தொலைவில் இருந்து பார்த்தால் பிரம்மாண்டமான பிறந்தநாள் கேக் போல காட்சியளிக்கும் இது சென்னையின் புராதன கட்டிடங்களில் ஒன்று. ஐஸ் அவுஸ் என்று அழைக்கப்பட்டு இன்று விவேகானந்தர் இல்லமாக மாறியிருக்கும் இந்த கட்டிடத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது, குளிர்ச்சி நிறைந்ததும் கூட. ஆம், இந்தியாவிற்கு வந்து இறங்கிய ஐஸ் கட்டிகள் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
ஆங்கிலேயர் காலத்தில் ஃபிரெட்ரிக் டூடர் (Fredric Tudor) என்று ஒருவர் இருந்தார். இவருக்கு ஐஸ் மகாராஜா என்றும் ஒரு பட்டப் பெயர் உண்டு. ஐஸ் கட்டி வியாபாரத்தில் கொடிகட்டி பறந்ததுதான் இதற்கு காரணம். ஐஸ் வியாபாரியான டூடர், 1833ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கிளிப்பர் டுஸ்கானி (Clipper Tuscany) என்ற கப்பலில் இந்தியாவிற்கு ஐஸ் கட்டிகளை கொண்டு வந்தார். இப்படித்தான் வெளிநாட்டில் இருந்து முதன்முறையாக ஐஸ் கட்டிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன.
டூடர், ஐஸ் வியாபாரியாக மாறியதே ஒரு சுவாரஸ்யமான கதைதான். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஊர்சுற்றிக் கொண்டிருந்த டூடர் ஒருமுறை கியூபா சென்றார். அந்நாட்டில் நிலவிய கடுமையான வெயிலில் வாடி வதங்கினார். இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் போலிருக்கே என்று உச்சி வெயிலில் உச்சு கொட்டியபோது உதித்ததுதான் இந்த ஐஸ் வியாபார யோசனை. கடும் வெயில் நிலவும் நாடுகளுக்கு அமெரிக்காவில் வீணாகப் போகும் ஐஸ் கட்டிகளை ஏற்றுமதி செய்து காசு பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். அப்படி அவரது பட்டியலில் இடம்பெற்ற முக்கியமான நாடு இந்தியா.
ஐஸ் கட்டிகளை பத்திரமாக பல மாதங்கள் கரையாமல் பாதுகாப்பதற்காக டூடர் இந்தியாவில் மூன்று கட்டிடங்களை கட்டினார். பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் என மூன்று நகரங்களில் அவர் கட்டிய கட்டிடங்களில் மற்ற இரண்டு கட்டிடங்களும் காலத்தில் கரைந்துவிட, மெட்ராஸ் கட்டிடம் மட்டும்தான் இன்று மிஞ்சியிருக்கிறது. அதுதான் ஐஸ் அவுஸ்.
ஐஸ் அவுஸ் 1842ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஐஸ் கட்டிகளை பாதுகாப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் அதனை ஐஸ் அவுஸ் என்று மக்கள் அழைத்தார்கள். கப்பல்களில் வந்திறங்கும் ஐஸ் கட்டிகளை உடனே சேமித்து வைப்பதற்காக கடற்கரைக்கு எதிரிலேயே இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த ஐஸ் கட்டிகள்தான் ஆங்கிலேய அதிகாரிகளின் மாலை நேர மது விருந்துகளை சிறப்பித்தன. வாங்கிச் செல்லும் ஐஸ் கட்டிகள் உடனடியாக கரைந்துவிடாமல் தடுக்க, ஐஸ் கட்டிகள் மீது போர்த்தும் கனமான போர்வைகளையும் டூடர் விற்பனை செய்தார். சுமார் 40 ஆண்டுகாலம் சக்கை போடு போட்ட இந்த வியாபாரம், 1880களில் இந்தியாவிலேயே நீராவி முறையில் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் உத்தி கண்டுபிடிக்கப்பட்ட பின் கலகலத்துப் போனது.
இதனால் வியாபாரத்தை மூட்டை கட்டிவிட்டு, அந்த கட்டிடத்தை பிலிகிரி அய்யங்கார் என்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு விற்றுவிட்டார் டூடர். குடோனாக இருந்த அதனை வட்டமான வராண்டாக்களையும், நிறைய ஜன்னல்களையும் வைத்து வீடாக மாற்றினார் பிலிகிரி. தனது நண்பரும், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பிரபல நீதிபதியுமான கெர்னனின் நினைவாக, தனது வீட்டிற்கு கெர்னன் கோட்டை (Castle Kernan) எனவும் பெயரிட்டார். இதன் ஒரு பகுதியில் ஏழை மாணவர்களையும் பிலிகிரி தங்க வைத்திருந்தார். ஆனால் போதிய காற்றோட்டம் இல்லாததால் அந்த கட்டிடத்தால் ஒரு நல்ல வீடாக விளங்க முடியவில்லை.
இந்நிலையில்தான் அந்த கட்டிடத்திற்கு எதிர்பாராத வகையில் ஒரு வரலாற்றுப் பெருமையும், அடையாளமும் கிடைத்தது. சிகாகோ மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றிவிட்டு பெரும் புகழுடன் தாய்நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர், ஊருக்கு செல்லும் வழியில் சென்னை வந்தார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் சீடரான பிலிகிரி அய்யங்கார், சுவாமிகள் தனது வீட்டில் தங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். விவேகானந்தரும் இதனை ஏற்றுக் கொண்டதை அடுத்து, அவர் ஊர்வலமாக ஐஸ் அவுஸ் கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
1897ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-14ந் தேதி வரை அங்கு தங்கிய சுவாமி விவேகானந்தர், எழுச்சி மிக்க ஏழு உரைகளை ஆற்றினார். அவர் ஊருக்கு கிளம்பும்போது அவரிடம் சென்ற சென்னை பக்தர்கள், சுவாமிகளின் ஆன்மீகப் பணிக்காக சென்னையிலேயே ஒரு நிரந்தர மையத்தை அமைக்குமாறு வேண்டிக் கொண்டனர். இதனையடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஐஸ் அவுஸ் கட்டிடத்திற்குள் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதுதான் மெட்ராசில் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தின் முதல் கிளை.
1906ல் பிலிகிரி அய்யங்கார் இறந்த பிறகு, விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் அந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கினார். பின்னர் 1917இல் அரசாங்கம் அதனை அவரிடம் இருந்து வாங்கி, பிராமண விதவைகளுக்கான ஹாஸ்டலாக மாற்றியது. பின்னர் அது முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான தங்கும் விடுதியாகவும், பி.எட்., பயிற்சி பெறுபவர்களின் விடுதியாகவும் சில காலம் செயல்பட்டது.
1963இல் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரசு அந்த கட்டிடத்தின் பெயரை விவேகானந்தர் இல்லம் என்று மாற்றியது. 1997இல் அந்த கட்டிடமும், அதன் அருகில் உள்ள நிலத்தின் ஒரு பகுதியும் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு லீசுக்கு விடப்பட்டது. இதனையடுத்து அங்கு சுவாமி விவேகானந்தர் மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் பற்றிய நிரந்தர கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவேகானந்தரின் அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஒருவரால், ஐஸ் குடோனாக கட்டப்பட்ட கட்டிடம், காலத்தின் சுழற்சியில் ஒரு தேசத்தின் கலாச்சார மையமாக உருமாறி, இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டு இருக்கிறது.
நன்றி - தினத்தந்தி
No comments:
Post a Comment