என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Monday, November 1, 2010

அடுக்குமாடிகளான ஒண்டுக்குடித்தனங்கள்


சென்னை என்றதும் அன்றைய சினிமாக்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ, எழும்பூர் ரயில் நிலையத்தையோ காட்டுவார்கள். அடுத்து மவுண்ட் ரோடு, எல்.ஐ.சி என பயணித்து மயிலாப்பூரிலோ, மந்தைவெளியிலோ ஏதாவது ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் போய் கேமரா நிற்கும். பாலச்சந்தர் படங்கள் காட்டிய ஒண்டுக்குடித்தனங்களை நாம் என்றுமே மறக்க முடியாது.

ஒண்டுக்குடித்தனங்கள் என்பது ஒரு தனி உலகம். அது தனக்கான பிரத்யேக சந்தோஷங்கள், சர்ச்சைகள், சண்டை, சச்சரவுகள், பாசப் பிணைப்புகளைக் கொண்டது. இன்றைய இளசுகள் எதிர்பார்க்கும் பிரைவசி எல்லாம் அன்றைய ஒண்டுக்குடித்தனங்களில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. புறாக் கூண்டுகள் போன்ற சின்னஞ்சிறிய அறைகளில் மனிதர்கள் அடைந்து கிடந்தார்கள். காலையில் நீண்ட வரிசையில் கழிப்பறை முன் தவிப்புடன் தவம் கிடப்பது முதல் மாலையில் கல்யாணக் கூட்டம் போல முற்றத்தில் அமர்ந்து ஊர்வம்பு பேசுவது வரை ஒண்டுக்குடித்தனம் தனக்கெனத் தனி அடையாளங்களைக் கொண்டிருந்தது.

இப்படி எலிப் பொந்தில் அடைந்து கிடந்தவர்கள் எல்லோருக்கும் கிராமங்களில் நல்ல காற்றோற்றத்துடன் கூடிய வீடுகள் இருந்தன. பசுமையான வயல்வெளி, சிலுசிலுக்கும் தென்றல் காற்று, பச்சைப் பசேலென்ற காய்கறி என அனைத்து சுகங்களையும் விட்டுவிட்டு அரசாங்க வேலை தேடி சென்னைப்பட்டினத்திற்கு வந்த நடுத்தர வர்க்கத்தினர்தான் இவர்கள்.

பட்டினத்தை நோக்கி படையெடுக்கும் இந்த போக்கு 1920களில் தொடங்கி 40களில் உச்சகட்டத்தை எட்டியது. ஆங்கிலேய அதிகாரிகளுக்கு குமாஸ்தா வேலை பார்க்க பட்டினம் வந்து படாதபாடுபட்டது இந்த ஒண்டுக்குடித்தன வர்க்கம். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து அணிஅணியாய் வந்து குவிந்த இவர்களால் சென்னை மாநகரம் மூச்சுத் திணறியது. ஒண்டுக்குடித்தனங்கள் வேகமாகப் பெருகின.

ஒரே இடத்தில் கூட்டம் குவியும்போது ஏற்படும் எல்லா அவலங்களும் ஒவ்வொன்றாக அரங்கேறின. போக்குவரத்து அதிகரித்தது, சுற்றுச்சூழல் வெகு வேகமாக மாசுபட்டது, கழிவுநீர் பாதை அடைப்பு ஏற்படுவது தினசரி வாடிக்கையானது. மழைக் காலங்களில் வீடுகளுக்குள் சாக்கடை பாய்ந்தது, தெருக்கள் குளமாயின. மயிலாப்பூர் கொசுக்கள் அலேக்காக தூக்கிக் கொண்டு போன அனுபவம் எல்லாம் நிறைய பேருக்கு ஏற்பட்டது.

மக்கள் மெல்ல மாற்றத்திற்காக ஏங்கத் தொடங்கினர். மாநகரின் நெருக்கடியில் விழி பிதுங்கியவர்கள் தப்பியோட வழி தேடினர். அப்போது நகருக்கு வெளிப்புறத்தில் இருந்த கிராமங்கள் அவர்களின் கண்களில்பட்டன. புறநகரம் என்ற ஒன்று உருவானது. அமைந்தகரை, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் போன்ற இடங்களில் ஒண்டுக்குடித்தனங்களில் காலத்தைத் தள்ளி களைத்துப் போனவர்கள் தாம்பரம் பக்கமும், திருவள்ளூர் பக்கமும் நகரத் தொடங்கினர். குரோம்பேட்டை, நங்கநல்லூர், தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர், ஆவடி போன்ற புறநகர்ப் பகுதிகள் அசுர வேகத்தில் வளர்ந்தன. இங்கிருந்த விளைநிலங்கள் எல்லாம் குடியிருப்புகளாக மாறின. விளைநிலங்கள் காலியானதும், ஏரிகளை மனிதர்கள் விழுங்கினார்கள்.

1950களில் தொடங்கிய இந்த இடப்பெயர்ச்சி 70களில் வேகம் பிடித்தது. இந்த காலகட்டத்தில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தும் வளர்ச்சி கண்டதால், புறநகர்களில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து செல்வதும் பெரிய காரியமாக தோன்றவில்லை. எனவே ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி பணியில் இருப்போரும் புறநகரங்களுக்கு இடம்பெறத் தொடங்கினர். நடுத்தர மக்கள் தங்கள் சொந்த வீட்டுக் கனவை புறநகர்களில் நனவாக்கிப் பார்த்தார்கள். இப்படியாக ஒண்டுக்குடித்தனங்கள் மெல்ல மெல்ல குறைந்து கடைசியில் காணாமல் போய்விட்டது.

ஆனால் அது தனது முகத்தை மாற்றிக் கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளாக முளைக்கத் தொடங்கியது. ஒண்டுக்குடித்தனங்கள் காலி செய்யப்பட்டு அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஃபிளாட் வாழ்க்கை என்ற மோகம் மக்களிடையே பரவியது. புறநகரையும் இது விட்டு வைக்கவில்லை. இந்த நவீன ஒண்டுக்குடித்தனத்தில் மனிதர்கள் தீவுகளாகிப் போனார்கள். பக்கத்து ஃபிளாட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதையே தெரிந்துகொள்ளாமல் வாழக் கற்றுக் கொண்டார்கள். ஒண்டுக்குடித்தன காலத்தில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியும் ஒரு சில வீடுகளில் மட்டுமே இருந்தது. அதனால் மக்கள் ஒன்றுகூடி நிகழ்ச்சிகளை ரசித்தார்கள், சேர்ந்து சிரித்தார்கள், சேர்ந்தே அழுதார்கள். ஃபிளாட் கலாச்சாரத்தில் ஒரு வீட்டிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிக்கள் இருக்கின்றன, நூற்றுக்கணக்கான சேனல்கள் இருக்கின்றன. அடுத்தவர்களுடன் பேசுவதற்கான தேவையோ, வாய்ப்போ குறைந்துவிட்டது.

'அம்மா, உறை மோர் கேட்டாங்க' என்று பக்கத்து வீட்டிற்குள் கிண்ணத்துடன் நுழையும் குழந்தைகள் பிளாட் கலாச்சாரத்தில் காணாமல் போய்விட்டார்கள். வீடியோ கேம்களில் ஆழ்ந்துவிடுவதால் அவர்கள் ஒன்றுகூடி விளையாடுவதும் அரிதாகிவிட்டது. பள்ளி மட்டும் மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பை அளிக்கிறது. பல சிரமங்கள் இருந்தாலும், விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல், மற்றவர்களுக்கு உதவுதல் என ஒண்டுக்குடித்தனங்கள் நமக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொடுத்தன. ஆனால் ஃபிளாட்டுகள் சுயநலம் தவறு அல்ல என பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஒண்டுக்குடித்தனங்களைப் பார்த்த சென்னை, இப்போது ஃபிளாட் காடுகளாக காட்சியளிக்கிறது. அடுத்த மாற்றம் என்ன? எப்போது?

1 comment:

  1. நல்ல பகிர்வு. அடுத்து நிலவு பயணம் தான்... அல்லது செவ்வாய் நோக்கிய குடியிருப்புகள் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete