம், இரண்டு ஆண்டுகளில் வேகமெடுத்து 1989ஆம் ஆண்டு தங்கத் தேரைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

பூமிக்கு அடியில் ஒன்றிரண்டு தேரைகளாவது இருக்காதா என்ற எதிர்பார்ப்பில் இன்றும் கோஸ்டா ரிக்கா காடுகளில் ஆய்வாளர்கள் அந்த தங்கப் புதையலைத் தேடி வருகிறார்கள். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

2 comments:

  1. //பூமிக்கு அடியில் ஒன்றிரண்டு தேரைகளாவது இருக்காதா என்ற எதிர்பார்ப்பில் இன்றும் கோஸ்டா ரிக்கா காடுகளில் ஆய்வாளர்கள் அந்த தங்கப் புதையலைத் தேடி வருகிறார்கள். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?//

    கொடுமையான விஷயம்தான் சார். என்ன செய்வது, நம்முடைய பழக்கமே அதுதானே?

    ReplyDelete
  2. அது எப்படி கருத்து என்ற பெயரில் உங்களால் மட்டும் கவிதை எழுத முடிகிறது? கவிதை... கவிதை...

    ReplyDelete