அண்ணாசாலையில் இருந்து புதுப்பேட்டைக்கு திரும்பும் வழியில் இருந்த கெயிட்டி திரையரங்கம் அந்தக் கால மெட்ராஸ்வாசிகளின் சொர்க்கபுரிகளில் முக்கியமானது. இந்தியாவில் சினிமா அடியெடுத்து வைத்த காலத்திலேயே அதனை மெட்ராஸ்வாசிகளுக்கு அறிமுகம் செய்துவைத்த சிறப்பு இந்த திரையரங்கிற்கு உண்டு. கெயிட்டி உருவான கதை அதில் திரையிடப்பட்ட சினிமாக்களின் கதையைவிட மிகவும் சுவாரஸ்யமானது.
மெட்ராசில் முதன்முதலில் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான் 1897ஆம் ஆண்டு திரைப்படம் திரையிடப்பட்டது. அதனை திரைப்படம் என்று கூட சொல்ல முடியாது. நிறைய புகைப்படங்கள் அடுத்தடுத்து ஸ்லைட் ஷோ மாதிரி நகரும் சலனப்படக் காட்சி என்று சொல்லலாம். இதனை எட்வர்டு என்ற ஐரோப்பியர் திரையிட்டார்.
அதன் பிறகு வார்விக் மேஜர் என்ற ஆங்கிலேயர், மெளன்ட் ரோடில் ‘எலக்ட்ரிக் தியேட்டர்’ என்ற அரங்கை கட்டினார். இதில் சில ஆண்டுகள் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. இந்தக் கட்டிடம் தற்போது தலைமை தபால்நிலைய அலுவலக வளாகத்தின் உள்ளே இருக்கிறது. இதுதான் மெட்ராசில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு. இது மெட்ராசில் இருந்த ஆங்கிலேயர்களின் மாலைப் பொழுதை இனிமையாக்கி வந்தது.
இந்த சூழலில்தான், 1909ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் மெட்ராஸ் வந்தார். அவரது வருகையை கொண்டாடும் விதமாக ஒரு பிரம்மாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒலியுடன் கூடிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதற்காக பிரிட்டன் கம்பெனி ஒன்று 'க்ரோன்-மெகாபோன்' என்ற கருவியை கொண்டு வந்திருந்தது. இது கிராமபோன் பொருத்தப்பட்ட படப் புரொஜக்டர். திரையில் படம் ஓடும்போது, அதற்கேற்ப ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலி கிராமபோனில் இருந்து ஒலிக்கும். எனவே நடிகர்களின் உதட்டசைவும், திரையில் வரும் ஒலியும் ஒத்திசைவுடன் இருக்காது. இருப்பினும் திரையில் மனிதர்கள் பேசுவதையும், வண்டிகள் ஓடுவதையும் மெட்ராஸ்வாசிகள் வாயைப் பிளந்து பார்த்தனர்.
இதனை ரகுபதி வெங்கய்யா என்ற புகழ்பெற்ற ஸ்டில் போட்டோகிராபர் பார்த்தார். அவரது வணிக மூளைக்கு ஏதோ பொறி தட்டியது. கண்காட்சி முடிந்ததும் அந்த கருவியை பிரிட்டன் நிறுவனத்திடம் இருந்து ரூ.30,000 கொடுத்து வாங்கிவிட்டார்.
அந்த கருவி வெங்கய்யாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு அருகில் ஒரு கொட்டகை போட்டு அந்த கருவியை வைத்து படம் காட்டினார். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பின்னர் அதனை எடுத்துக் கொண்டு இந்தியா முழுவதும் சுற்றி, படங்களை திரையிட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுக்கும் தனது கருவியுடன் படை எடுத்தார். அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல 'க்ரோன் - மெகாபோன்' வெங்கய்யாவிற்கு பணத்தைக் கொட்டியது.
கிடைத்த லாபத்தை வைத்து சென்னையில் மவுனப்படம் திரையிடும் ஒரு நிரந்தர சினிமா தியேட்டரை கட்டினார். தென் இந்தியாவில் இந்தியர் ஒருவர் கட்டிய முதல் தியேட்டர் என்ற பெருமையைப் பெற்ற அதுதான், 1914இல் உதயமான கெயிட்டி திரையரங்கம். கெயிட்டிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, வெங்கய்யா மெட்ராசில் அடுத்தடுத்த தியேட்டர்களை கட்டினார்.
