என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, December 2, 2010

ரம்பையின் (நடிகை ரம்பா அல்ல) இளமை ரகசியம்






ஏதோ ஒரு பெயர் தெரியாத பழைய திரைப்படத்தில் தேவலோகத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் அட்டகாசமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். இந்திரன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த ரம்பா, ஊர்வசிக்கெல்லாம் வயசே ஆகாதா? எப்பப் பார்த்தாலும் அப்படியே இருக்காங்களே என்றேன். அப்படியே இளமையா இருக்கணும்னுதான் ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் பூலோகத்திற்கு வந்து வரம் வாங்கிட்டு போனாங்க என்றார் என் நண்பரின் பாட்டி. எந்த ஏரியாவில வரம் வாங்கினாங்க பாட்டி என்றேன்.

கிண்டல் பண்ணாதேடா, இலம்பையங்கோட்டூர்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே தான் இவங்கல்லாம் வந்து தவம் இருந்து இளமை வரம் வாங்கிட்டு போனாங்க, அவங்க வந்துபோன கோவில் கூட இன்னும் அங்கே இருக்கு தெரியுமா என்று எங்களை அடுத்தடுத்து வியப்பில் ஆழ்த்தினார் பாட்டி. சரி தான், ரம்பை வந்துபோன கோவிலை பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.

ஒருநாள் அதிகாலையிலேயே நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, ரம்பையின் பாதச்சுவடிகளை ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். இந்த ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது என்றார்கள். அங்குள்ள திருவிற்கோலம் எனப்படும் கூவம் சிவன் கோவிலிலிருந்து தென்மேற்கே 4 கி மி. போனால் இந்த ஊரை அடையலாம் என்றார்கள். ஏற்கனவே நான் கூவம் கிராமத்திற்கு (இங்கிருந்துதான் சென்னையின் ஜீவநதி கூவம் புறப்பட்டு வருகிறது) போயிருப்பதால் அது வரை எந்த சிக்கலும் இல்லாமல் போய்விட்டேன்.

அங்கு சென்று விசாரித்தபோது இலம்பையங்கோட்டூரா அப்படி எதுவும் இங்கே கிடையாதே என்று இடியை இறக்கினார் ஒருவர். பயணம் அவ்வளவுதானோ என்ற அச்சத்துடன் வேறொரு பெரியவரை விசாரித்தோம். அவங்க செட் ஆளைப் பற்றி தெரிந்திருக்கும் என்ற நப்பாசை தான். நம்ம கணக்கு சரியாக இருந்தது. இலம்பையங்கோட்டூரைத் தான் இப்போ எலுமியன்கோட்டூர்னு சொல்றாங்க, இன்னும் 4 கிலோ மீட்டர் போங்க ஊர் வந்துடும் என்று வயிற்றில் பால் வார்த்தார். அப்பாடா, தப்பிச்சோம்.

அழகான வயல்வெளிகளுக்கு இடையில் கொக்குகள் வானில் பறக்க, ஒற்றையடிப் பாதையில் வண்டியில் பறந்தோம். அப்படியே வளைந்து நெளிந்து சென்றதில் ஒரு சிற்றூர் எதிர்ப்பட்டது. அடிபம்பில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு நவீன ரம்பையிடம், அக்கால ரம்பை வந்துபோன கோவில் பற்றி விசாரித்தோம். அப்படியே கிழக்கால போங்க என்று கையை வீசினார். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே ஒரு சிதிலமடைந்த பழங்காலக் கோவில் தெரிந்தது.

ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் வந்துபோன கோவில் என்பதால் உள்ளே காலை வைத்ததும் இதயத்தில் சிலிர்க்கிறதாஎன்று பார்த்தேன். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் கோவிலின் புராதனம் நம்மை மெல்ல சூழ்ந்து கொள்கிறது. ஒரு கனத்த மௌனத்தை உணர முடிந்தது. ஒரு இனம் புரியாத அமைதி நெஞ்சில் பரவியது. கோவில் குருக்களின் வீடும், பசு மடம் ஒன்றும் கோவில் வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது. குருக்கள் கோவிலின் தல வரலாற்றை விளக்கினார். அதை முதலில் சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

திரிபுர சம்ஹாரத்தின்போது சிவ பெருமான் தேரேறி புறப்பட, அவருடன் சென்ற தேவர்கள் தன்னை வழிபடாமல் சென்றதால் விநாயகர் தேரின் அச்சை முறித்து விட்டார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. ஆனால் தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். அந்த இடம்தான் இலம்பையங்கோட்டூர் திருத்தலம்.

தேவலோக மங்கைகளான ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகியோர் மாறாத இளமை வேண்டுமென்று இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றனர். இரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் என்று ஆகி, நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள சிவன் மீது திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.

இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே இருக்கிறது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபமும் இருக்கின்றன. இத்தலத்தில் கொடிமரம் எதுவும் இல்லை. வளிப் பிரகாரத்தில் இடதுபுறம் இரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் எனப்படும் அரம்பேஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் இருக்கிறார். ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரத்தை வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. இத்தல இறைவன் ஒரு சுயம்பு, மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வெளியே இரு புறமும் மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியதாக கூறப்படுகிறது.

தேவர்கள் வழிபட்ட இந்த தெய்வநாதேஸ்வரரை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள். நாங்கள் போன போது, ஆலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ரம்பா, ஊர்வசி, மேனகா போல இளமை மாறாமல் இல்லாவிட்டாலும், இருக்கிற வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு வெளியில் வந்தோம். ரம்பா ஊரை பார்த்துட்டோம் டோய்னு... இனி எல்லார் கிட்டேயும் சொல்ல வேண்டியதுதான்.

Sunday, November 28, 2010

தங்கத் தேரை

அமெரிக்க கண்டத்தில் உள்ள கோஸ்டா ரிக்கா நாட்டு காடுகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தத்தித் தத்தி ஓடிக் கொண்டிருந்த அழகான குட்டியூண்டு தேரைதான் Golden Toad எனப்படும் தங்கத் தேரை. பார்ப்பதற்கு கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு வண்ணத்தில் பளபளவென மின்னியதால் இதற்கு இந்தப் பெயரை வைத்துவிட்டார்கள். இதில் கூட ஆண் தேரைதான் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். பெண் தேரை மஞ்சள் நிறத்தில் கருப்பு புள்ளிகளுடன் காட்சியளிக்கும்.

கோஸ்டா ரிக்கா நாட்டின் மாண்ட்வர்டி (Monteverde) நகரின் மேல் அமைந்திருந்த காடுகளில், இந்த வகை தேரைகள் அதிகளவில் வாழ்ந்து வந்தன. 1966ஆம் ஆண்டு ஜா சாவேஜ் (Jay Savage) என்ற ஆய்வாளர்தான் இப்படி ஒரு அழகிய உயிரினம் காட்டுக்குள் தாவிக் கொண்டிருப்பதை உலகிற்கு அறிவித்தார். முதல்முறை இவற்றைப் பார்த்த ஜா சாவேஜ் தன் கண்களையே நம்பவில்லை. சில தேரைகளைப் பிடித்து யாரோ எனாமல் பெயிண்டில் முக்கி எடுத்து வெளியில் விட்டிருக்கிறார்களோ என்று சந்தேகப்பட்டதாக அவரே தனது குறிப்பில் கூறியிருக்கிறார். திடீரென பார்க்கும்போது காட்டில் சிதறிக் கிடக்கும் தங்க நகைகள் போல் அவை காட்சியளித்ததாக மார்த்தா கிரம்ப் என்ற ஆய்வாளர் தனது புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார்.

இந்த வகை தேரைகள் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும். ஆண் தேரை 5 சென்டிமீட்டர் நீளம்தான் இருக்கும். பெண் தேரை அதைவிட சற்று கூடுதல் நீளமாக இருக்கும், அவ்வளவுதான். இவை அதிகம் வெளியில் தலைகாட்டாது. நிழல் உலக தாதாக்கள் போல இவை பெரும்பாலும் அண்டர்கிரவுண்டில் தான் இருக்கும். இனப் பெருக்கத்திற்காக ஆண்டில் சில வாரங்கள் மட்டுமே வெளியில் வரும்.

கோஸ்டா ரிக்கா காடுகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மழை பெய்யும். இந்த காலகட்டத்தில் ஆண் தேரைகள் கூட்டம் கூட்டமாக வெளியில் வந்து பெண் தேரைகளுக்காக காத்திருக்கும். இனப்பெருக்கம் முடிந்ததும், மழையால் தேங்கியிருக்கும் குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் முட்டையிட்டுவிட்டு அவை மீண்டும் பாதாள லோகத்திற்கு திரும்பிவிடும். இரண்டு மாதங்கள் கழித்து இந்த முட்டைகளில் இருந்து குட்டிக் குட்டி தங்கக் கட்டிகள் எட்டிப் பார்க்கும்.

1989ஆம் ஆண்டில் இருந்து இவற்றில் ஒரு தேரை கூட யார் கண்ணிலும் படவில்லை. எனவே இவற்றை அழிந்துபோன உயிரினம் என சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துவிட்டது. இவற்றின் அழிவிற்கு யார் காரணம் தெரியுமா? நாம் தான். நாம் பூமியை வெப்பமடைய வைத்ததுதான் இந்த குட்டி ஜீவன்களை சாகடித்துவிட்டது.

1987ஆம் ஆண்டு கோஸ்டா ரிக்கா காடுகளில் கடுமையான வெப்பம் நிலவியது. போதுமான மழை இல்லாததால் காடு காய்ந்து நீர்நிலைகள் எல்லாம் வற்றிவிட்டன. தண்ணீர் இல்லாததால் அவற்றால் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முடியவில்லை. அப்போது தொடங்கிய அதன் அழிவுக் காலம், இரண்டு ஆண்டுகளில் வேகமெடுத்து 1989ஆம் ஆண்டு தங்கத் தேரைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

பூமிக்கு அடியில் ஒன்றிரண்டு தேரைகளாவது இருக்காதா என்ற எதிர்பார்ப்பில் இன்றும் கோஸ்டா ரிக்கா காடுகளில் ஆய்வாளர்கள் அந்த தங்கப் புதையலைத் தேடி வருகிறார்கள். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

Thursday, November 11, 2010

ஜப்பானின் 'எந்திரி'


திரையில் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட எந்திரனைப் பார்த்து நாம் வியந்து கொண்டிருக்கையில், ஜப்பானியர்கள் உண்மையான எந்திரனை சாரி.. எந்திரியை.. இல்லை.. இல்லை... ஒரு சூப்பர் சுந்தரியை உருவாக்கியிருக்கிறார்கள்.

Geminoid F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ உண்மையான பெண் போலவே இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சாதாரண மனிதர்களைப் போல மூச்சு விடுகிறது, கண் சிமிட்டுகிறது, பேசுகிறது. இது அனைத்தையும் விட ஹை-லைட் சயனோரா என்ற நாடகத்தில் நடிக்கிறது.

தீராத நோயால் அவதிப்படும் பெண்ணிற்கு ஆறுதல் கூறி, கவனமுடன் பார்த்துக் கொள்ளும் செவிலித் தாய் போன்ற பாத்திரத்தில் இந்த ரோபோ அம்மணி பிச்சு உதறுகிறார்.

ஒசாகா பல்கலைக்கழகத்தை சேர்ந்த Hiroshi Ishiguro என்ற பிரபல ரோபோ வடிவமைப்பாளர் 12 லட்சம் டாலர்கள் செலவில் இதனை உருவாக்கியுள்ளார். திரைக்கு பின்னால் இருக்கும் நடிகரின் அங்க அசைவுகளை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இந்த ரோபோவின் இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இதன் உடலில் 12 மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கொண்டு இந்த ரோபோ ஒரு தேர்ந்த நடிகரைப் போல நடிக்கிறது. இதற்கு ஜப்பானியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மொத்தத்தில், இந்த எந்திர சுந்தரியின் வருகையால் டிக்கெட் விற்பனை சக்கை போடு போடுவதால், நாடக ஏற்பாட்டாளர்கள் பயங்கர குஷியில் இருக்கிறார்கள்.

Monday, November 8, 2010

டிரைனோசரஸ் ரெக்ஸ்


ஜூராசிக் பார்க் படங்களில் நாம் பார்த்து வாயைப் பிளந்த டைனோசர்களிலேயே மிகப் பெரியது டிரைனோசரஸ் ரெக்ஸ். மிகப் பெரியது என்றால் எவ்வளவு பெரியது தெரியுமா? சராசரியாக ஒரு டிரைனோசரசின் நீளம் 43 அடி, உயரம் (எழுந்து நிற்கும் போது இடுப்பின் உயரம்) 13 அடி. எடையோ சுமார் 7 மெட்ரிக் டன்கள். இப்படி வஞ்சனை இல்லாமல் ஓங்குதாங்காக வளர்ந்ததால்தான் இதற்கு ஆய்வாளர்கள் டிரைனோசரஸ் ரெக்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். டிரைனோசரஸ்களில் நிறைய வகைகள் இருக்கின்றன. இவற்றில் ரெக்ஸ் தான் பெரியது. டிரைனோசரஸ் ரெக்ஸ் என்றால் கொடுங்கோலாட்சி புரியும் பல்லிகளின் அரசன் என்று பொருள்.

சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இவை பெருமளவில் வாழ்ந்து வந்ததாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. டைனோசர் இனம் அழியும்போது கடைசி வரை தாக்குப் பிடித்து வாழ்ந்தது இந்த டிரைனோசரஸ் ரெக்ஸ்தான். இதற்கு இரண்டு குட்டையான கைகளும், இரண்டு நீண்ட கால்களும் இருந்தன. கைகளில் தலா இரண்டு விரல்கள்தான் இருக்கும். ஆதிகாலத்தில் டைனோசர்களுக்கு கைகளில் நான்கு விரல்கள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் இது மூன்றாகி பின்னர் டிரைனோசரஸ் ரெக்ஸ் காலத்தில் இரண்டாகிவிட்டது.

மிஸ்டர் ரெக்ஸிடம் இருக்கும் மிரட்டல் அம்சங்களில் முக்கியமானது அவரது 5 அடி நீளத் தலை. அசந்தால் ஒரு மனிதனை அப்படியே ஸ்வாகா செய்துவிடுவார். இவரின் உறுதியான பற்கள் டைனோசர் போன்ற மிகப் பெரிய விலங்குகளின் எலும்புகளை கூட பொடிப்பொடியாக்கிவிடும். அசைவமான மிஸ்டர் ரெக்ஸ் தனது உணவை சொந்தமாக வேட்டையாடி சாப்பிடுவாரா, அல்லது பிற விலங்குகளை மிரட்டி அவற்றின் உணவை ஆட்டையை போடுவாரா என்பதில் ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதேபோல ரெக்ஸால் வேகமாக ஓட முடியுமா என்பதிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இதுவரை கிடைத்த கால் எலும்புகளின் தகவல்களைக் கொண்டு, 2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ரெக்ஸ் அதிகப்படியாக மணிக்கு 18 மைல் வேகத்தில்தான் ஓடியிருக்க முடியும் எனத் தெரிய வந்துள்ளது.

டிரைனோசரஸ் ரெக்ஸின் எலும்புகள் உலகம் முழுவதும் பல அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நியூயார்க், மெக்சிகோ, சிகாகோ ஆகிய இடங்களில் டிரைனோசரஸ் ரெக்சின் எலும்புகளை ஒன்றிணைத்து அதன் முழுமையான எலும்புக்கூட்டை உருவாக்கி வைத்துள்ளனர். இயற்கைப் பேரழிவுகளால் மண்ணில் இருந்து மறைந்துவிட்ட இந்த பிரம்மாண்ட உயிரினத்தை தினமும் ஏராளமானோர் விழிகளில் வியப்பு மிதக்க பார்த்துச் செல்கின்றனர்.

Monday, November 1, 2010

அடுக்குமாடிகளான ஒண்டுக்குடித்தனங்கள்


சென்னை என்றதும் அன்றைய சினிமாக்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ, எழும்பூர் ரயில் நிலையத்தையோ காட்டுவார்கள். அடுத்து மவுண்ட் ரோடு, எல்.ஐ.சி என பயணித்து மயிலாப்பூரிலோ, மந்தைவெளியிலோ ஏதாவது ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் போய் கேமரா நிற்கும். பாலச்சந்தர் படங்கள் காட்டிய ஒண்டுக்குடித்தனங்களை நாம் என்றுமே மறக்க முடியாது.

ஒண்டுக்குடித்தனங்கள் என்பது ஒரு தனி உலகம். அது தனக்கான பிரத்யேக சந்தோஷங்கள், சர்ச்சைகள், சண்டை, சச்சரவுகள், பாசப் பிணைப்புகளைக் கொண்டது. இன்றைய இளசுகள் எதிர்பார்க்கும் பிரைவசி எல்லாம் அன்றைய ஒண்டுக்குடித்தனங்களில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. புறாக் கூண்டுகள் போன்ற சின்னஞ்சிறிய அறைகளில் மனிதர்கள் அடைந்து கிடந்தார்கள். காலையில் நீண்ட வரிசையில் கழிப்பறை முன் தவிப்புடன் தவம் கிடப்பது முதல் மாலையில் கல்யாணக் கூட்டம் போல முற்றத்தில் அமர்ந்து ஊர்வம்பு பேசுவது வரை ஒண்டுக்குடித்தனம் தனக்கெனத் தனி அடையாளங்களைக் கொண்டிருந்தது.

இப்படி எலிப் பொந்தில் அடைந்து கிடந்தவர்கள் எல்லோருக்கும் கிராமங்களில் நல்ல காற்றோற்றத்துடன் கூடிய வீடுகள் இருந்தன. பசுமையான வயல்வெளி, சிலுசிலுக்கும் தென்றல் காற்று, பச்சைப் பசேலென்ற காய்கறி என அனைத்து சுகங்களையும் விட்டுவிட்டு அரசாங்க வேலை தேடி சென்னைப்பட்டினத்திற்கு வந்த நடுத்தர வர்க்கத்தினர்தான் இவர்கள்.

பட்டினத்தை நோக்கி படையெடுக்கும் இந்த போக்கு 1920களில் தொடங்கி 40களில் உச்சகட்டத்தை எட்டியது. ஆங்கிலேய அதிகாரிகளுக்கு குமாஸ்தா வேலை பார்க்க பட்டினம் வந்து படாதபாடுபட்டது இந்த ஒண்டுக்குடித்தன வர்க்கம். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து அணிஅணியாய் வந்து குவிந்த இவர்களால் சென்னை மாநகரம் மூச்சுத் திணறியது. ஒண்டுக்குடித்தனங்கள் வேகமாகப் பெருகின.

ஒரே இடத்தில் கூட்டம் குவியும்போது ஏற்படும் எல்லா அவலங்களும் ஒவ்வொன்றாக அரங்கேறின. போக்குவரத்து அதிகரித்தது, சுற்றுச்சூழல் வெகு வேகமாக மாசுபட்டது, கழிவுநீர் பாதை அடைப்பு ஏற்படுவது தினசரி வாடிக்கையானது. மழைக் காலங்களில் வீடுகளுக்குள் சாக்கடை பாய்ந்தது, தெருக்கள் குளமாயின. மயிலாப்பூர் கொசுக்கள் அலேக்காக தூக்கிக் கொண்டு போன அனுபவம் எல்லாம் நிறைய பேருக்கு ஏற்பட்டது.

மக்கள் மெல்ல மாற்றத்திற்காக ஏங்கத் தொடங்கினர். மாநகரின் நெருக்கடியில் விழி பிதுங்கியவர்கள் தப்பியோட வழி தேடினர். அப்போது நகருக்கு வெளிப்புறத்தில் இருந்த கிராமங்கள் அவர்களின் கண்களில்பட்டன. புறநகரம் என்ற ஒன்று உருவானது. அமைந்தகரை, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் போன்ற இடங்களில் ஒண்டுக்குடித்தனங்களில் காலத்தைத் தள்ளி களைத்துப் போனவர்கள் தாம்பரம் பக்கமும், திருவள்ளூர் பக்கமும் நகரத் தொடங்கினர். குரோம்பேட்டை, நங்கநல்லூர், தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர், ஆவடி போன்ற புறநகர்ப் பகுதிகள் அசுர வேகத்தில் வளர்ந்தன. இங்கிருந்த விளைநிலங்கள் எல்லாம் குடியிருப்புகளாக மாறின. விளைநிலங்கள் காலியானதும், ஏரிகளை மனிதர்கள் விழுங்கினார்கள்.

1950களில் தொடங்கிய இந்த இடப்பெயர்ச்சி 70களில் வேகம் பிடித்தது. இந்த காலகட்டத்தில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தும் வளர்ச்சி கண்டதால், புறநகர்களில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து செல்வதும் பெரிய காரியமாக தோன்றவில்லை. எனவே ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி பணியில் இருப்போரும் புறநகரங்களுக்கு இடம்பெறத் தொடங்கினர். நடுத்தர மக்கள் தங்கள் சொந்த வீட்டுக் கனவை புறநகர்களில் நனவாக்கிப் பார்த்தார்கள். இப்படியாக ஒண்டுக்குடித்தனங்கள் மெல்ல மெல்ல குறைந்து கடைசியில் காணாமல் போய்விட்டது.

ஆனால் அது தனது முகத்தை மாற்றிக் கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளாக முளைக்கத் தொடங்கியது. ஒண்டுக்குடித்தனங்கள் காலி செய்யப்பட்டு அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஃபிளாட் வாழ்க்கை என்ற மோகம் மக்களிடையே பரவியது. புறநகரையும் இது விட்டு வைக்கவில்லை. இந்த நவீன ஒண்டுக்குடித்தனத்தில் மனிதர்கள் தீவுகளாகிப் போனார்கள். பக்கத்து ஃபிளாட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதையே தெரிந்துகொள்ளாமல் வாழக் கற்றுக் கொண்டார்கள். ஒண்டுக்குடித்தன காலத்தில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியும் ஒரு சில வீடுகளில் மட்டுமே இருந்தது. அதனால் மக்கள் ஒன்றுகூடி நிகழ்ச்சிகளை ரசித்தார்கள், சேர்ந்து சிரித்தார்கள், சேர்ந்தே அழுதார்கள். ஃபிளாட் கலாச்சாரத்தில் ஒரு வீட்டிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிக்கள் இருக்கின்றன, நூற்றுக்கணக்கான சேனல்கள் இருக்கின்றன. அடுத்தவர்களுடன் பேசுவதற்கான தேவையோ, வாய்ப்போ குறைந்துவிட்டது.

'அம்மா, உறை மோர் கேட்டாங்க' என்று பக்கத்து வீட்டிற்குள் கிண்ணத்துடன் நுழையும் குழந்தைகள் பிளாட் கலாச்சாரத்தில் காணாமல் போய்விட்டார்கள். வீடியோ கேம்களில் ஆழ்ந்துவிடுவதால் அவர்கள் ஒன்றுகூடி விளையாடுவதும் அரிதாகிவிட்டது. பள்ளி மட்டும் மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பை அளிக்கிறது. பல சிரமங்கள் இருந்தாலும், விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல், மற்றவர்களுக்கு உதவுதல் என ஒண்டுக்குடித்தனங்கள் நமக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொடுத்தன. ஆனால் ஃபிளாட்டுகள் சுயநலம் தவறு அல்ல என பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஒண்டுக்குடித்தனங்களைப் பார்த்த சென்னை, இப்போது ஃபிளாட் காடுகளாக காட்சியளிக்கிறது. அடுத்த மாற்றம் என்ன? எப்போது?

Saturday, October 30, 2010

பாயும் புலி, இது பாலி புலி


கடந்த 60 ஆண்டுகளில் மூன்று புலி வகைகள் இந்த பூமியில் இருந்து மறைந்து விட்டன. அவற்றில் முக்கியமானது பாலி புலிகள். இந்த வகை புலிகள் இந்தோனேசியாவின் பாலித் தீவில் மட்டும் காணப்பட்டதால் இவற்றிற்கு பாலி புலிகள் என்றே பெயர் வந்துவிட்டது.

புலி இனத்திலேயே கடைக்குட்டி நமது பாலிதான். அதாவது பார்ப்பதற்கு மற்ற புலிகளை விட சிறியதாக இருக்கும். ஒரு ஆண் பாலி புலி சராசரியாக 90–100 கிலோ எடையும், பெண் புலி 65-80 கிலோ எடையும் இருக்கும். பாலி புலிகளை வித்தியாசப்படுத்தி காட்டும் மற்றொரு அம்சம், இவற்றின் உடலில் மற்ற புலிகளைக் காட்டிலும் கோடுகள் குறைவாக இருக்கும். சில புலிகளின் உடலில் கோடுகளுக்கு இடையில் கரும்புள்ளிகளும் காணப்படும்.

நம்மூர் ஆட்களைப் போலவே பாலி மக்களுக்கும் புலி நகம் கோர்த்த டாலர், புலிப் பல் போன்றவற்றின் மீது எப்போதும் ஒரு கண் உண்டு. அதீத சக்திகள் கிடைக்கும் என்பது போன்ற மூடநம்பிக்கைகள் காரணமாகவும், கௌரவச் சின்னமாக கருதியும் புலியின் உறுப்புகளை அவர்கள் விரும்பி அணிந்தனர்.

பாலி மக்களின் இந்த மோகம் தான் பாலி புலிகளுக்கு எமனாக அமைந்துவிட்டது. நகைகளுக்காகவும், தோலுக்காகவும் மனிதர்கள் தொடர்ந்து வேட்டையாடியதில் சின்னஞ் சிறிய தீவில் இருந்த ஒட்டுமொத்த பாலி புலிகளும் பரலோகம் போய் சேர்ந்துவிட்டன. கடைசி பாலி புலி 1937ஆம் ஆண்டு கொல்லப்பட்டது.

