ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை தேடிப் போனால் என்னவெல்லாம் நடக்கும்? அதெல்லாம் எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. ஆனால் நான் தேடிப் போன மனிதர் சாதாரணமானவரல்ல. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தவர். இருப்பினும் அவரை கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது.
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை இம்மாதம் தமிழக அரசு விழா எடுத்து கொண்டாடுகிறது. அதனைக் கட்டிய ராஜராஜ சோழனை எல்லோரும் நினைவு கொள்கிறார்கள். ஆனால் இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த மாமனிதன் காலத்தால் மறக்கப்பட்டு விட்டான். அவனைத் தேடியே நீண்டது என் பயணம். முற்கால சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, சோழர்கள் வெறும் சிற்றரசர்களாக சிறுத்துப் போன நிலையில் பழம்பெருமையை மீட்டெடுத்தவன் தான் அந்த மாமனிதன், ஆதித்த சோழன் (கி.பி 871 - 907).
பிற்கால சோழர்களின் முதல் அரசனான விஜயாலய சோழனின் மகன். பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் திருப்புறம்பியத்தில் நடைபெற்ற போர் தமிழகத்தின் வரலாற்றையே புரட்டிப் போட்டது. இதில் விஜயாலயன் சார்பில் பல்லவன் அபராஜித வர்மனுடன் இணைந்து போர்க்களத்தில் சூறைக் காற்றாய் சுழன்றடித்து பாண்டியவர்களை தோற்கடித்தவன் ஆதித்தன். அதற்கு பரிசாய் பல்லவன் சோழர்களின் பகுதியையும், பாண்டியப் பகுதியையும் ஆதித்தனுக்கு வழங்கினான்.
ரத்தம் பார்த்த புலி சும்மா இருக்குமா, அபராஜித வர்மனுடன் போரிட்டு 500 ஆண்டுகள் நீடித்த பல்லவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் ஆதித்தன். இன்றைய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தை முதன்முதலில் சோழ மண்டலத்துடன் சேர்த்து சோழப் பேரரசை நிறுவினான்.
இவன் சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இரு கரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயில்களை சிவனுக்கு எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் உன்னதக் கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான் என்றும், அங்கு அவனது அஸ்தியின் மீது கட்டப்பட்ட பள்ளிப்படை கோவில் ஒன்று உள்ளது என்றும் கேள்விப்பட்டேன்.
அந்த பேரரசனைத் தேடி ஒருநாள் அதிகாலையிலேயே புறப்பட்டேன். முதலில் தொண்டைமானாற்றூர் எங்கு இருக்கிறது என்று விசாரித்ததில் காளஹஸ்திக்கு அருகில் இருப்பதாக சொன்னார்கள். புத்தூர் வழியாக சென்றால் காளஹஸ்திக்கு முன்பே இந்த ஊர் வந்துவிடும் என்றார்கள்.
தொண்டைமான் ஆற்றூரை இப்போது தொண்டமானாடு என்று அழைக்கிறார்கள். ஒருவழியாக தொண்டமானாட்டை கண்டுபிடித்து விட்டேன். ஆனால் அங்கு விசாரித்தபோது யாருக்கும் ஆதித்தனைப் பற்றித் தெரியவில்லை. அருகில் உள்ள பொக்கசம்பாளையம் (பொக்கிஷம்பாளையம்) என்ற ஊரில் பழைய சிவன் கோவில் ஒன்று இருப்பதாக மட்டும் சொன்னார்கள். அநேகமாக நான் தேடும் கோவில் அதுவாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் நேராக வண்டியை அங்கே செலுத்தினேன். தூரத்தில் இருந்து பார்த்தபோதே, நம்பிக்கை வந்துவிட்டது. ஆம், நான் தேடிய கோவில் நிச்சயம் இதுவாகத் தான் இருக்க வேண்டும். காலத்தின் அத்தனை சோதனைகளையும் எதிர்கொண்டதன் சாட்சியாய் சிதிலமடைந்தபடி நின்று கொண்டிருந்தது ஒரு சிறிய சிவாலயம்.
கோவில் குருக்களிடம் தல புராணம் பற்றி கேட்டேன். ராமர் ராவணனை வீழ்த்தி விட்டு இலங்கையில் இருந்து அயோத்திக்கு செல்லும் வழியில் இங்கும் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார் என்றார். ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில் என்று சொல்கிறார்களே... என்று இழுத்தேன். மெல்ல என்னை அருகில் அழைத்த கோவில் குருக்கள், நீங்கள் சொல்ற கோவில் இதுதான். ஆனால் அஸ்தி மேல லிங்கம் வைத்து கோவில் கட்டியிருக்குன்னு சொன்னால் மக்கள் வரத் தயங்குறாங்க, அதுதான் அந்த கதையை வெளியில் சொல்றதில்லை என்று உண்மையை போட்டு உடைத்தார்.
ஒரு காலத்தில் ஆதித்த சோழனின் தொண்டை மண்டல வடபகுதி கஜானாவாக இந்த ஊர் திகழ்ந்திருக்கிறது என்றார் வரலாற்று ஆர்வலர்கள் குழு என்ற குழுவை நிறுவி சோழர் வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திரு. ராமச்சந்திரன். அதனால் தான் பொக்கிஷம்பாளையம் என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார். அதுபோன்று வசூலிக்கப்பட்ட வரியை வாங்கிச் செல்ல வந்த போதுதான், காய்ச்சல் வந்து ஆதித்த சோழன் இறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவனது நினைவைப் போற்றும் வகையில் அவனது மகன் முதலாம் பராந்தகன், ஆதித்தனின் அஸ்தியின் மீது இந்த பள்ளிப்படைக் கோவிலைக் கட்டியிருக்கிறான். இது கோதண்ட ராமேச்வரம் என்றும் ஆதித்தேச்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் காணப்படுகிறது. அதிலிருந்து கோயிலைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்தவும் வகை செய்யப்பட்டது. ஆனால் காலப்போக்கில் நின்றுவிட்ட இந்த வழக்கத்தை மீண்டும் தொடங்கும் முயற்சியில் திரு. ராமச்சந்திரன் ஈடுபட்டிருக்கிறார்.
தஞ்சை பெரிய கோவிலை கட்டி கட்டிடக் கலையில் உயர்ந்து நிற்கும், பிற்கால சோழர்களின் ஆரம்ப கால கட்டிடக் கலைக்கு இந்த கோவில் ஒரு சிறந்த உதாரணம். அதனாலேயே சுமார் 1100 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்றும் இந்த கோவில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது.
இப்போதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டு பிற்காலத்தில் கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. காளஹஸ்தி கோவில் நிர்வாகம் தற்போது இந்த கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. காளஹஸ்தி கோவிலுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் இப்படி ஒரு புராதன வரலாற்று சிறப்பு மிக்க கோவில் இருப்பது இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே என்ற ஏக்கத்துடன் கோவிலை சுற்றிவிட்டு வெளியில் வந்தேன். உள்ளே இருந்தபடி ஆதித்த சோழன் எனக்கு விடைகொடுத்தான்.
நன்றி : புதிய தலைமுறை
தகவலிற்கு நன்றி
ReplyDeleteஅருமையிலும் அருமை ! நன்றி !
ReplyDeleteNice...
ReplyDeleteஅருமை 👌
ReplyDeleteGoogle maps location share panuga of our Adhitya Cholan temple
ReplyDeleteஅருமை
ReplyDeleteதகவல் அருமை!
ReplyDelete