ஒரு பெரிய அல்லது
வித்தியாசமான விஷயத்தை முதன்முதலில் செய்பவர் சரித்திரத்தில் நினைவு கூரப்படுவார்.
இதற்காக பல ஆண்டுகள் பாடுபடுபவர்களுக்கு மத்தியில், போகிற போக்கில் நிறைய முதல்
விஷயங்களை தெரிந்தோ, தெரியாமலோ செய்து 'முதல்'வனாக இடம்பிடித்து விடுபவர்களும்
உண்டு. அப்படிப்பட்ட ஒருவர்தான், 17ஆம் நூற்றாண்டில் மெட்ராசில் வாழ்ந்த காசி
வீரண்ணா என்ற வணிகர்.
கிழக்கிந்திய
கம்பெனிக்கு மெட்ராஸ் என்ற நிலப்பகுதியை பேரம் பேசி வாங்கித் தந்தவர் பேரி
திம்மண்ணா என்ற வணிகர். இதன் மூலம் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக பேரி திம்மண்ணா
கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை வணிகராகத் திகழ்ந்தார். இந்த திம்மண்ணாவின்
பார்ட்னர்தான் காசி வீரண்ணா.
அந்தக்கால மெட்ராஸ் |
காசி வீரண்ணா அந்த
காலத்தில் கோல்கொண்டா சுல்தான்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வணிகரீதியில்
ஏற்பட்ட நட்பு பின்னர் பலப்பட்டுவிட்டதால், கோல்கொண்டா சுல்தான்கள் காசி
வீரண்ணாவையும் ஒரு முஸ்லீமாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். அவருக்கு ஹசன் கான்
என்று பெயரும் வைத்துவிட்டனர். வீரண்ணாவும் முஸ்லீம்களுடன் மிகவும் பாசமுடனும்,
அன்புடனும் பழகினார். அந்த ஆழமான அன்பின் வெளிப்பாடுதான் தனது முஸ்லீம் சகோதரர்களுக்காக
அவர் பாரிமுனையின் மூர் தெருவில் கட்டித்தந்த மசூதி. காசி வீரண்ணா என்ற இந்துவால்
கட்டப்பட்ட அந்த மசூதிதான் மெட்ராசின் முதல் மசூதி. ஆனால் அந்த வரலாற்று
சிறப்புமிக்க மசூதி இப்போது இல்லை.
வீரண்ணா மற்றொரு
விஷயத்தையும் மெட்ராசில் முதன்முதலாக செய்து காட்டினார். அதுதான் அவர் தொடங்கிய "காசி வீரண்ணா அண்ட் கோ" என்ற கம்பெனி. இதனை காசா வெரோனா அண்ட் கோ (Cassa
Verona & Co.,) என்று ஆங்கிலேயர்கள்
தங்கள் ஆவணங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் இந்தியர் ஒருவருக்கு
சொந்தமான முதல் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி இதுதான்.
போர்த்துகீசியர்கள்
சென்ற பிறகு சாந்தோமை வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு வீரண்ணா செல்வாக்கு மிக்க
வணிகராக இருந்தார். டிசம்பர் 12, 1678 என தேதியிடப்பட்ட ஒரு ஆங்கிலேயக் குறிப்பில்
பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'வெரோனாவுக்கு கோல்கொண்டாவில் இருந்து நவாப்
முகம்மது இப்ராஹிம் நேற்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். வெரோனாவுக்கு 1300
பகோடாக்களுக்கு சாந்தோம் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2500 பகோடாக்கள் தர
மற்றொருவர் தயாராக இருக்கிறார். எனவே வெரோனாவிடம் இருந்து சாந்தோமை திரும்பப்
பெற்று அவருக்கு வாடகைக்கு விடலாம் என அந்த கடிதத்தில் இருந்தது. ஆனால் சூரிய
சந்திரர் உள்ள வரை இந்த ஊர் ஒரு ஃபிர்மான் மூலம் தனக்கு தரப்பட்டுள்ளதாக வெரோனா
பதில் எழுதியிருக்கிறார். தவிரவும் பணத்தின் மகிமையை அறிந்திருந்த வெரோனா,
பேசுபவர்களின் வாயை மூட 500 பகோடாக்கள் லஞ்சமாகக் கொடுத்தார்' என்று அந்த குறிப்பு
சொல்கிறது. இப்படி வியாபாரத்தில் கெட்டியாக இருந்த வீரண்ணா, தொழிலுக்கு ஏற்ப கறார்
பேர்வழியாகவும் இருந்தார்.
சர் எட்வர்ட் விண்டர் |
1678இல்
பூந்தமல்லியின் கவர்னராக இருந்த லிங்கப்ப நாயக், கிழக்கிந்திய கம்பெனியிடம்
இருந்து ஒரு பெரும் தொகையை கேட்டார். கம்பெனியின் வணிகராக இருந்த வீரண்ணா,
அதெல்லாம் தர முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார். இதனிடையே வீரண்ணாவின் மனைவி
இறந்துவிட்டார். இதற்காக துக்கம் விசாரிக்க வந்த லிங்கப்ப நாயக், ஏன் தன்னை யாரும்
வந்து முறையாக வரவேற்கவில்லை என்று கேட்டார். மனைவியைப் பறிகொடுத்த சோகத்தில்
இருந்த வீரண்ணா, லிங்கப்ப நாயக்கை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டார்.
ஏற்கனவே வீரண்ணா மீது
கடுப்புடன் இருந்த லிங்கப்ப நாயக் இந்த பதிலால் கொதித்து கொந்தளித்துப் போனார்.
இதனை மனதிலேயே வைத்துக் கொண்டிருந்த லிங்கப்பா, 1680இல் வீரண்ணா உயிரிழந்தவுடன்,
மெட்ராசை கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பறித்துக் கொள்ளும் முயற்சியில்
இறங்கினார். ஆனால் அது பலிக்கவில்லை. எனவே மெட்ராஸை லிங்கப்பா முற்றுகையிட்டார்.
மெட்ராசிற்குள்
உணவுப் பொருட்களும், மற்ற அத்தியாவசியப் பண்டங்களும் வருவது தடைபட்டது. மெட்ராஸ்
மக்களுக்கு மெல்ல மூச்சுமுட்ட ஆரம்பித்தது. இந்த முற்றுகையை விலக்கிக் கொள்ள
ஆங்கிலேயர்கள் ஆண்டுதோறும் 2000 பகோடா பணம் தர வேண்டும் என லிங்கப்பா நிபந்தனை
விதித்தார். ஒருகட்டத்தில் பிரச்னை முற்றியதால், கம்பெனியையே மெட்ராசில் இருந்து
செஞ்சிக்கு மாற்றிவிடலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. வீரண்ணாவின் கோபம் இப்படி
மெட்ராசின் இருப்பிற்கே ஆப்பு வைக்கப் பார்த்தது. இதனை சரி செய்ய அப்போது
வீரண்ணாவும் உயிருடன் இல்லை. ஆனால் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் தொடர்
பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.
காசி வீரண்ணா தமது
காலத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன்
வாழ்ந்தார். அவர் உயிரிழந்தபோது, அவருக்கு கம்பெனி சார்பில் 30 குண்டுகள் முழங்க
இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. வீரண்ணா காலத்திலும் மெட்ராசில் உடன்கட்டை ஏறும்
பழக்கம் இருந்தது. வீரண்ணாவின் மறைவைத் தொடர்ந்து அவரது மனைவி (இரண்டாவது மனைவி)
உடன்கட்டை ஏற முயன்றார். ஆனால் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் அதனை அனுமதிக்கவில்லை.
மெட்ராசில் 'சதி' (Sathi)
எனப்படும் உடன்கட்டை ஏறுதல் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்ட முதல் நிகழ்வாக இது
வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி வாழும்போது
மட்டுமின்றி மரணத்திலும் வரலாறு படைத்த வீரண்ணாவை மெட்ராஸ் இன்றும் நினைவில்
வைத்திருக்கிறது. அதற்கு அத்தாட்சிதான் பாரிமுனை பகுதியில் இருக்கும் காசி வீரண்ண
செட்டித் தெரு.
நன்றி - தினத்தந்தி
* 1661 முதல் 1665
வரை கம்பெனியின் ஏஜெண்டாக இருந்த சர் எட்வர்ட் விண்டர், மெட்ராசில் குற்றங்களை
விசாரித்து நீதி வழங்கும் பொறுப்பை பேரி திம்மண்ணா மற்றும் காசி வீரண்ணா
ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். ஆனால் அடுத்து வந்தவர் இந்த பொறுப்பை இவர்களிடம்
இருந்து பறித்துவிட்டார்.
* 1679ஆம் ஆண்டு லிங்கப்பா,
வீரண்ணாவிற்கு 1500 பகோடாக்கள் கொடுத்து சாந்தோமை தமதாக்கிக் கொண்டார்.
No comments:
Post a Comment