சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில், மருந்து வாசனையோடு பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கும் பச்சைக் கட்டடத்திற்கு ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் இருக்கிறது. தினமும் பல உயிர்களை காப்பாற்றிக் கரை சேர்த்துக் கொண்டிருக்கும் இந்த கட்டடத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. அரசு பொதுமருத்துவமனைக்கான அடிக்கல், கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் கால்பதித்த காலத்திலேயே நாட்டப்பட்டு விட்டது.
1639இல் மெட்ராசில் குடியேறிய ஆங்கிலேயர்கள் முதலில் தங்களுக்கென ஒரு கோட்டையை கட்டிக் கொண்டனர். பின்னர் மற்ற வசதிகளை ஏற்படுத்தத் தொடங்கிய அவர்கள், தங்களுக்கென ஒரு மருத்துவமனை அவசியம் என்பதை உணர்ந்தனர். இதன் விளைவாக சர் எட்வர்ட் விண்டர் என்பவர் புனித ஜார்ஜ் கோட்டைக்குள் ஒரு அரசு பொது மருத்துவமனையைத் தொடங்கினார். கிழக்கிந்திய கம்பெனி வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1664ஆம் ஆண்டு நவம்பர் 16ந் தேதி சிறிய அளவில் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.
சர் எலிஹூ யேல் கவர்னராக இருந்தபோது, 1690இல் இந்த மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டது. பிரெஞ்சுப் படைகளுடனான யுத்தத்திற்கு பிறகு 1772இல், இந்த மருத்துவமனை கோட்டையைவிட்டு வெளியேறி தற்போதைய இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதன் பின்னர் இதன் வளர்ச்சி வேகம் எடுக்கத் தொடங்கியது. சிகிச்சை அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல், நவீன மருத்துவத்தை பிறருக்கு கற்றுத் தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு பயிற்சி பெற்றவர்கள் அன்றைய மெட்ராஸ் ராஜதானியின் மாவட்ட தலைமையகங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பிப்ரவரி 2, 1835இல் அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த சர் ஃபிரெட்ரிக் ஆடம்ஸ் இதையே முறையான மருத்துவப் பள்ளியாகத் தொடங்கி வைத்தார். இது அரசு பொது மருத்துவமனையோடு இணைக்கப்பட்டது. மருத்துவமனையும், மருத்துவப் பள்ளியும் ஒன்றாக இணைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1850, அக்டோபர் 1ஆம் தேதி, இந்த பள்ளியின் பெயர் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் என மாற்றப்பட்டது. இப்படிப் பல பரிமாண வளர்ச்சிகளுக்கு பிறகு மெட்ராஸ்வாசிகளுக்கு ஒருவழியாக முறையான ஒரு மருத்துவக் கல்லூரி கிடைத்தது.
நிறைய மாணவர்களை மருத்துவர்களாக மாற்றி அனுப்பிக் கொண்டிருந்த இந்த கல்லூரியின் வரலாற்றில் 1875ஆம் ஆண்டு மறக்கமுடியாததாக மாறியது. ஆம், அந்த ஆண்டில்தான் இந்தக் கல்லூரி உலக வரலாற்றில் நிரந்தரமாக இடம்பிடித்தது. அதற்கு காரணம் மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப் (Mary Ann Dacomb Scharlieb) என்ற 30 வயது பெண்மணி. இவர் தான் உலகிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்த முதல் மாணவி. அந்த காலத்தில் உலகின் அனைத்து நாடுகளிலும் ஆண்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தருணத்தில்தான் மேரிக்கு வாசல் திறந்து உலகிற்கே முன்னுதாரணமாக மாறியது மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி. பின்னர் இங்கிலாந்து சென்று மருத்துவத்தில் மேல் படிப்பு முடித்த மேரி, இந்தியாவிற்கு திரும்பி ஒரு மருத்துவமனையை ஆரம்பித்தார். அதுதான் திருவல்லிக்கேணியில் தற்போது இயங்கி வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை. உலகின் முதல் பெண் மருத்துவரால் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பிரத்யேக மருத்துவமனை.
