என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, December 31, 2011

மவுண்ட் ரோடு

ஞாயிற்றுக்கிழமை மத்தியான நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக காட்சியளிக்கும் மவுண்ட் ரோடு எனப்படும் அண்ணா சாலையைப் பார்க்கும்போது, மனம் மெல்ல பின்னோக்கிச் செல்கிறது. இது சுமார் 400 ஆண்டுகால ஃபிளாஷ்பேக். ஆம், சென்னையின் இந்த முக்கியமான சாலை 370 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் இன்று வரை மவுண்ட் ரோட்டின் மாறுபட்ட காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம், தொடர்ந்து பார்த்தும் வருகிறோம். இன்று நவீன ரக கார்களும், சொகுசுப் பேருந்துகளும் ஓடும் இந்த சாலையில் ஒரு காலத்தில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும், டிராம் வண்டிகளும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தன.

கிழக்கிந்திய கம்பெனியார் சென்னை நகரில் கோட்டை கட்டிக் குடியேறிய உடனே உருவான வெகு சில விஷயங்களில் இந்த சாலையும் ஒன்று. ஜார்ஜ் கோட்டைக்கு தெற்கே கூவம் ஆற்றிற்கு அருகில் தொடங்கி பரங்கிமலை வரை சுமார் 15 கி.மீ நீளத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் புனித தோமையார் மலையில் சென்று வழிபாடு நடத்துவதற்கு வசதியாக இந்த அகன்ற சாலை அமைக்கப்பட்டது. 1781-1785 காலகட்டத்தில் சார்லஸ் மெக்கார்டினி (Charles MaCartney) என்பவர் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோதுதான், மவுண்ட் ரோடு இன்றைய வடிவத்தைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த சாலையின் இருபுறமும் வணிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் முளைக்கத் தொடங்கின. இந்து பத்திரிகை அலுவலகம், ஹிக்கின்பாதம்ஸ், ஆயிரம் விளக்கு மசூதி, பிரிட்டீஷ் கவுன்சில், அண்ணா அறிவாலயம் என இந்த பட்டியல் மிக நீளமானது. சென்னையின் முதல் 14 மாடிக் கட்டடமான எல்ஐசியும் இந்த சாலையில் தான் இருக்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சில கட்டடங்கள் கடந்துபோன காலத்தை நினைவுபடுத்தியபடியே இன்றும் நின்று கொண்டிருக்கின்றன. 'தி மெயில்' பத்திரிகை அலுவலகம், சிதிலமடைந்து காணப்படும் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம் ஆகியவை அவற்றில் சில. இங்கிருக்கும் பி.ஆர் அண்டு சன்ஸ் கடிகார கம்பெனி இன்றும் தனது புராதனக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

மவுண்ட் ரோட்டின் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம், இங்கிருக்கும் சிலைகள். சாலையின் ஆரம்பத்திலேயே இருக்கிறது மேஜர் ஜெனரல் சர் தாமஸ் மன்றோவின் சிலை. 1820 - 1827இல் சென்னையின் ஆளுநராக இருந்தவர் மன்றோ. லண்டனின் எஃப் சான்ட்ரீ என்பவர் 1838இல் உருவாக்கிய இந்த சிலைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அதாவது, பண்டைய ரோம சிற்ப சாஸ்திர அடிப்படையில் இந்த சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

மன்றோவைத் தொடர்ந்து காமராஜர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், முத்துராமலிங்கத் தேவர், ராமசாமிப் படையாச்சி, தீரன் சின்னமலை, நேரு என மக்கள் மனதில் நின்ற தலைவர்கள் இந்த சாலை நெடுகிலும் சிலைகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த சாலையில் இருக்கும் ஜெமினி மேம்பாலம்தான் சென்னையின் முதல் மேம்பாலம்.