தங்கச்சாலை சந்திப்பில் கிரவுன் தியேட்டரும், அதற்கு அடுத்த ஆண்டு புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் க்ளோப் தியேட்டரும் பிறந்தன. க்ளோப் தியேட்டர் தான் பின்னர் ராக்சி என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மூன்று தியேட்டர்களுமே மவுன படங்களை திரையிட்டு வந்தன.
Million Dollar Mystery, Mysteries of Meera, Clutching Hand, Broken Coin, Raja's casket, Peral fish, Great Bard போன்ற மவுனப் படங்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்து தனது மூன்று தியேட்டர்களிலும் திரையிட்டார். இதன்மூலம் ஹாலிவுட் சினிமாக்களை அந்தக் காலத்திலேயே மெட்ராஸ்வாசிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் வெங்கய்யா.
இந்த காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் ஹரிச்சந்திரா, கீசகவதம் போன்ற மவுனப்படங்கள் வெளியாகின. வெங்கையா இந்த இரண்டு படங்களையும் தனது மூன்று தியேட்டர்களிலும் மாறி மாறி திரையிட்டார். இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து படத்தயாரிப்பில் இறங்க முடிவெடுத்தார். தனது மகன் ரகுபதி சூர்ய பிரகாஷை லண்டனுக்கு அனுப்பி திரைப்படத் துறையில் பயிற்சி பெறச் செய்தார்.
அப்படியே ஜெர்மனிக்கும், ஹாலிவுட்டிற்கும் போன பிரகாஷ், திரும்பி வரும்போது 35 எம்எம் வில்லியம்சன் மவுனப் படக் கேமரா ஒன்றை வாங்கி வந்தார். இதனைக் கொண்டு வெங்கய்யாவும், பிரகாஷும் 'மீனாட்சி கல்யாணம்' என்ற திரைப்படத்தை எடுத்தனர். புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் போன்ற மூடநம்பிக்கைகளால், இதில் நடிக்க தமிழ் நடிகர்கள் யாரும் முன்வரவில்லை. எனவே மெட்ராசில் இருந்த ஆங்கிலோ - இந்தியர்களை நடிக்க வைத்தனர்.
படத்தை முடித்து திரையிட்டுப் பார்த்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. காரணம், திரையில் நடிகர்கள் யாருக்கும் தலை இல்லை. ஆங்கிலோ இந்தியர்களை கடவுள் பாத்திரங்களில் நடிக்க வைத்ததால் கடவுள் கோபம் கொண்டு அனைவரின் தலையையும் எடுத்துவிட்டதாக மெட்ராஸ்வாசிகள் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள். ஆனால் லென்சில் ஏற்பட்ட கோளாறு தான் இந்த பிரச்னைக்கு காரணம் என பிரகாஷ் கண்டறிந்தார். பின்னர் அவர்கள் நிறைய படங்களை எடுத்தனர்.
1932இல் வெங்கய்யா தனது மூன்று தியேட்டர்களிலும் பேசும் படங்களை திரையிடும் நவீன கருவிகளைப் பொருத்தினார். பின்னர் இங்கு பல படங்கள் பேசின. இப்படியாக அந்தக் கால மெட்ராஸ்வாசிகளின் கனவுகளுக்கு கதவு திறந்துவிட்டன வெங்கய்யாவின் திரையரங்குகள்.
1914இல் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் கெயிட்டி திரையரங்கு, மெட்ராஸ்வாசிகளின் கனவுகளுக்கு விதை போட்டது. 2005இல் இதில் படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் இங்கு செட் போட்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. தற்போது இந்த திரையரங்கு இடிக்கப்பட்டு, அங்கு ஒரு வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
கெயிட்டி திரையரங்கு மெட்ராசில் இருந்து மறைந்ததைப் போல அதைக் கட்டிய வெங்கய்யாவின் நினைவும் மறைந்துவிட்டது. ஆம், மெட்ராஸ்வாசிகளுக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்காற்றிய ரகுபதி வெங்கய்யாவை தமிழ் சினிமா இன்று மறந்துவிட்டது. ஆனால் ஆந்திரா நினைவில் வைத்திருக்கிறது. தெலுங்கு பட உலகில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு அம்மாநில அரசு ரகுபதி வெங்கய்யா பெயரில் விருது வழங்கி கவுரவிக்கிறது.
நன்றி - தினத்தந்தி
No comments:
Post a Comment