என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

ஹெமீஜி கோட்டை



இயற்கையும், தொழில்நுட்ப அறிவும் சேர்ந்தால் ஒரு கோட்டையை எந்தளவுக்கு வலிமையுள்ளதாக ஆக்க முடியும் என்பதற்கு ஜப்பானின் ஹெமீஜி கோட்டை மிகச் சிறந்த உதாரணம். 14-ம் நூற்றாண்டில் அகாமாட்சு சடனோரி என்ற மன்னரால் கட்டப்பட்ட போது இது சாதாரண கட்டிடமாகத் தான் இருந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு தான் இது பலம் வாய்ந்த கோட்டையாக உருமாறியது. மேல் இருந்து பார்த்தால் பறக்கத் தயார் நிலையில் இருக்கும் பறவையைப் போல காட்சியளிக்கும் இந்த மலைக் கோட்டை இரண்டு மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது.

கோட்டையின் மையப் பகுதியில் உள்ள பிரதான மாளிகையின் பாதுகாப்பைக் கருதி அதனைச் சுற்றி 3 அகழிகளை அமைத்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது அகழிகளுக்கு வெளிப்புறமாக கோட்டைக்குள் வசிக்கும் மற்றவர்களின் இருப்பிடங்கள் உள்ளன. எனவே எத்தகைய பலம் வாய்ந்த எதிரியும் மூன்று கட்டப் பாதுகாப்பிற்குள் இருக்கும் மைய மாளிகையை எளிதில் அணுகிவிட முடியாது. அதேபோல மூன்று அகழிகளை கடப்பதற்குள் எதிரிகளின் படை பலமும் கணிசமாக குறைந்துவிடும் என்பதால் இத்தகைய ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.

கோட்டையை நெருங்கும் எதிரிகள் உள்ளே இருப்பவற்றை எளிதாகப் பார்க்க முடியாதபடி, கோட்டையின் சுற்றுச் சுவர்களை சற்று சரிவாகக் கட்டியிருக்கின்றனர். கட்டுக்காவலையும் மீறி நுழையும் எதிரிகளைத் தடுக்க கோட்டைக்குள் மொத்தம் 84 கதவுகள் இருக்கின்றன. எதிரிகளின் பெரும்படை வேகமாக உள்ளே நுழைவதை தடுப்பதற்காக இந்த கதவுகளை மிகவும் சிறியதாக அமைத்திருக்கிறார்கள். அதேபோல எதிரிகளை குழப்புவதற்காக நாலாபுறமும் பல்வேறு பாதைகள் பிரிந்து செல்லும் படி வடிவமைத்துள்ளனர். எந்த பாதை எங்கு செல்கிறது என்பது அந்த கோட்டையில் வசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

எதிரிகளை திணறடிப்பதற்காக இந்த கோட்டையின் வடிவமைப்பில் சில பிரத்யேக முறைகளையும் கையாண்டுள்ளனர். உதாரணத்திற்கு மேல்தளத்திற்கு செல்ல படிக்கட்டுகளில் ஏறினால், சிறிது தூரம் சென்றதும் அது நம்மை கீழ்தளத்தில் கொண்டு விடும்படி அமைத்துள்ளனர். படிக்கட்டுகளுக்கு இடையிலும் அதிக இடைவெளி இருப்பதால் யாரும் விரைவாக அவற்றில் ஏறிவிட முடியாது. ஆனால் இவ்வளவு பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை இதுவரை எந்த போரையும் சந்தித்ததில்லை. அதனால் தானோ என்னவோ இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் ஹெமீஜி கோட்டை அதே கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.

2 comments:

  1. நண்பருக்கு,
    நல்ல பதிவு!
    உணவு தானியங்கள் பல நூற்றாண்டுகள் கெடாத வண்ணம் வடிவமைக்கப்பட்ட அறைகள் கொண்ட பழைய கோட்டை ஒன்று புது
    டெல்லியில் (பராமரிப்பின்றி)தற்போதும் உள்ளதாகப் படித்தேன்.
    அது பற்றி விவரமாக எழுதினால் மொத்த நாட்டிற்கும் நலம்.
    செய்வீர்களா?

    ReplyDelete
  2. அன்பின் சேகர்,
    நீங்கள் சொன்ன கோட்டை குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் எழுதுகிறேன். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி. தொடர்ந்து படித்து கருத்து கூறுங்கள்.

    ReplyDelete