Friday, October 29, 2010

2010 உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

நண்பர் பிரேம் சந்துரு எழுதியிருக்கும் இந்த பதிவை, வெளியிடுவதில் போதி பெருமை கொள்கிறது.

CNN இணையதளத்தில்திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் ,துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக ,தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். (சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNNஇணையதளத்தில்) அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்றCNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக,மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன் வயது : 29 இருப்பு : மதுரை அப்படி என்ன செய்து விட்டார்? அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல். தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார்.

இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட. நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ.

சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே. ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம் மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள்.

நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம் (சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்) இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். (சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்)

நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க கீழ்கண்ட இணையதளத்திற்கு சென்று வாக்களிக்கலாம். நவம்பர் 18-ம் தேதிக்குள் வாக்கை செலுத்த வேண்டும்.

http://heroes.cnn.com/vote.aspx

நாராயணன் கிருஷ்ணனின் அட்சயா டிரஸ்ட்டின் இணையதளம்.

http://www.akshayatrust.org/

இவரைப்பற்றி சிஎன்என் வெளியிட்டுள்ள ஆங்கிலக் கட்டுரை: Once a rising star, chef now feeds hungry

கிருஷ்ணனின் தொலைபேசி: +91 (0) 452 4353439 / 2587104 செல்பேசி:+91 98433 19933

இமெயில்: ramdost@sancharnet.in

Wednesday, October 27, 2010

பிரம்மாண்ட கடல் தேள்


புராணத் திரைப்படங்களில் சில கதாபாத்திரங்கள் திடீரென விண்ணை முட்டும் அளவுக்கு விஸ்வரூபம் எடுப்பதைப் பார்த்து பிரமித்திருக்கிறோம். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களைப் போன்ற உயிரினங்கள் பல அடி உயரத்திற்கு வாட்டசாட்டமாக வலம் வந்திருப்பதைப் பற்றி புத்தகங்களில் படித்து வியந்திருக்கிறோம். ஆனால் இன்று குட்டியூண்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு உயிரினம், சுமார் 39 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்போதிருப்பதை விட பல மடங்கு பெரிதாக இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?

நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார்கள் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் ஜெர்மனியில் பிரம் என்ற இடத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து பிரம்மாண்ட தேளின் கொடுக்கின் புதை படிவத்தை கண்டெடுத்துள்ளனர். இந்த கொடுக்கின் நீளம் எவ்வளவு தெரியுமா? 46 செ.மீ. சுமார் 39 ஆண்டுகள் பழைமையான பாறை ஒன்றை ஆய்வு செய்தபோதுதான் இந்த பிரம்மாண்ட கொடுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து இந்த கொடுக்கிற்கு சொந்தக்காரரான மிஸ்டர். தேள், சுமார் 8 அடி இருந்திருப்பார் எனக் கணக்கிட்டுள்ளனர். அதாவது நமக்கு பக்கத்தில் நின்றால் நாம் அவரை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். தரையில் குனிந்து தேடும் தேளை, அண்ணாந்து பார்க்கும் அனுபவத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த வகை தேள்கள் டைனோசர்கள் காலத்திற்கும் முந்தையவை என்றும், அவை கடலில் வாழ்ந்தவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கடல் தேள்கள் பல லட்சம் ஆண்டுகள் பூமியில் வலம் வந்திருக்கின்றன. பின்னர் காலப்போக்கில் மிகப் பெரிய மீன் வகையால் இவை அழிக்கப்பட்டதாக ஜெர்மனியின் பிரிபெர்க் மைனிங் அகாடமியைச் சேர்ந்த தொல்லியலாளரும், பேராசிரியருமான ஜார்ஜ் சச்னேடர் தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் இருந்த இயற்கைச் சூழல், வாழ்க்கை முறை காரணமாக பல உயிரினங்கள் வஞ்சனையில்லாமல் வளர்ந்து ஓங்குதாங்காக உலா வந்திருக்கலாம் என்றும், இந்த நிலை மாற மாற அவற்றின் உருவத்திலும் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த கடல் தேளைப் போன்றே அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அட்டைப் பூச்சி, கரப்பான்பூச்சி, பொன்வண்டு போன்ற உயிரினங்களும் இப்போதிருப்பதைவிட பன்மடங்கு வளர்ச்சியுடன் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தால், உலகமே நமக்குத் தான் சொந்தம் என்ற அறியாமையில் அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் மனிதர்களின் நிலை என்ன ஆகும்? நினைத்துப் பார்த்தால், பயங்கரமான ஆங்கிலத் திரைப்படம் பார்த்த திகில் தான் மிஞ்சுகிறது.

Monday, October 25, 2010

மெகா மான்


மான் என்றதும் கன்றுக்குட்டி போல இருக்கும், ஆளைப் பார்த்தால் மருண்டு ஓடும் என்று தான் இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் யானை அளவுக்கு பிரம்மாண்டமான மான்கள் இந்த பூமியில் ஒரு காலத்தில் கம்பீரமாக வலம் வந்திருக்கின்றன. ஆனால் இன்று அவை முற்றிலுமாக அழிந்துவிட்டன.

ஐரிஷ் மான் (Irish Deer) எனப்படும் ஒரு வகை மான், சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டத்தில் உள்ள பல நாடுகளிலும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. குறிப்பாக அயர்லாந்தில் அதிகளவில் காணப்பட்டதால், ஐரிஷ் மான் என்று பெயர் வைத்துவிட்டார்கள். இது எழுந்து நின்றால் சுமார் 7 அடி உயரம் இருக்கும். இதனால் இதனை ராட்சத மான் என்றும் அழைக்கிறார்கள். என்னதான் ராட்சத மானாக இருந்தாலும் இவையும் இன்றைய மான்களைப் போல சுத்த சைவம் தான். காடுகளில் இருந்த செடி, கொடிகளையும், புற்களையும் தான் மேய்ந்து கொண்டிருந்தன.

