இந்தியாவின் சிற்பக் கலைக்கு தெய்வீக எடுத்துக்காட்டாக விளங்குபவை எலிஃபன்டா குகைக் கோயில்கள். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கரபுரி என்ற தீவில்தான் இந்த அற்புத குகைக் கோயில்கள் அமைந்துள்ளன. மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியாவில் இருந்து சுமார் 10 கிமீ தூரம் கடலில் பயணித்தால் இந்த தீவைச் சென்றடையலாம். கிபி 600-ல் ஆயிரக்கணக்கான சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான இந்த அற்புதத்திற்கு காரணமான மன்னன் யார் எனத் தெரியவில்லை. இவை குப்தர்களின் கலைப் படைப்புகளாக இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
எலிஃபன்டாவில் உள்ள முக்கிய படைப்புகளில் ஒன்று திரிமூர்த்தி சிலை. மூன்று முகங்களைக் கொண்ட இந்த சிலை 8.3 மீட்டர் உயரம் உள்ளது. மூன்று முகங்களும் மூன்று வெவ்வேறு உணர்ச்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பம்சம். இடப்புறம் உள்ள முகம் தாடி, மீசையுடன் நெற்றிக் கண்ணைத் திறந்த நிலையில் கடும் சீற்றத்துடன் காட்சியளிக்கிறது. இதற்கு நேர் எதிராக வலப்புறம் உள்ள முகம் பெண்மையின் மென்மையுடன் திகழ்கிறது. இடையில் இருக்கும் முகத்திலோ பேரமைதி தவழ்கிறது.
எலிஃபன்டாவின் மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள சிவன் சந்நிதி. இதன் கருவறையின் நான்கு திசைகளிலும் வாசல்களை அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாசலின் இரண்டு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் கம்பீரமாகக் காவல் புரிகின்றனர். கிழக்கில் இந்திரனும், தெற்கில் யமதர்மராஜனும், மேற்கில் வருணனும், வடக்கில் குபேரனும் காட்சியளிக்கின்றனர்.
சிவபெருமானின் திருக்கல்யாணக் கோலத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் சிற்பம் காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அதேபோல அண்டப் பெருவெளியில் ஆனந்த நடனம் ஆடும் நடராஜர் சிற்பம், நளினமும், கம்பீரமும் ஒருசேர காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் சிலை, சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் சொக்க வைக்கும் சிற்பம் ஆகிய அனைத்தும் நம்மை வேறு உலகத்துக்கே அழைத்துச் சென்றுவிடுகின்றன. இன்னும் இன்னும் ஏராளமான கல்லில் வடித்த காவியங்கள் இங்கே காட்சிகளாக விரிந்து கிடக்கின்றன.
எதிரி மன்னர்களின் படையெடுப்புகள், உப்புக் காற்றின் தாக்கங்கள் ஆகிய காரணங்களால் எலிஃபன்டா சிற்பங்களில் பல சீர்குலைந்து காணப்படுகின்றன. இருப்பினும், அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி இன்றும் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன இந்த காலத்தை வென்ற கற்சிற்பங்கள்.
No comments:
Post a Comment