அண்ணா, சாந்தி, தேவி என சினிமா ரசிகர்களுக்கும் இந்த சாலை விருந்து படைக்கிறது. அருகில் இருக்கும் காஸினோ திரையரங்கில் அந்தக் காலத்தில் படம் பார்க்க டிக்கெட் கிடைக்காதவர்கள் பக்கத்து சந்துகளில் நின்றுகொண்டு படத்தின் வசனங்களையும், பாடல்களையும் கேட்பார்களாம். இதற்கு அருகில் இருந்த சென்னையின் பழமையான கெயிட்டி திரையரங்கு இன்று இடிக்கப்பட்டு விட்டது. இதேபோன்று ஆனந்த், குளோப், வெலிங்டன், சஃபயர் காம்பிளக்ஸ் போன்ற திரையரங்குகளும் மவுண்ட் ரோட்டில் இருந்து மறைந்துவிட்டன.

ஒருகாலத்தில் மவுண்ட் ரோட்டில் இரவில் ரிக்ஷாவில் போனால் பிசாசு பின்தொடரும் என்ற பயம் இருந்ததாம். அருகில் இருக்கும் பெரிய கிறிஸ்தவ இடுகாடு, கவர்ன்மென்ட் எஸ்டேட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆகியவை இந்த பயத்தின் பின்னணியாக இருக்கலாம் என தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் அசோகமித்திரன்.

இப்படி மவுண்ட் ரோடாக உருவாகி இன்று அண்ணா சாலையாக மாற்றம் பெற்றிருக்கும் இந்த சாலையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றை எல்லாம் பட்டியலிட்டால் அது முடிவுறாமல் நீண்டு கொண்டே செல்லும்.

நன்றி - தினத்தந்தி

* மெட்ரோ பணிகள் நடைபெறுவதையொட்டி இந்த சாலையில் விரைவில் ரயில்களும் பயணிக்க இருக்கின்றன.

* இந்த சாலையில் இருந்த ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் என்பவரின் சிலை மக்கள் போராட்டம் காரணமாக 1937இல் நீக்கப்பட்டுவிட்டது.

* அண்ணாசாலை தபால் நிலையத்தில் தற்போது சிறப்புத் தபால் தலைகள் காப்பிடமாக இயங்கும் கட்டடத்தில்தான் நூறாண்டுகள் முன்பு எலெக்ட்ரிக் தியேட்டர்இருந்தது. தமிழகத்தின் முறையானமுதல் சினிமாக் கொட்டகை இதுதான்.

Saturday, December 24, 2011

கருப்பர் நகரம்

மெட்ராஸ் ஆரம்ப நாட்களில், வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் என இரண்டு நகரங்களாகத்தான் இருந்தது. ஜார்ஜ் கோட்டைக்குள் இருந்தது வெள்ளையர் நகரம், கோட்டைக்கு வெளியில் கருப்பர் நகரம். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சென்னையில் கோட்டை கட்டி குடியேறியவுடனேயே கோட்டைக்கு வெளியில் வெள்ளையர் அல்லாதவர்கள் தங்குவதற்கென ஒரு நகரம் உருவானது. இப்படித்தான் சென்னை என்ற மாபெரும் நகரம், கோட்டைக்கு வெளியில் முதல் அடி எடுத்து வைத்தது.

ஆரம்பத்தில் தமிழர்களும், தெலுங்கர்களுமே அதிகளவில் குடியேறியதால், இது கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் நெசவாளர்கள். இவர்கள் மட்டுமின்றி ஆர்மீனியர்கள், போர்த்துகீசியர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் இங்கு வசித்து வந்தார்கள். இதன் தாக்கத்தை இங்குள்ள தெருக்கள் இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. கோவிந்தப்ப நாயக்கன், அங்கப்ப நாயக்கன், லிங்கி செட்டி, தம்பு செட்டி என தெலுங்கு பெயர்களைத் தாங்கி நிற்கும் தெருக்களுக்கு அருகிலேயே இஸ்லாமியர்களின் மூர் தெருவும், ஆர்மீனியர்களை நினைவூட்டும் ஆர்மீனியன் தெரு எனப்படும் அரண்மனைக்காரத் தெருவும் இருக்கின்றன.