இதன் சிறப்பம்சமே கொம்புகள்தான். ஐரிஷ் மானின் கொம்புகள் மிகவும் நீளமானவை. வளைந்து, நெளிந்து பல டிசைன்களில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஒரு கொம்பின் முனையில் இருந்து மறு கொம்பின் முனை வரை அதிகபட்சமாக 12 அடி நீளம் இருக்குமாம். இப்படிப்பட்ட பிரம்மாண்ட கொம்புகளுடன், 7 அடி உயரத்தில், அட்டகாசமாக வலம் வந்து கொண்டிருந்த இவ்வகை மான்கள் சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக அழிந்துபோனதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அயர்லாந்தின் பல இடங்களில் கிடைத்த இதன் எலும்புகளை கார்பன் டேட்டிங் (Carbon Dating) முறையில் ஆய்வு செய்ததில், அவை 7,700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவை எனத் தெரிய வந்துள்ளது. இவை எவ்வாறு பூமியில் இருந்து மறைந்து போயின என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அக்காலத்தில் ஆற்றங்கரை ஓரங்களில் வாழ்ந்து வந்த மனிதர்கள், தண்ணீர் குடிக்க வந்த மான்களை வேட்டையாடியே இந்த இனத்தை அழித்திருக்கலாம் என்றும், பருவ மாற்றத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் இவை கூட்டம் கூட்டமாக இறந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவற்றின் கொம்புகள் நீண்டு கிளை பரப்பி பல அடி தூரம் வளர்ந்து விடுவதால், காடுகளில் மரங்களுக்கு இடையில் எளிதில் புகுந்து புறப்பட்டு செல்ல முடியாமல், மற்ற கொடிய விலங்குகளின் வேட்டைக்கு பலியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஐரிஷ் மானின் ஏராளமான எலும்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் இவற்றை விழிகள் விரிய வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

Friday, October 22, 2010

ஜோதிடத்தால் மாறிய தேசியக் கொடி


உலக அரசியல்வாதிகள் எத்தனையோ அட்டகாசங்களை அரங்கேற்றுகிறார்கள். அவற்றில் சில அட போட வைக்கும், சில தலையில் அடித்துக் கொள்ள வைக்கும். இது எந்த ரகம் என்று நீங்களே சொல்லுங்கள்..

ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மர் நாட்டில், 20 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற வேண்டுமென்றால், தேசத்தின் பெயரையும், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மாற்ற வேண்டும் என யாரோ ஒரு ஜோதிடன் கொளுத்திப் போட்டு விட்டான். இதனை அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர்களும் நம்பியது தான் கொடுமை.

அப்புறம் என்ன, ராணுவ கோமாளிகள் அந்த ஜோதிடனின் ஆலோசனையை நிறைவேற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இதனையடுத்து union of myanmar, இனிமேல் republic of the union of myanmar என்று அழைக்கப்படும். சிவப்பு வண்ணத்தில் நட்சத்திரங்கள் புடை சூழ இருந்த கொடி, இப்போது மஞ்சள், பச்சை, சிவப்பு என மூவர்ணக் கொடியாக மாறியிருக்கிறது. நடுவில் ஒரு (நம்பிக்கை!) நட்சத்திரம்.


கொடியை மாற்றியதுடன் இந்த காமெடி நிற்கவில்லை. பழைய கொடியை செவ்வாய்கிழமை பிறந்த ஒருவர்தான் இறக்க வேண்டும், புதிய கொடியை புதன்கிழமை பிறந்த ஒருவர் ஏற்ற வேண்டும் என்று பரிகாரப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

ஆனால் இந்த மாற்றங்கள் எதற்கும் முறையான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

புதிய பெயர், புதிய கொடி, புதிய தேசிய கீதம் எல்லாம் கிடைத்துவிட்டது... அப்படியே புதிய ஜனநாயக அரசு கிடைத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் மியான்மர் பொதுமக்கள்.

புகைப்படம் : புதிய கொடி

Thursday, October 21, 2010

ஆகாயத்தில் அரங்கேறிய கொலை


ஒரு முக்கோணக் காதல்... அந்தரத்தில் முடிந்த கதை...

க்ளோடிமான் (Clotteman) என்கிற பள்ளி ஆசிரியையும், அவரது தோழி வான் டோரனும் உள்ளூர் flying club-ல் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களின் குழு கடந்த 2006ஆம் ஆண்டு சிறிய விமானம் ஒன்றில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தது. 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த அக்குழுவினர் அனைவரின் பாராசூட்களும் முறையாக இயங்க, வான் டோரனின் பாராசூட் மட்டும் கடைசி வரை இயங்கவில்லை.

பாதுகாப்பிற்காக வைத்திருந்த இன்னொரு பாராசூட்டும் காலை வாரிவிட்டது. அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததல் அவர் தரையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். டோரனின் துரதிர்ஷ்டத்தை எண்ணி நண்பர்கள் வருந்தினர். ஆனால் பிறகு நடந்த விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

முதற்கட்ட விசாரணையில் அவரது பாராசூட் சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்ட இரண்டாவது பாராசூட்டும் சேதமடைந்திருந்தது சந்தேகத்தை வலுவடையச் செய்த்து. போலீசார் தோண்டித் துருவி விசாரித்ததில் சிக்கினார் க்ளோடிமான்.

தனது காதலனை டோரனும் காதலித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு அவரது பாராசூட்களை சேதப்படுத்தியதாக க்ளோடிமான் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவர் குற்றவாளி என அறிவித்துள்ள நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம் எனத் தெரிகிறது.


புகைப்படம் : க்ளோடிமான்

Monday, October 11, 2010

விடாக்கண்டன் கொடாக்கண்டன்

ஒரு விஷயம் சரியா இருக்கும்போதே, தப்பா இருக்கும். அதேபோல ஒரு விஷயம் தப்பா இருக்கும்போதே, சரியா இருக்கும். இதைத் தான் ஆங்கிலத்தில் பேரடாக்ஸ் (Paradox) என்கிறார்கள்.

ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதையை சொன்னால் இதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அந்தக் காலத்தில் ஒரு வாத்தியார் இருந்தார். அவர் வாதம் புரியும் கலையில் கில்லாடி. அதனால் பல ஊர்களில் இருந்தும் நிறைய பேர் வந்து அவரிடம் படித்து பாரிஸ்டர் பட்டம் வாங்கிக் கொண்டு போவார்கள். அப்புறம் அவங்கவங்க ஊர் ஆலமரத்தடி முதல் நீதிமன்றம் வரை வழக்காடி சூப்பரா கல்லா கட்டுவாங்க. அவரது மாணவர்களை யாராலும் அவ்வளவு சுலபத்தில் வழக்காடி ஜெயித்துவிட முடியாது.

ஒருநாள் காலையில் ஒரு பையன் அவர் வீட்டு வாசல்ல வந்து பாடம் கத்துக்கணும்னு நின்னான். நம்மாளு ஃபீஸை சொன்னாரு. பையன் மிரண்டு போயிட்டான். ஐயா, இப்போதைக்கு அவ்வளவு பணம் என்கிட்டே கிடையாது. வேணும்னா ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம்னான். அதாவது, நான் படிச்சு முடிச்சு போனதும் எடுத்துக்கிற முதல் கேசுல ஜெயிச்சா நீங்க கேட்ட ஃபீஸை உடனே கொடுத்துடுவேன், தோத்துட்டா கொடுக்க மாட்டேன், ஓ.கே.வான்னான் பையன். நம்ம சிஷ்யன் நிச்சயம் தோற்க மாட்டான்ற தைரியத்துல ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கிட்டார் குரு.

