மெட்ராஸ் ஆரம்ப நாட்களில், வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் என இரண்டு நகரங்களாகத்தான் இருந்தது. ஜார்ஜ் கோட்டைக்குள் இருந்தது வெள்ளையர் நகரம், கோட்டைக்கு வெளியில் கருப்பர் நகரம். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சென்னையில் கோட்டை கட்டி குடியேறியவுடனேயே கோட்டைக்கு வெளியில் வெள்ளையர் அல்லாதவர்கள் தங்குவதற்கென ஒரு நகரம் உருவானது. இப்படித்தான் சென்னை என்ற மாபெரும் நகரம், கோட்டைக்கு வெளியில் முதல் அடி எடுத்து வைத்தது.
ஆரம்பத்தில் தமிழர்களும், தெலுங்கர்களுமே அதிகளவில் குடியேறியதால், இது கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் நெசவாளர்கள். இவர்கள் மட்டுமின்றி ஆர்மீனியர்கள், போர்த்துகீசியர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் இங்கு வசித்து வந்தார்கள். இதன் தாக்கத்தை இங்குள்ள தெருக்கள் இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. கோவிந்தப்ப நாயக்கன், அங்கப்ப நாயக்கன், லிங்கி செட்டி, தம்பு செட்டி என தெலுங்கு பெயர்களைத் தாங்கி நிற்கும் தெருக்களுக்கு அருகிலேயே இஸ்லாமியர்களின் மூர் தெருவும், ஆர்மீனியர்களை நினைவூட்டும் ஆர்மீனியன் தெரு எனப்படும் அரண்மனைக்காரத் தெருவும் இருக்கின்றன.
ஆங்கில-பிரெஞ்சு யுத்தங்களுக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி அதிகரித்தது. முத்தயால்பேட்டை, பெத்தநாயக்கன் பேட்டை என இரு புதுப் பகுதிகள் உருவாகின. பின்னர் மெல்ல மெல்ல கருப்பர் நகரம் விரிவடையத் தொடங்கியது. ராஜஸ்தான், குஜராத், மகராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இன்றைய சௌகார்பேட்டையும் அன்றைய கருப்பர் நகரத்தின் ஒரு அங்கமாகத்தான் இருந்தது. பூக்கடை, ஏழுகிணறு, மண்ணடி, பாரீஸ் கார்னர், பிராட்வே என சென்னை மாநகரின் இதயப் பகுதி முழுவதும் கருப்பர் நகரத்திற்குள் அடக்கம்.
கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் முக்கியமான வியாபார மையமாக மாறியது. கோட்டைக்குள் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியருடன் வணிகம் செய்த வணிகர்கள் அனைவரும் கருப்பர் நகரத்தில்தான் வசித்தார்கள். ஒரு காலத்தில் இங்கு பவள வியாபாரம் கொடி கட்டிப் பறந்ததை இங்கிருக்கும் பவளக்காரத் தெரு இன்றும் நினைவுபடுத்துகிறது.
1746இல் பிரஞ்சுக்காரர்கள் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றியபோது, கருப்பர் நகரத்தை அழித்தார்கள். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கோட்டை மீண்டும் ஆங்கிலேயர் கைக்கு வந்தது. பிரஞ்சுக்காரர்கள் திட்டமிட்டு அழித்த கருப்பர் நகரத்தை மீண்டும் புதிதாக உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக முந்தைய நகரத்திற்கு சற்று தள்ளி ஒரு புதிய கருப்பர் நகரம் உதயமானது.
இந்த புதிய கருப்பர் நகரத்தை பாதுகாப்பதற்காக ஒரு மதில் சுவர் கட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் வேலை மட்டும் வேகமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் 1758இல் ஜார்ஜ் கோட்டை பிரஞ்சுப் படையினரால் முற்றுகையிடப்பட்டது, சில வருடங்கள் கழித்து திப்பு சுல்தான் மெட்ராஸ் மீது படையெடுத்தார். இதை எல்லாம் பார்த்த பிறகுதான் கருப்பர் நகரத்திற்கு மதில் சுவர் அத்தியாவசியம் என்பது ஆங்கிலேயர்களுக்கு உரைத்தது.
இதனையடுத்து ஒரு வருட உழைப்பில் ஒருவழியாக புதிய மதில் சுவர் கட்டப்பட்டது. கருப்பர் நகரத்தை சுற்றிலும் 17 அடி அகலத்திற்கு பீரங்கி வைக்கும் வகையில் இந்த பாதுகாப்புச் சுவர் உருவாக்கப்பட்டது. ஆனால் எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க உதவும் இந்த சுவற்றுக்கான செலவை பொதுமக்களே ஏற்க வேண்டும் என கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள் கூறினர். சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி செல்லும் சாலைக்கு வால் டாக்ஸ் சாலை (WALL TAX ROAD) என பெயர் வந்ததன் பின்னணி இதுதான். காரணம், இந்த சாலையை ஒட்டித்தான் கருப்பர் நகரத்தின் மேற்கு பக்கத்து சுவர் அமைந்தது. ஆனால் மக்கள் இந்த வரி விதிப்பை கடுமையாக எதிர்த்ததால், இறுதி வரை அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்படவில்லை. மேற்கே வால் டாக்ஸ் சாலை, கிழக்கே வங்கக்கடல், வடக்கில் நகர எல்லையில் எஞ்சியிருந்த ஒரு இடிந்த சுவர், தெற்கே எஸ்பிளனேடு... இதுதான் புதிய கருப்பர் நகரத்தின் நான்கு எல்லைகளாக இருந்தன.
இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் இளவரசராக இருந்தபோது (1910இல் மன்னரானார்), 1906இல் மெட்ராசிற்கு வருகை தந்தார். அவரின் நினைவாகத்தான் இந்தப் பகுதி ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது. கருப்பர் நகரம் என்ற பெயரை மாற்றிய ஐந்தாம் ஜார்ஜ், இன்றும் பூக்கடை திருப்பத்தில் ஆளுயர சிலையாக நின்று கொண்டிருக்கிறார்.
நன்றி - தினத்தந்தி
---------------
* கருப்பர் நகரில் நிறைய பாரம்பரியக் கட்டடங்கள் இன்றும் இருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றம், சட்டக் கல்லூரி, பாரியின் டேர் ஹவுஸ், ரிசர்வ் வங்கி, பொது தபால் நிலையம் ஆகியவை அவற்றில் சில.
* கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கருப்பர் நகரத்தின் பெத்தநாயக்கன்பேட்டைக்கு வடக்கில் ஏழு கிணறுகள் தோண்டப்பட்டன. அதுதான் ஏழு கிணறு பகுதி.
* இங்கிருக்கும் மின்ட் சாலை சுமார் 4 கி.மீ நீளம் கொண்டது. உலகின் மிக நீளமான சாலைகளில் இதுவும் ஒன்று.
No comments:
Post a Comment