காலம் மாறினாலும்,
சில விஷயங்கள் மட்டும் மாறுவதே இல்லை. லஞ்சம், ஊழல் போன்றவை அவற்றில்
முக்கியமானவை. பலருக்கும் லஞ்சம் கொடுத்துதான் ஆங்கிலேயர்கள் மெட்ராசில் கால்வைத்தனர்.
பின்னர் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் இதே ஆயுதத்தையே அவர்கள் பலமுறை
பிரயோகித்தனர்.
இந்த வாய்ப்பை
பயன்படுத்தி கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பணம் பறித்தவர்கள் நிறைய பேர். அவர்களில்
ஆங்கிலேயர்களை தொடர்ந்து மிரட்டி மிரட்டியே ஏராளமாக பொன்னும், பொருளும்
பெற்றவர்தான் தாவூத் கான். முகலாய மன்னர் அவுரங்கசீப், தனது ஆளுகைக்குட்பட்ட
கர்நாடக பகுதிகளை பார்த்துக் கொள்வதற்காக நவாப் என்ற பதவியை உருவாக்கினார். அப்படி
நியமிக்கப்பட்ட முதல் நவாப் ஜூல்பிகர் அலி கான். இந்த ஜூல்பிகரின் உதவியாளராக
இருந்தவர்தான் தாவூத் கான்.
ஒருமுறை தாவூத் கான்
மெட்ராஸ் நகரை சுற்றிப் பார்க்க வர இருப்பதாக ஜூல்பிகர் அலி கான், அப்போதைய
கவர்னரான பிட்டுக்கு கடிதம் எழுதினார். அவுரங்கசீப்பின் படையில் முக்கியத்
தளபதியாக இருந்த தாவூத் வருகிறார் என்றால் அதன் பின்னணியில் நிச்சயம் ஏதேனும் சதி இருக்கும்
என்று சந்தேகப்பட்ட பிட், ஒருபுறம் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து கொண்டே, மறுபுறம்
நகரின் பாதுகாப்பை அதிகரித்தார்.
1699ஆம் ஆண்டு ஏப்ரல்
28ஆம் தேதி மெட்ராஸ் வந்த தாவூத், திருவல்லிக்கேணியில் ஸ்டைல்மேட் என்ற தோட்ட
மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஒருவாரம் சாந்தோமிலும்
தங்கியிருந்தார். சாந்தோம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அதனை ஒரு பெரிய
நகரமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவரது கனவை ஆங்கிலேயர்கள்
பலிக்கவிடவில்லை.
ஜூல்பிகர் அலி கானைத்
தொடர்ந்து 1703ஆம் ஆண்டு நவாப்பான தாவூத் கான், ஆங்கிலேயர்களின் கண்களில்
விரலைவிட்டு ஆட்டத் தொடங்கினார். அவரை பகைத்துக் கொள்ள வேண்டாம் என நினைத்த
கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், தாவூத் ஆற்காடு வந்திருந்த போது அவரை
சந்திப்பதற்காக நிக்காலோ மானுச் என்ற வெனிஸ் நகரத்து வணிகரை நிறைய பரிசுப்
பொருட்களுடன் அனுப்பினர். நிக்காலோ மானுச் அதற்கு பல ஆண்டுகள் முன்பே மெட்ராசில்
வந்து தங்கிவிட்டவர். அவருக்கு பாரசீக மொழி நன்றாகத் தெரியும் என்பதாலும், அவர்
ஒரு மரியாதைக்குரிய நபராக கருதப்பட்டதாலும் அவரை தூதராக அனுப்பினர்.
தாவூத் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டபோது |
நிக்காலோ மானுச்
இரண்டு பித்தளை துப்பாக்கிகள், கண்ணாடிகள், 50 பாட்டில் ஃபிரெஞ்சு பிராந்தி, உயர் ரக
துணிகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை தாவூத்திற்கு வழங்கியதாக
குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இதெல்லாம் ஒரு பரிசா என்ற ரீதியில் அலட்சியமாக
வாங்கி வைத்துக்கொண்ட தாவூத், மெட்ராசிற்கு புதிய கவர்னரை நியமிக்கலாமா என்று
யோசிப்பதாகக் கூறி ஆங்கிலேயர்களுக்கு கிலி ஏற்படுத்தினார்.
சொன்னதோடு
நிறுத்திக்கொள்ளாமல் சில மாதங்கள் கழித்து ஒரு சிறிய படையோடு சாந்தோமுக்கு
மீண்டும் வந்தார். அப்போதும் கிழக்கிந்திய கம்பெனியார் சில பரிசுகளை அவருக்கு
அனுப்பி தாஜா செய்ய முயற்சித்தனர். ஆனால் தாவூத் இதனை நிராகரித்துவிட்டார். இதனால்
கடுப்பாகிப்போன ஆளுநர் பிட், போருக்கு தயார் என்ற ரீதியில் கானுக்கு ஒரு கடிதம்
அனுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத கான், கம்பெனியின் பரிசுகளை
ஏற்றுக்கொள்வதாகவும், அவர்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதாகவும் சொல்லி
சமரசத்திற்கு முன்வந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு தடபுடல் விருந்துக்கு ஏற்பாடானது.
