என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, September 9, 2010

காணாமல் போன மகாராஜா


காட்டு ராஜா என கம்பீரமாக கர்ஜிக்கும் இன்றைய சிங்கங்களுக்கெல்லாம் தாத்தா மார்சுபியல் சிங்கம் (marsupial lion). ஆஸ்திரேலியாவில் சுமார் 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரை பிரம்மாண்டமாக சுற்றித் திரிந்த இந்த வகை சிங்கம், பார்ப்பதற்கு சிறுத்தை போல இருக்கும். உடல் முழுவதும் வட்ட வட்ட புள்ளிகள், கோடுகள் என சிறுத்தையும், புலியும் கலந்துசெய்த கலவை போல காட்சியளிக்கும் இந்த மார்சுபியல் சிங்கம் மிகவும் பயங்கரமானது.

இன்றைய ஆப்ரிக்க சிங்கத்திற்கும், மார்சுபியல் சிங்கத்திற்கும் சண்டை வந்தால், மார்சுபியல் கொடுக்கும் மரண அடியில் ஆப்ரிக்கா அலறி அடித்துக் கொண்டு ஓடிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதன் பற்களும், நகங்களும் தான் இந்த சிங்கத்தின் பலத்திற்கு முக்கிய காரணம். தாடைகளின் இருபுறமும் கூர்மையாக காட்சியளிக்கும் பற்கள், பெரிய மிருகங்களின் சதையைக் கூட எளிதில் குத்திக் கிழித்துவிடும். அதேபோல இதன் நகங்களும் மிகவும் கூர்மையும் பலமும் வாய்ந்தவை. இவை வேட்டையில் மட்டுமின்றி மார்சுபியல் மரம் ஏறவும் பெரிதும் உதவியிருக்கிறது.

மார்சுபியல் சிங்கம் சராசரியாக 75 செ.மீ. உயரமும், தலை முதல் வால் வரை 150 செ.மீ நீளமும் கொண்டவை. இதன் சராசரி எடை 100 முதல் 130 கிலோ. சில குண்டோதர மார்சுபியல்கள் 160 கிலோ வரை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 19ஆம் நூற்றாண்டில், இந்த சிங்கங்களின் எலும்புகள் ஆஸ்திரேலியாவில் நிறைய இடங்களில் கிடைத்தன. ஆனால் 2002இல் தான் இதன் முழுமையான எலும்புக்கூடு ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் டிம் வில்லிங் என்ற இயற்கை ஆர்வலர், வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள குகை ஒன்றில் மார்சுபியல் சிங்கங்களின் உருவங்கள் வரையப்பட்டிருந்ததை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார். ஆஸ்திரேலியாவின் ஆதிமனிதர்கள் வரைந்த இந்த படம், மார்சுபியல் சிங்கம் குறித்த பல புதிய தகவல்களை அறிந்துகொள்ள பெரிதும் உதவியாக இருந்தது.

இவ்வளவு பலத்துடன் வலம் வந்த காட்டு மகாராஜா முற்றிலுமாக அழிந்து காணாமல் போன காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment