என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, September 2, 2010

காலை எழுந்தவுடன் நல்ல காப்பி


காலை எழுந்தவுடன் பல உதடுகள் சுவைக்கும் முதல் உணவுப் பொருள் அநேகமாக காப்பியாகத் தான் இருக்கும். பலருக்கு ஒரு கப் காப்பி உள்ளே இறங்கினால் தான் அன்றைய பொழுது சுறுசுறுப்பாக விடியும். உலகிலேயே அதிகமாக விற்று-வாங்கக்கூடிய, நிலத்தின் விளைபொருளாக உள்ளவற்றுள், பெட்ரோலுக்கு அடுத்த இடம் காப்பிக்குதான். உலகில் 50 க்கும் அதிகமான நாடுகளில் ஏறக்குறைய 1 கோடி ஹெக்டர் பரப்பளவில் காபி பயிரிடப்படுகின்றது.

காப்பி என்பது Coffee (காஃவி) என்பதன் தமிழ் வடிவம். தென் எத்தியோப்பியாவில் காஃவா (Kaffa, கா’வ்’வா) என்று ஓர் இடம் உள்ளது. அங்கு விளைந்த ‘பூன் அல்லது ‘பூன்னா (būnn , būnnā) என்ற செடியைத் தான் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் காஃவா என்று அழைத்து, பின்னர் அது காஃபி ஆகிவிட்டது.
பரவலாக வழங்கும் கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தனர். ஆடுகள் காப்பிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்தன என்பதை அறிந்ததும், தாங்களும் அவ்வாறே உண்டு காப்பியின் புத்துணர்ச்சியூட்டும் தன்மையை உணர்ந்தனர். இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க
வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

எத்தியோப்பியாவில் இருந்து காப்பி எகிப்துக்கும், ஏமனுக்கும் பரவியது. பின்னர் ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டளவில் பெர்சியா, துருக்கி மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கும் பரவியது. அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறநாடுகளுக்கும் பயணமானது. குறிப்பாக நெதர்லாந்து நாட்டினர் பெருவாரியாக காப்பியை இறக்குமதி செய்தார்கள். 1690இல் அரபு நாடுகளின் தடையை மீறி டச்சு மக்கள் காப்பிச் செடியை எடுத்து வந்து வளர்த்தார்கள். பின்னர் டச்சு ஆட்சி செய்த ஜாவா நாட்டில் பயிர் செய்தார்கள். இப்படியே உலகம் முழுவதும் பரவி, தனது மயக்கும் சுவையால் மனிதர்களை கட்டிப் போட்டுவிட்டது காப்பி.

No comments:

Post a Comment