சாந்தோமில் இருந்து
ஜார்ஜ் கோட்டை வரை வீரர்கள் வரிசைகட்டி கானை வரவேற்றனர். பாண்டு வாத்தியம் முழங்க,
21 குண்டு மரியாதையும் அளிக்கப்பட்டது. 600 வகை பதார்த்தங்கள் இடம்பெற்றிருந்த
விருந்தை வெகுவாக ரசித்த கான், மாலை 6 மணிக்கு கோட்டையில் இருந்து புறப்பட்டுச்
சென்றார். அடுத்தநாள் ஒரு கப்பலை சுற்றிப்பார்க்க தாவூத் விரும்பினார். அதற்கான
ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் கப்பலைவிட, கான் அதிக தண்ணியில் இருந்ததால் அவரை
கிளப்பி அழைத்துவர முடியவில்லை. இப்படி எல்லாம் கம்பெனிக்காரர்கள் அவரை மதுவிலேயே
நீராட்டி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் போதை நன்கு
தெளிந்ததும் எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு படையோடு கோட்டை நோக்கி
வந்துவிட்டார் தாவூத். இந்த முறை சில பரிசுப்பொருட்களை கேட்டார் கான். ஆனால்
கம்பெனி அதனை கொடுக்க மறுத்துவிட்டது. ஆத்திரமடைந்த கான் கோட்டையை
முற்றுகையிட்டார். மதராசபட்டினத்திற்கான கடல்வழிப் பொருள் வருகையை தடுத்து
நிறுத்தினார். இந்த பகுதியில் கடற்கொள்ளையர்கள் அதிகமாகிவிட்டதால், பாதுகாப்பு
கருதி இந்நடவடிக்கையை எடுத்ததாக அறிவித்தார். 1702, பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான
இந்த ஆணையால் மதராசபட்டினத்தின் வணிகம் முடங்கிப் போனது.
இதுபோதாதென்று
எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் கானின் ஆட்கள் கொள்ளை
அடிப்பதாக ஒரு தகவல் மெட்ராஸ் முழுவதும் பரவி பீதியை அதிகரித்தது. மக்கள் அங்கும்
இங்கும் ஓடி ஒளிய ஆரம்பித்தனர். கருப்பர் நகரத்தையும், தங்கசாலையையும்
எடுத்துக்கொள்ளப் போவதாகவும் கான் அதிரடியாக அறிவித்தார். இதுபோன்ற அதிரடிகளால்
நிலைகுலைந்து போன கிழக்கிந்திய கம்பெனி, கானுடன் சமரசமாகப்போக முடிவெடுத்தது.
இதற்கு கான் ரூ.30 ஆயிரத்தை விலையாகக் கேட்டார். அப்புறம் ஒருவழியாக பேரம் பேசி
ரூ.25 ஆயிரத்தைக் கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். ஆனால் அது
முற்றுப்புள்ளி அல்ல, என்பது சில ஆண்டுகளில் நிரூபணமாகிவிட்டது.
பேராசை பிடித்த கான்
1706இல் மீண்டும் சாந்தோமுக்கு வந்து தேவையானவற்றை கேட்டு வாங்கிக் கொண்டார். இப்படி
ஆங்கிலேயர்களை தொடர்ந்து அச்சத்திலேயே வைத்திருந்த தாவூத் கான் 1710ஆம் ஆண்டு
கூடுதல் பொறுப்புகள் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர்
மராட்டியர்களுக்கு எதிரான ஒரு போர்க்களத்தில் அவர் இறந்து, அவரது உடலை ஒரு
யானையின் வாலில் கட்டி நகர் முழுவதும் இழுத்துச் சென்றார்கள் என்ற தகவலை
கேட்டதும்தான் ஆங்கிலேயர்கள் உண்மையிலேயே நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.
நன்றி - தினத்தந்தி
* தாவூத் கான் இரண்டு
நாய்களை செல்லமாக வளர்த்துவந்தார். குற்றவாளிகள் மீது இந்த நாய்களை ஏவிவிட்டு
கொடூர தண்டனை கொடுத்ததாக நேரில் பார்த்தவர்கள் பதைபதைப்புடன் வரலாற்றில் பதிவு
செய்திருக்கிறார்கள்.
* தாவூத் ஒரு
குரங்கையும் பாசத்துடன் வளர்த்தார். அது இறந்துபோனதை தாங்க முடியாமல், அதன்
பாதுகாவலர்களாக இருந்த இரண்டு பேருக்கு மரண தண்டனை வழங்கினார். அந்த குரங்கின்
நினைவாக ஒரு படமும் வரையச் செய்தார்.
தாவூத் வளர்த்த குரங்கின் ஓவியம் |
* திருவொற்றியூர்,
நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கத்திவாக்கம், சாத்தங்காடு ஆகிய 5 கிராமங்களை
1708ஆம் ஆண்டு தாவூத், ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார்.
No comments:
Post a Comment