பையன் நல்லா படிச்சான், கோர்ஸை முடிச்சான், ஊருக்கு போயிட்டான். ஆனா பல மாசம் ஓடியும் காசு மட்டும் வரலே. கடுதாசி போட்டுப் பார்த்தாரு குரு. பதில் கடுதாசி தான் வந்தது. ஐயா, நான் இன்னும் கேஸே எடுத்துக்கல. முதல் கேஸ் வரட்டும் பார்க்கலாம்னுட்டான் அந்த தில்லாலங்கடி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குரு ஒருகட்டத்திலே வெறுத்துப் போய் அவன் மேலேயே ஒரு கேஸைப் போட்டார். இவன் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காம ஏமாத்துறான்றதுதான் கேஸ்.

பையன் அவன் சார்பா அவனே ஆஜரானான். இதுதான் அவன் ஆஜராகும் முதல் கேஸ். குருவுக்கு பணம் தரணும்ன்னு நீதிபதி தீர்ப்பு சொல்லிட்டா, பையன் கேஸ்ல தோத்துருவான். அதனால ஒப்பந்தப்படி பணம் தரத் தேவையில்லை. தர வேண்டாம்னு சொல்லிட்டா, அதுதான் நீதிபதியே சொல்லிட்டாருல்லன்னு நடையை கட்டிருவான். ஆக, எப்படி பார்த்தாலும் பணம் தர முடியாதுன்னுட்டான் அந்த கில்லாடி கில்மா.

குரு லேசுப்பட்டவரா? நீதிபதி பணம் தரச் சொன்னா, தீர்ப்புப்படி பணம் தரணும். தர வேண்டாம்னு சொன்னா, நீ மொத கேஸ்ல ஜெயிச்சுருவ, அதனால ஒப்பந்தப்படி பணம் தரணும். ஆக எப்படி பார்த்தாலும் பணம் தரணும் மகனேன்னாரு.

இரண்டு பேரும் இப்படி கிடுக்கிப்பிடி போடுவதை பார்த்த நீதிபதி பாவம் என்ன பண்ணுவாரு. மயங்கி விழுந்திட்டாரு. இப்போ புரியுதா, இதுதான் பேரடாக்ஸ்.

Thursday, October 7, 2010

ஆதித்த சோழனைத் தேடி....






ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை தேடிப் போனால் என்னவெல்லாம் நடக்கும்? அதெல்லாம் எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. ஆனால் நான் தேடிப் போன மனிதர் சாதாரணமானவரல்ல. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தவர். இருப்பினும் அவரை கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது.

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை இம்மாதம் தமிழக அரசு விழா எடுத்து கொண்டாடுகிறது. அதனைக் கட்டிய ராஜராஜ சோழனை எல்லோரும் நினைவு கொள்கிறார்கள். ஆனால் இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த மாமனிதன் காலத்தால் மறக்கப்பட்டு விட்டான். அவனைத் தேடியே நீண்டது என் பயணம். முற்கால சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, சோழர்கள் வெறும் சிற்றரசர்களாக சிறுத்துப் போன நிலையில் பழம்பெருமையை மீட்டெடுத்தவன் தான் அந்த மாமனிதன், ஆதித்த சோழன் (கி.பி 871 - 907).

பிற்கால சோழர்களின் முதல் அரசனான விஜயாலய சோழனின் மகன். பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் திருப்புறம்பியத்தில் நடைபெற்ற போர் தமிழகத்தின் வரலாற்றையே புரட்டிப் போட்டது. இதில் விஜயாலயன் சார்பில் பல்லவன் அபராஜித வர்மனுடன் இணைந்து போர்க்களத்தில் சூறைக் காற்றாய் சுழன்றடித்து பாண்டியவர்களை தோற்கடித்தவன் ஆதித்தன். அதற்கு பரிசாய் பல்லவன் சோழர்களின் பகுதியையும், பாண்டியப் பகுதியையும் ஆதித்தனுக்கு வழங்கினான்.

ரத்தம் பார்த்த புலி சும்மா இருக்குமா, அபராஜித வர்மனுடன் போரிட்டு 500 ஆண்டுகள் நீடித்த பல்லவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் ஆதித்தன். இன்றைய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தை முதன்முதலில் சோழ மண்டலத்துடன் சேர்த்து சோழப் பேரரசை நிறுவினான்.

இவன் சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இரு கரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயில்களை சிவனுக்கு எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் உன்னதக் கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான் என்றும், அங்கு அவனது அஸ்தியின் மீது கட்டப்பட்ட பள்ளிப்படை கோவில் ஒன்று உள்ளது என்றும் கேள்விப்பட்டேன்.

அந்த பேரரசனைத் தேடி ஒருநாள் அதிகாலையிலேயே புறப்பட்டேன். முதலில் தொண்டைமானாற்றூர் எங்கு இருக்கிறது என்று விசாரித்ததில் காளஹஸ்திக்கு அருகில் இருப்பதாக சொன்னார்கள். புத்தூர் வழியாக சென்றால் காளஹஸ்திக்கு முன்பே இந்த ஊர் வந்துவிடும் என்றார்கள்.

தொண்டைமான் ஆற்றூரை இப்போது தொண்டமானாடு என்று அழைக்கிறார்கள். ஒருவழியாக தொண்டமானாட்டை கண்டுபிடித்து விட்டேன். ஆனால் அங்கு விசாரித்தபோது யாருக்கும் ஆதித்தனைப் பற்றித் தெரியவில்லை. அருகில் உள்ள பொக்கசம்பாளையம் (பொக்கிஷம்பாளையம்) என்ற ஊரில் பழைய சிவன் கோவில் ஒன்று இருப்பதாக மட்டும் சொன்னார்கள். அநேகமாக நான் தேடும் கோவில் அதுவாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் நேராக வண்டியை அங்கே செலுத்தினேன். தூரத்தில் இருந்து பார்த்தபோதே, நம்பிக்கை வந்துவிட்டது. ஆம், நான் தேடிய கோவில் நிச்சயம் இதுவாகத் தான் இருக்க வேண்டும். காலத்தின் அத்தனை சோதனைகளையும் எதிர்கொண்டதன் சாட்சியாய் சிதிலமடைந்தபடி நின்று கொண்டிருந்தது ஒரு சிறிய சிவாலயம்.

