பச்சையப்பன் கல்லூரி... பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மரங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் இந்த கல்வி நிலையத்திற்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இன்றிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, 1800களில் தொடங்குகிறது இதன் கதை.
தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிலையம் என்ற பெருமை இந்த கல்லூரிக்கு உண்டு. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களே கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்தி வந்த நிலையில், 1842ஆம் ஆண்டு இந்து மாணவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் பச்சையப்பன் கல்லூரி.
கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்ட அன்றைய பிராட்வேயில் முதலில் ஒரு பள்ளிக் கூடமாகத் தொடங்கப்பட்ட இது, பச்சையப்பா மத்தியக் கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தது. பின்னர் 1850இல் இப்போதைய கல்லூரி இருக்கும் இடத்திற்கு மாறியது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஹென்றி பொட்டிங்கர் இதனைத் தொடங்கிவைத்தார். ஏராளமான இந்திய மற்றும் ஐரோப்பிய பிரமுகர்கள் கலந்துகொள்ள, இதன் தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது.
ஆனால் பச்சையப்பர் என்ற ஏழைதான் இவ்வளவு பிரம்மாண்டமான கல்லூரிக்கு அடித்தளம் அமைத்தவர் என்று சொன்னால் நம்புவதற்கு சற்று கடினமாகத் தான் இருக்கும். வறுமையில் பிறந்த பச்சையப்பன், தமது கடின உழைப்பாலும், அறிவுத் திறனாலும் வள்ளல் பச்சையப்பராக விஸ்வரூபம் எடுத்த கதை, நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடம்.
காஞ்சிபுரத்தில் விசுவநாத முதலியாருக்கும் பூச்சியம்மாளுக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் பச்சையப்பர். இவர் கருவில் இருந்தபொழுதே, விசுவநாத முதலியார் இறந்துவிட்டார். அவருடைய நண்பர் ரெட்டிராயர் என்பவர், சென்னைக்கு அருகில் உள்ள பெரியபாளையத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வந்தார். எனவே அவருடைய ஆதரவை நாடி, பச்சையப்பரை வயிற்றில் சுமந்தபடி பெரியபாளையம் போனார் பூச்சியம்மாள். 1754 இல் பச்சையப்பர் அங்கு தான் பிறந்தார்.
ஆர்க்காடு சுபேதாரின் காரியக்காரராக இருந்த ரெட்டிராயரிடம் ஐந்து வயது வரை வளர்ந்தார். இராயர் மரணமடைந்தவுடன் பூச்சியம்மாள் பச்சையப்பரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, சென்னைக் கோட்டைக்கு மேற்கே ஒற்றைவாடை சாமி மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு சிறு சந்து வீட்டில் குடியேறினார்.
அடுத்து பூச்சியம்மாள் நெய்தவாயல் பெளனி நாராயண பிள்ளை என்பவரிடம் ஆதரவு கேட்டார். மொழிபெயர்ப்பாளரான அவரிடம் ஆங்கிலம் கற்ற பச்சையப்பர், பீங்கான் கடையில் வேலைக்குச் சேர்ந்து பொருள் வாங்க வரும் ஐரோப்பியர்களுக்கு மொழிபெயர்ப்பாளரானார். பின்னர் நிக்கல்ஸ் என்ற ஆங்கில அதிகாரியிடம் மொழிபெயர்ப்பாளராக இருந்து அப்படியே கிழக்கிந்தியக் கம்பெனியின் மொழிபெயர்பாளராக தம்மை உயர்த்திக் கொண்டார். அதுமட்டுமின்றி திறமையாக பலவகை வணிகத்திலும் ஈடுபட்டார்.
தொழிலுக்கு வசதியாக சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, கோமளேஸ்வரன்பேட்டை ஆகிய இடங்களிலும், தஞ்சாவூரிலும் பச்சையப்பர் குடியிருந்தார். அக்கா மகளை மணந்துகொண்டார். குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அங்குதான் விதி விளையாடியது. இரண்டு மனைவிகளுக்கும் இடையில் ஓயாத சண்டை. விளைவு, நிம்மதியைத் தொலைத்தார் பச்சையப்பர். உடல் நலம் கெட்டது. 1794 மார்ச் 31 இல் திருவையாறில் இறந்தார்.
