இன்றைய குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவுகளில் நூடுல்சும் ஒன்று. நூல், நூலாக வளைந்து, நெளிந்து தட்டில் நிறைந்து கிடக்கும் இந்த உணவு, இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நூடுல்ஸை ருசித்திருக்கிறார்கள். ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
சீனர்கள் இதனை தாங்கள் தான் கண்டுபிடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் 13ஆம் நூற்றாண்டில் மார்க்க போலோ இத்தாலியில் இருந்து சீனாவிற்கு சென்ற போது இந்த உணவை தன்னுடன் கொண்டு சென்றதாக இத்தாலியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் மார்க்க போலோ சீனாவில் நூடுல்ஸை பார்த்து வியந்து, அதனை தன்னுடன் இத்தாலிக்கு எடுத்துச் சென்றதாக சீனர்கள் மறுக்கின்றனர்.
நீண்ட பாலைவனங்களில் பயணிக்கும்போது எளிதில் கெட்டுப் போகாத உணவுகளை கொண்டு செல்ல வேண்டி இருந்ததால், நூடுல்ஸை கண்டுபிடித்ததாக அராபியர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மன் என பல நாடுகள் நூடுல்ஸ் தங்களுடைய கண்டுபிடிப்பு தான் என சொந்தம் கொண்டாடுகின்றன. இந்த சூழ்நிலையில் தான், சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் 4000 ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் நிறைந்த பாத்திரம் ஒன்றை சீனாவின் வடமேற்கு பகுதியில் கண்டெடுத்திருக்கின்றனர். இதன் மூலம் சீனர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பே நூடுல்ஸை ஒரு கை பார்த்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது.
நூடுல்ஸ் நீண்ட நூல் போல் இருப்பதால், இதனை சாப்பிடுவதன் மூலம் தங்கள் ஆயுளும் அதுபோல நீளும் என சீனர்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கூட கேக்கிற்கு பதிலாக இந்த நூடுல்ஸை தான் பரிமாறுகின்றனர். ஜப்பானிலும் நூடுல்ஸ் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இப்படியே பல நாடுகளுக்குள்ளும் நுழைந்து, உலக உருண்டையை சுருட்டிவிட்டது நூடுல்ஸ். இன்று ஏறத்தாழ அனைத்து நாட்டு மக்களும் நூடுல்ஸை ரசித்து, ருசித்து சாப்பிடுகின்றனர்.
நூடுல்ஸ் சாப்பிடுவதன் மூலம் ஆயுள் நீளும் என்ற சீனர்களின் நம்பிக்கை உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடரும் நூடுல்ஸின் ஆயுள் மிக மிக... நீளம் என்பது மட்டும் உண்மை.
No comments:
Post a Comment