ஆண்களால் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கு பெண்கள் செல்லத் தயங்குவார்கள் என்பதால் டாக்டர் மேரி இந்த மருத்துவமனையைத் தொடங்கினார். இதற்காக ராணி விக்டோரியாவிடம் அனுமதி பெற்று அவரது பெயரை இந்த மருத்துவமனைக்கு சூட்டினார். இந்த மருத்துவமனை முதலில் நுங்கம்பாக்கத்தில்தான் இயங்கி வந்தது.
பின்னர் 1890இல் மெட்ராஸ் அரசு இந்த மருத்துவமனைக்காக சேப்பாக்கத்தில் ஒரு இடத்தை தானமாக வழங்கி, ரூ10,000 நன்கொடையும் கொடுத்தது. இதுமட்டுமின்றி ஓராண்டுக்கு தேவையான மருந்துகளும் இலவசமாக அளிக்கப்பட்டன. தற்போது இருக்கும் மருத்துவமனையின் பிரதான கட்டடம், வெங்கடகிரி ராஜா கொடுத்த ஒரு லட்ச ரூபாய் நன்கொடையில் கட்டப்பட்டது.
இவரைப் போல இன்னும் நிறைய பெண் மருத்துவர்களை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி பெற்றெடுத்தது. அவர்களில் முக்கியமானவர் கிருபை சத்தியநாதன். அவர்தான் இங்கு பயின்ற முதல் இந்திய மாணவி. ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அவர் முதல் ஆண்டுடன் தனது படிப்பை கைவிட வேண்டியதாகிவிட்டது. பின்னர் அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக உருவெடுத்தார். 1884ஆம் ஆண்டு அபலா தாஸ், ரோஸ் கோவிந்தராஜூலு, குர்தியால் சிங் ஆகிய மூன்று இந்திய மாணவிகள் இந்த கல்லூரியில் சேர்ந்து வெற்றிகரமாக தங்கள் LMS படிப்பை முடித்தனர்.
இந்த கல்லூரியில் இருந்து 1912இல் MBBS பட்டம் பெற்று வெளியேறிய முதல் இந்திய மாணவிதான் புகழ்பெற்ற டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி. அவர் தொடங்கியதுதான் அடையாரில் இருக்கும் புற்றுநோய் மருத்துவமனை. இப்படிப் பல பெருமைகளைப் பெற்ற மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி 1938 வரை ஆங்கிலேயே முதல்வர்களால் தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டாக்டர் சர் ஆர்காடு லட்சுமணசாமி முதலியார். முதல் இந்திய முதல்வரான டாக்டர் ஏ.எல். முதலியாரின் சிலை கல்லூரி வளாகத்தில் இன்றும் நம்மை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.
1996இல் மெட்ராஸ் நகரம் சென்னை என பெயர் மாற்றம் அடைந்தபோது, இந்த கல்லூரியின் பெயரும் சென்னை மெடிக்கல் காலேஜ் என மாறியது. ஆனால் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் என்பது தான் உலகம் முழுவதும் அறியப்பட்ட பெயராக இருந்ததால், விரைவிலேயே அது மீண்டும் தனது பழைய பெயருக்கே திரும்பிவிட்டது.
சென்னை அரசு பொதுமருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் கால ஓட்டத்தில் நிறைய மாற்றங்களை சந்தித்திருந்தாலும், சுமார் 340 ஆண்டுகளைக் கடந்தும் மனித சமூகத்திற்கு சேவையாற்றும் அதன் தாயுள்ளம் மட்டும் மாறவே இல்லை. கிட்டத்தட்ட சென்னை நகரம் பிறந்தபோது, கூடவே பிறந்து வளர்ந்த இந்த மருத்துவ மையம், சென்னையின் நாடியை இன்றும் அக்கறையுடன் பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.
----------------------------
* இந்தியாவிலேயே கம்பவுண்டர் என்ற பதவியை 1897ஆம் ஆண்டே உருவாக்கி அதற்கான படிப்பை கற்றுத் தந்த முதல் கல்லூரி என்ற பெருமையும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு உண்டு.
* டாக்டர் ஏ.எல். முதலியார் எழுதிய மருத்துவப் புத்தகங்கள் லண்டன் பல்கலைக்கழகத்தில் இன்றும் பாடப் புத்தகங்களாக இருக்கின்றன.
* எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, கண் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை என 8 மருத்துவமனைகள் இந்த கல்லூரியின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.
No comments:
Post a Comment