கோவில் குருக்களிடம் தல புராணம் பற்றி கேட்டேன். ராமர் ராவணனை வீழ்த்தி விட்டு இலங்கையில் இருந்து அயோத்திக்கு செல்லும் வழியில் இங்கும் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார் என்றார். ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில் என்று சொல்கிறார்களே... என்று இழுத்தேன். மெல்ல என்னை அருகில் அழைத்த கோவில் குருக்கள், நீங்கள் சொல்ற கோவில் இதுதான். ஆனால் அஸ்தி மேல லிங்கம் வைத்து கோவில் கட்டியிருக்குன்னு சொன்னால் மக்கள் வரத் தயங்குறாங்க, அதுதான் அந்த கதையை வெளியில் சொல்றதில்லை என்று உண்மையை போட்டு உடைத்தார்.

ஒரு காலத்தில் ஆதித்த சோழனின் தொண்டை மண்டல வடபகுதி கஜானாவாக இந்த ஊர் திகழ்ந்திருக்கிறது என்றார் வரலாற்று ஆர்வலர்கள் குழு என்ற குழுவை நிறுவி சோழர் வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திரு. ராமச்சந்திரன். அதனால் தான் பொக்கிஷம்பாளையம் என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார். அதுபோன்று வசூலிக்கப்பட்ட வரியை வாங்கிச் செல்ல வந்த போதுதான், காய்ச்சல் வந்து ஆதித்த சோழன் இறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவனது நினைவைப் போற்றும் வகையில் அவனது மகன் முதலாம் பராந்தகன், ஆதித்தனின் அஸ்தியின் மீது இந்த பள்ளிப்படைக் கோவிலைக் கட்டியிருக்கிறான். இது கோதண்ட ராமேச்வரம் என்றும் ஆதித்தேச்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் காணப்படுகிறது. அதிலிருந்து கோயிலைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்தவும் வகை செய்யப்பட்டது. ஆனால் காலப்போக்கில் நின்றுவிட்ட இந்த வழக்கத்தை மீண்டும் தொடங்கும் முயற்சியில் திரு. ராமச்சந்திரன் ஈடுபட்டிருக்கிறார்.

தஞ்சை பெரிய கோவிலை கட்டி கட்டிடக் கலையில் உயர்ந்து நிற்கும், பிற்கால சோழர்களின் ஆரம்ப கால கட்டிடக் கலைக்கு இந்த கோவில் ஒரு சிறந்த உதாரணம். அதனாலேயே சுமார் 1100 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்றும் இந்த கோவில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது.

இப்போதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டு பிற்காலத்தில் கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. காளஹஸ்தி கோவில் நிர்வாகம் தற்போது இந்த கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. காளஹஸ்தி கோவிலுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் இப்படி ஒரு புராதன வரலாற்று சிறப்பு மிக்க கோவில் இருப்பது இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே என்ற ஏக்கத்துடன் கோவிலை சுற்றிவிட்டு வெளியில் வந்தேன். உள்ளே இருந்தபடி ஆதித்த சோழன் எனக்கு விடைகொடுத்தான்.

நன்றி : புதிய தலைமுறை

Monday, October 4, 2010

குகைக் கரடி


ஐரோப்பாவில் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரம்மாண்ட உயிரினங்களில் ஒன்றுதான் குகைக் கரடி. இவை இன்றைய கரடிகளை விட பெரிதாக இருக்கும். அதாவது 12 அடி உயரமும், சுமார் 500 கிலோ எடையும் இருக்கும். இந்த எடை ஆண் கரடிகளுக்கு தான் பொருந்தும், பெண் கரடிகள் வெறும் 250 கிலோ எடை தான் இருக்கும். இந்த வகை கரடிகள் பெரும்பாலும் குகைகளிலேயே வாழ்ந்ததால்தான் அவற்றிற்கு குகைக் கரடி என பெயர் கொடுத்து விட்டார்கள்.

இந்த கரடிகள் ஐரோப்பா கண்டத்தில் ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம், பெல்ஜியம், ஹங்கேரி, ரோமானியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தன. பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளின் சில பகுதிகளிலும் இவை வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. மேலே குறிப்பிட்ட நாடுகளில் உள்ள குகைகளில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கான குகைக் கரடி எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. ரோமானியாவில் கரடிக் குகை என்றே ஒரு குகை உள்ளது. இங்கிருந்து மட்டும் 1983ஆம் ஆண்டு 140 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

2005ஆம் ஆண்டு மே மாதம் கலிபோர்னிய விஞ்ஞானிகள் சிலர் இந்த கரடிகளின் டி.என்.ஏ.க்களை ஆய்வு செய்து பல அரிய தகவல்களை வெளிக் கொண்டு வந்தனர். இவை பெரும்பாலும் புல், காய்கறி, செடி போன்ற சைவ உணவுகளையும், அரிதாக சிறு விலங்குகளையும் உட்கொண்டு வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றின் அழிவுக்கும் இதையே காரணம் காட்டுகின்றனர். இந்த வகை கரடிகள் சுமார் 27,800 ஆண்டுகளுக்கு முன் முற்றிலுமாக அழிந்துவிட்டன. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்கள் காரணமாக தாவரங்கள் வளர்வது கடுமையாக பாதிக்கப்பட்டதால், உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தே இந்த இனம் அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இதனை சில ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு முன்பே இதுபோன்ற பருவநிலை மாற்றங்களை குகைக் கரடிகள் சந்தித்திருப்பதால், இவை அவற்றின் அழிவிற்கு காரணமாக இருக்க முடியாது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்கள் வேட்டையாடியே இந்த கரடிகளை கொன்றிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் வேறு ஒரு சாரார் இதனை கடுமையாக மறுக்கின்றனர். அதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் இரண்டு. முதல் காரணம், சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் எண்ணிக்கையே மிகக் குறைவு. இரண்டாவது காரணம்தான் மிக முக்கியமானது.

குகைக் கரடிகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பல குகைகளில் அவற்றின் ஓவியங்கள் பாறைகளில் வரையப்பட்டுள்ளன. மேலும் இவற்றின் எலும்புகளும் குகைகளில் குறிப்பிட்ட வடிவத்தில் பரப்பிப் போடப்பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது அக்கால நியாண்டர்தால் மனிதர்கள் குகைக் கரடிகளை தெய்வமாக வணங்கியிருக்க வேண்டும் என இந்த ஆய்வாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர். குகைக் கரடிகள் அழிந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இந்த வாதங்கள் முற்றுப் பெறாமல் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.