தருமமிகு சென்னையாக இருந்து தற்போது சிங்காரச் சென்னையாக மாற முயற்சித்து வரும் இந்த மாநகரின் பெயர், பல நூற்றாண்டுகளாக மெட்ராஸ்தான். இதனை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதராஸ், மதரேஸ்படான், மதராஸாபடான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ், மதிராஸ் என ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள். இந்த மெட்ராஸ் அல்லது மதராஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன.
1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்ட் சோழமண்டலக் கடற்கரையில் ஒரு துண்டு பொட்டல் நிலத்தை வாங்கினார். ஓராண்டுக்கு பின்னர் பிரிட்டீஷார் அந்த இடத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். கோட்டையை சுற்றி மெல்ல வளர்ந்து விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம். இதுதான் சென்னையின் 'சுருக்' வரலாறு.
பிரான்சிஸ் டே வாங்கிய நிலம், சில மீனவக் குடும்பங்களும், இரு பிரெஞ்சு பாதிரியார்களும் வசித்த சிறிய கிராமத்திற்கு தெற்கே இருந்தது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்றும், எனவே அந்த கிராமம் மாதராஸ்பட்னம் என்றும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலையாரியின் வாழைத் தோட்டத்தை, தொழிற்சாலை அமைப்பதற்காக டே வாங்கினார். நிலத்தை கொடுக்க அவர் முரண்டு பிடித்ததால், அங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு மாதராஸன்பட்னம் எனப் பெயரிடுவதாக வாக்களித்து, டே நிலத்தை வாங்கினாராம்.
மதராஸ் என பெயர் வந்ததற்கு வேறு ஒரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் வசித்து வந்தனர். இங்கு பிரான்சிஸ் டேவிற்கு ஒரு காதலி இருந்தார். அவருக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதாலேயே டே அந்த துண்டு நிலத்தை தேர்வு செய்தார் என்று ஒரு கதை உள்ளது. டேவின் காதலி சாந்தோமில் அந்நாட்களில் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த மாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர். கடற்கரை ஓரத்தில் இருந்த நிறைய குப்பங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனவே, டே தனது காதலியின் குடும்பப் பெயரை சூட்டியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம், சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்தனர். இதனால் அந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மதராஸபட்டினம் வடக்கிலும், சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.
பிரபலமான இந்த பெயர் காரணங்கள் தவிர வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன. சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதி, சோழப் பேரரசின் சிற்றரசர்களான முத்தரையர்கள்வசம் கொஞ்ச காலம் இருந்ததால், இது முத்தராசபட்டினம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முத்தராசா, முத்ராஸ், மத்ராஸ் என மருவியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆற்காடு நவாப்புகள் மதராஸ்பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லிலிருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.
இதேபோன்று சென்னை பெயருக்கு பின்னாலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் செம்மை நிறத்தில் காணப்பட்டன. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்று பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் செம்மை என்பது சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகிலேயே காளிகாம்பாள் கோயில் இருந்ததால் பக்தர்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் தம்பு செட்டித் தெருவில் ஒரு புதிய கோயிலைக் கட்டி அம்மனை அங்கு மாற்றினார்கள். ஏற்கனவே, கோட்டைப் பகுதிக்குள் கோயில் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அதற்கு உண்டு. இந்தக் காளிகாம்பாள் அம்மனுக்கு செந்தூரம் பூசி வழிபட்டார்கள். எனவே அம்மனை ‘சென்னம்மன்’ என்று அழைத்தார்கள். ‘சென்னம்மன்’ குடியிருக்கும் அந்த இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சென்னம்மன் என்பதை செம் அன்னை என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை தான் சென்னை என மாறியதாக கூறப்படுகிறது.
சென்னைப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாள் கோயில் எனும் பெயரில் ஒரு கோயில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தின் முதன்முகப்பில் இருந்ததால், இக்கோயில் இருந்த நகரத்திற்கு சென்னை என்ற பெயர் வந்ததாகச் சிலர் கூறுகின்றனர். சென்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா, இல்லை சின்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா எனத் தெரியவில்லை. ‘சின்ன’ என்ற சொல் ‘சென்ன’ என்று மாறிப் போனதாகவும் செய்திகள் உள்ளன.
இப்படி தனது பெயருக்கு பின்னால் ஏராளமான மர்மங்களை ஒளித்து வைத்தபடி, ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும், தமிழில் சென்னை என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம், இனி அனைத்து மொழிகளிலும் சென்னை என்றே அழைக்கப்படும் என 1996ஆல் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று புதுப்பொலிவு பெற்றது.
"இப்படி தனது பெயருக்கு பின்னால் ஏராளமான மர்மங்களை ஒளித்து வைத்தபடி, ஆங்கிலத்தில் மதராஸ் என்றும், தமிழில் சென்னை என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம்,"
ReplyDeleteஆங்கிலத்தில் ‘மதராஸ்’ என்றழைக்கப்படவில்லை. Madras மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டது; இன்றும் கூட.
ஆங்கிலேயருக்கு தகர உச்சரிப்பு வராது. தூத்துக்குடி - Tuticorin, திருச்சி - Tirchinappalli, திருவனந்தபுரம் - Trivandrum என்று தகர உச்சரிப்பை மாற்றிக்கொண்டார்கள்.
பின்னர் ‘மதராஸ்’ ஆருக்கு?
ஹிந்தி அல்லது ஹிந்துஸ்தானியை தாய்மொழியாகக்கொண்ட வடமானிலத்தவருக்கே. அவர்களே மெட்ராஸை, மதராஸாவாக மாற்றிக்கொண்டார்கள்.இன்றும் அப்படித்தான் சொல்கின்றனர்.
நன்றி பெர்னான்டோ,
ReplyDeleteஅது எழுத்துப்பிழை,சரி செய்துவிடுகிறேன்