மரணம் வரப் போவதை அறிந்தோ, அறியாமலோ, இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு உயில் எழுதினார் பச்சையப்பர். தன் குடும்பத்தினருக்கு எழுதிவைத்த சொத்துப் போக, மீதியை அறக்காரியங்களுக்கு ஒதுக்கி, அதை நாராயணப்பிள்ளை நிர்வகிக்க வேண்டும் என உயிலில் குறிப்பிட்டிருந்தார். பச்சையப்பருக்கு வாரிசு இல்லை என்பதால் உறவினர்கள் சொத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்திற்கு போனார்கள்.
பச்சையப்பர் இறக்கும்போது, அவரது சொத்து சுமார் ஒரு லட்சம் பகோடாக்கள், அதாவது சுமார் ரூ.3 1/2 லட்சம். சொத்துச் சண்டை காரணமாக நீதிமன்றத்தில் 47 ஆண்டுகள் இருந்த இந்தப் பணம் பின்னர் சுமார் 8 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. பச்சையப்பர் உயில்படி இதில் மூன்றரை லட்சம் ரூபாய் கோவில் மற்றும் தர்ம பணிக்களுக்கென ஒதுக்கப்பட, மீதித் தொகையை கல்வி வளர்ச்சிக்கு செலவிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை, காஞ்சி, சிதம்பரம் ஆகிய இடங்களில் முதலில் உயர்நிலைப் பள்ளிகள் தோன்றின. சென்னையில் இருந்த பள்ளி, 1880 இல் கல்லூரியாக உயர்ந்தது. இப்படித்தான் பச்சையப்பர் பெயரில் கல்வி நிலையங்கள் உருவாகின.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் கிழக்கு நுழைவாயில் அருகே பச்சையப்பர் கல்வி நிறுவனங்கள் பற்றிய கல்வெட்டு ஒன்று இருக்கிறது. 'மேற்படி லட்சம் வராகன் போக மற்ற மிகுதிப் பணத்துக்கு வரப்பட்ட வட்டியில் அனுகூலமாகும்போது மேற்படி இடத்தில் இந்துப் பிள்ளைகளுக்கு இந்த தேசத்தில் வழங்கா நின்ற விவகார சாஸ்திரங்கள் கற்பிக்கிறதற்கு மாதம் ஒன்றுக்கு 10 வராகன் சம்பளத்தில் ஒரு பண்டிதரையும், இங்கிலீஸ் பாஷை கற்பிக்கிறதற்கு 5 வராகன் சம்பளத்தில் ஒரு உபாத்தியாயரையும் நியமித்து வித்தியாசாலை ஏற்படுத்தப்படும்' என்கிறது அந்த கல்வெட்டு.
வறுமையில் பிறந்ததற்காக வாடி நிற்காமல், கடின உழைப்பால் தம்மையும் உயர்த்திக் கொண்டு, கல்வி நிலையங்கள் அமைத்து லட்சக்கணக்கானோரின் வாழ்வையும் உயர்த்திய உயர்ந்த மனிதரை இன்றும் நினைவுபடுத்தியபடியே நிற்கிறது பச்சையப்பன் கல்லூரி.
நன்றி - தினத்தந்தி
* சீனுவாச ராமானுஜம், பம்மல் சம்பந்த முதலியார், அறிஞர் அண்ணா என இந்தக் கல்லூரியின் மாண்புமிகு மாணவர்கள் பட்டியல் மிக மிக நீளமானது.
* 1947ஆம் ஆண்டு வரை இங்கு இந்து மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
* பச்சையப்பர் தினமும் காலையில் கூவத்தில் (அப்போ கூவம் நல்லா இருந்தது) குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக அவருடைய டைரிக் குறிப்பு சொல்கிறது.
No comments:
Post a Comment