ஆங்கில-பிரெஞ்சு யுத்தங்களுக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி அதிகரித்தது. முத்தயால்பேட்டை, பெத்தநாயக்கன் பேட்டை என இரு புதுப் பகுதிகள் உருவாகின. பின்னர் மெல்ல மெல்ல கருப்பர் நகரம் விரிவடையத் தொடங்கியது. ராஜஸ்தான், குஜராத், மகராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இன்றைய சௌகார்பேட்டையும் அன்றைய கருப்பர் நகரத்தின் ஒரு அங்கமாகத்தான் இருந்தது. பூக்கடை, ஏழுகிணறு, மண்ணடி, பாரீஸ் கார்னர், பிராட்வே என சென்னை மாநகரின் இதயப் பகுதி முழுவதும் கருப்பர் நகரத்திற்குள் அடக்கம்.

கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் முக்கியமான வியாபார மையமாக மாறியது. கோட்டைக்குள் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியருடன் வணிகம் செய்த வணிகர்கள் அனைவரும் கருப்பர் நகரத்தில்தான் வசித்தார்கள். ஒரு காலத்தில் இங்கு பவள வியாபாரம் கொடி கட்டிப் பறந்ததை இங்கிருக்கும் பவளக்காரத் தெரு இன்றும் நினைவுபடுத்துகிறது.

1746இல் பிரஞ்சுக்காரர்கள் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றியபோது, கருப்பர் நகரத்தை அழித்தார்கள். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கோட்டை மீண்டும் ஆங்கிலேயர் கைக்கு வந்தது. பிரஞ்சுக்காரர்கள் திட்டமிட்டு அழித்த கருப்பர் நகரத்தை மீண்டும் புதிதாக உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக முந்தைய நகரத்திற்கு சற்று தள்ளி ஒரு புதிய கருப்பர் நகரம் உதயமானது.

இந்த புதிய கருப்பர் நகரத்தை பாதுகாப்பதற்காக ஒரு மதில் சுவர் கட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் வேலை மட்டும் வேகமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் 1758இல் ஜார்ஜ் கோட்டை பிரஞ்சுப் படையினரால் முற்றுகையிடப்பட்டது, சில வருடங்கள் கழித்து திப்பு சுல்தான் மெட்ராஸ் மீது படையெடுத்தார். இதை எல்லாம் பார்த்த பிறகுதான் கருப்பர் நகரத்திற்கு மதில் சுவர் அத்தியாவசியம் என்பது ஆங்கிலேயர்களுக்கு உரைத்தது.

இதனையடுத்து ஒரு வருட உழைப்பில் ஒருவழியாக புதிய மதில் சுவர் கட்டப்பட்டது. கருப்பர் நகரத்தை சுற்றிலும் 17 அடி அகலத்திற்கு பீரங்கி வைக்கும் வகையில் இந்த பாதுகாப்புச் சுவர் உருவாக்கப்பட்டது. ஆனால் எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க உதவும் இந்த சுவற்றுக்கான செலவை பொதுமக்களே ஏற்க வேண்டும் என கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள் கூறினர். சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி செல்லும் சாலைக்கு வால் டாக்ஸ் சாலை (WALL TAX ROAD) என பெயர் வந்ததன் பின்னணி இதுதான். காரணம், இந்த சாலையை ஒட்டித்தான் கருப்பர் நகரத்தின் மேற்கு பக்கத்து சுவர் அமைந்தது. ஆனால் மக்கள் இந்த வரி விதிப்பை கடுமையாக எதிர்த்ததால், இறுதி வரை அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்படவில்லை. மேற்கே வால் டாக்ஸ் சாலை, கிழக்கே வங்கக்கடல், வடக்கில் நகர எல்லையில் எஞ்சியிருந்த ஒரு இடிந்த சுவர், தெற்கே எஸ்பிளனேடு... இதுதான் புதிய கருப்பர் நகரத்தின் நான்கு எல்லைகளாக இருந்தன.

இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் இளவரசராக இருந்தபோது (1910இல் மன்னரானார்), 1906இல் மெட்ராசிற்கு வருகை தந்தார். அவரின் நினைவாகத்தான் இந்தப் பகுதி ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது. கருப்பர் நகரம் என்ற பெயரை மாற்றிய ஐந்தாம் ஜார்ஜ், இன்றும் பூக்கடை திருப்பத்தில் ஆளுயர சிலையாக நின்று கொண்டிருக்கிறார்.

நன்றி - தினத்தந்தி

---------------

* கருப்பர் நகரில் நிறைய பாரம்பரியக் கட்டடங்கள் இன்றும் இருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றம், சட்டக் கல்லூரி, பாரியின் டேர் ஹவுஸ், ரிசர்வ் வங்கி, பொது தபால் நிலையம் ஆகியவை அவற்றில் சில.

* கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கருப்பர் நகரத்தின் பெத்தநாயக்கன்பேட்டைக்கு வடக்கில் ஏழு கிணறுகள் தோண்டப்பட்டன. அதுதான் ஏழு கிணறு பகுதி.

* இங்கிருக்கும் மின்ட் சாலை சுமார் 4 கி.மீ நீளம் கொண்டது. உலகின் மிக நீளமான சாலைகளில் இதுவும் ஒன்று.

Saturday, December 17, 2011

மெரீனா கடற்கரை

காலையில் கடல் காற்றில் வாக்கிங் போனது...மாலையில் சூடான தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டலுடன் கடலின் அழகில் மனதைப் பறிகொடுத்தது.. என சென்னைவாசிகள் அனைவரிடமும் மெரீனா பற்றிய இனிய நினைவுகள் நிறைந்திருக்கும். மெரீனாவில் வாக்கிங் போகும் வயோதிகர்கள் முதல்... காதலியுடன் கரை ஒதுங்கும் வாலிபர்கள் வரை அனைவரும் நன்றி சொல்ல வேண்டிய ஒருநபர் இருக்கிறார். அவர்தான் மவுண்ட்ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் (Mountstuart Elphinstone Grant Duff).

காரணம் இவர்தான் மெரீனாவுக்கு பேரும் வைத்து, சோறும் வைத்தவர். ஆமாம், இவர்தான் ஜார்ஜ் கோட்டைக்கும் வங்கக் கடலுக்கும் இடையில் வெறும் மணல்வெளியாக இருந்த பகுதியை அழகிய கடற்கரையாக மாற்றியவர். 1881இல் சென்னை துறைமுகம் கட்டப்படும் வரை, இன்றைக்கு காமராஜர் சாலை இருக்கும் இடம்வரைக்கும் கடல் இருந்தது. கடலை ஒட்டி வெறும் சேறும்சகதியும்தான் நிறைந்து கிடந்தது.

1881இல் இருந்து 1886 வரை சென்னையின் ஆளுநராக இருந்தவர்தான் நம்ம கிராண்ட் டஃப். இவருக்கு வங்கக் கடலையும், அதன் கரையையும் பார்க்கும் போது, மண்டைக்குள் மணியடித்ததன் விளைவு, சென்னைக்கு ஒரு அழகிய கடற்கரை கிடைத்தது. 1884இல் நடைபாதை எல்லாம் அமைத்து மெட்ராஸ்வாசிகளுக்கு ஒரு ஒழுங்கான கடற்கரையை உருவாக்கிக் கொடுத்தார் கிராண்ட் டஃப். அதற்கு 'மெட்ராஸ் மெரீனா' என்றும் பெயர் வைத்தார்.

இத்தாலியில் இருக்கும் சிசிலித் தீவின் நினைவாக இந்தப் பெயரை வைத்ததாக கிராண்ட் டஃப் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மெரீனா (Marine-கடல்) என்றால் "கடலில் இருந்து" என்று அர்த்தம். டஃப் அமைத்துக் கொடுத்த இந்த கடற்கரை அன்றைய மெட்ராஸ்வாசிகளுக்கு ஒரு சொர்க்கபுரியாகவே திகழ்ந்தது.

கோட்டையின் தெற்குப் பகுதியில் இருந்து சாந்தோம் வரை நீண்டு கிடக்கும் இந்த கடற்கரையில் காலாற நடப்பதே ஒரு இனிய அனுபவமாக இருந்தது. அன்னி பெசண்ட் அம்மையார் கூட, தாம் நடத்தி வந்த 'நியூ இந்தியா' பத்திரிகையில் மெரீனாவின் அழகைப் பற்றி விவரித்திருக்கிறார். 1914இல் வெளியான ஒரு கட்டுரையில், 'மெரீனாவைப் போல நீண்ட, அழகிய கடற்கரை இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. மெட்ராஸின் தவிர்க்க முடியாத அழகு மெரீனா' என்று எழுதியிருக்கிறார்.

சுமார் 13 கி.மீ தூரம் நீளும் இந்த கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாக கருதப்படுகிறது. கடற்கரையில் சிலை வைக்கும் கலாச்சாரம் முதலில் 1959ஆம் ஆண்டுதான் உதித்தது. அந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மெரீனா கடற்கரையில் புகழ்மிக்க உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர், நேதாஜி, சுப்பிரமணிய பாரதி, ஔவையார், கண்ணகி என நிறைய பேர் வந்துவிட்டார்கள். இதில் கண்ணகி மட்டும் சில நாட்கள் விடுமுறையில் அரசு அருங்காட்சியகம் போய் வந்தார். தலைவர்கள் வரிசையில் ஜி.யூ.போப், கான்ஸ்டான்சோ பெஸ்கி எனப்படும் வீரமா முனிவர் என வெளிநாட்டு அறிஞர்களுக்கும் இடம்கொடுத்து கௌரவித்துக் கொண்டிருக்கிறது மெரீனா.

சுமார் 30 ஆண்டு காலம் மெரீனாவில் குடியிருந்த பிறகு, விடைபெற்றுப் போனது சீரணி அரங்கம். 1970இல் கட்டப்பட்ட திறந்தவெளி அரங்கமான இதில் நின்றபடி எத்தனையோ தலைவர்கள் ஏராளமான அரசியல் மற்றும் சமூக உரைகளை ஆற்றி இருக்கிறார்கள். அனல் பறக்கும் அந்த உரைகளால் மாலை நேரக் குளிர்காற்றில் வெப்பநிலையை அதிகரித்துக் கொண்டிருந்த சீரணி அரங்கம், கடற்கரையை நவீனப்படுத்த வசதியாக 2003இல் இடித்துத் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி, மெரீனாவை இன்னும் கொஞ்சம் மெருகூட்டியது.

மெரீனாவிற்கு வரும் அனைவரும் கடலுக்கு அடுத்தபடியாக கால் பதிக்கும் இடம், பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவிடங்கள்தான். கடற்கரைக்கு எதிர்புறம் சேப்பாக்கம் மைதானம், சென்னைப் பல்கலைக்கழகம், பிரசிடென்சி கல்லூரி, விவேகானந்தர் இல்லம், குயின் மேரீஸ் கல்லூரி, ஆல் இந்தியா ரேடியோ என பழமையும், புதுமையும் கைகோத்து நிற்கும் சென்னையின் முக்கியக் கட்டடங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் கடல், மறுபுறம் கண்ணைப் பறிக்கும் கலைநயமிக்க கட்டடங்கள் என இயற்கையின் பிரம்மாண்டத்தையும், உழைப்பின் உன்னதத்தையும் ஒருசேர நினைவூட்டியபடி அமைதியாக நின்று கொண்டிருக்கிறது மெரீனா கடற்கரை.

தினத்தந்தி - பார்த்திபன்

* விடுமுறை நாட்களில் தினமும் சுமார் 50 ஆயிரம் பேர் மெரீனாவிற்கு வருகிறார்கள்.

* சென்னையின் கலங்கரை விளக்கம் தற்போது மெரீனாவில்தான் இருக்கிறது.

* 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது மெரீனா கடற்கரை கடுமையாக பாதிக்கப்பட்டது.

* பாதுகாப்பு கருதி மெரீனாவில் குளிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

Saturday, December 10, 2011

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தனது 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. ஆனால் இதன் விதையும், அதற்கான கதையும் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. கிழக்கிந்திய கம்பெனியார் சென்னையில் கால்பதித்து 1640இல் ஜார்ஜ் கோட்டையை கட்டிய உடனே, நீதிமன்றமும் வந்துவிட்டது. சிறிய வழக்குகளை விசாரிப்பதற்காக 'சத்திரம் நீதிமன்றம்' எனத் தொடங்கப்பட்ட அதில், சிவில், கிரிமினல் என இருவகை வழக்குகளும் விசாரிக்கப்பட்டன.

பின்னர் மேயர் கோர்ட் (1688), கட்சேரி கோர்ட் (1793), ரிக்கார்டர் கோர்ட் (1798) என சென்னை பல நீதிமன்றங்களைக் கண்டது. இவற்றின் உச்சம்தான், 1801இல் உருவான மெட்ராஸ் உச்சநீதிமன்றம். இது சுமார் 60 ஆண்டுகள் செயல்பட்டது. பின்னர் 1861ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் ஆணையின்பேரில், மெட்ராஸ், கல்கத்தா மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றங்கள் உருவாகின.

1862, ஆகஸ்ட் 15ந் தேதி மெட்ராஸ் உயர்நீதிமன்றம் முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சரியாக 85 ஆண்டுகளுக்கு முன்பே, ஆகஸ்ட் 15ல் நீதி வெல்லும் என்பதை சொல்லாமல் சொன்னதுபோல இது அமைந்திருந்தது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆரம்ப நாட்களில் ராஜாஜி சாலையில் இருக்கும் சிங்கார வேலர் மாளிகையில் அமைந்திருந்தது. பின்னர் 1888இல் உயர்நீதிமன்றத்திற்கென ஒரு அழகான கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. சுமார் 4 ஆண்டுகால உழைப்பில், ஜே.டபிள்யூ. பிரசிங்டன் (J.W. Brassington) தயாரித்த வடிவமைப்பில், ஹென்றி இர்வின், ஜே.எச். ஸ்டீபன்ஸ் போன்ற கலைஞர்களின் கைவண்ணத்தில், இந்தோ - சாராசனிக் பாணியில் இன்றைய உயர்நீதிமன்றக் கட்டடம் வானளாவ உருவானது. இதற்காக அந்த காலத்திலேயே ரூ.12 லட்சம் செலவானது.

இந்த கட்டடத்தின் அழகில் மயங்கி செஞ்சி ஏகாம்பர முதலியார் என்ற கவிஞர், 'ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து' என்ற பெயரில் ஒரு புத்தகமே போட்டிருக்கிறார். அதில் இந்தோ - சாராசனிக் பாணி உயர்நீதிமன்ற கட்டடத்தை பற்றிய அவரின் விவரிப்பில் சில வரிகள்...

'அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி

அடுத்தசுத்திலும் பெருங் கொடத்தை போல வெகுகூட்டி

கண்டவர் பிரம்மிக்க கலசமதிலே மாட்டி

கண்கள் சிதரும்படி தங்ககிலுட்டுவூட்டி...'

இப்படி பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்திய சென்னை உயர்நீதிமன்ற கட்டடம், பய நிமிடங்களை சந்தித்த சம்பவங்களும் இருக்கின்றன. முதல் உலகப் போரின்போது, 1914, செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அது நிகழ்ந்தது. எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது குண்டு வீசியது. இதில் நீதிமன்ற சுற்றுசுவரின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது. இதன் நினைவாக நீதிமன்றத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரையும் பார்த்தது இந்த கட்டடம். 1942இல் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே நீதிமன்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு, முக்கிய கோப்புகள் அனைத்தும் கோவைக்கும், அனந்தபூருக்கும் கொண்டு செல்லப்பட்டன. விடுமுறைக் கால நீதிமன்றம் கோவையிலேயே செயல்பட்டது. கொஞ்சம் பதற்றம் தணிந்த பிறகு சென்னை திரும்பினாலும், தி.நகரில் இருந்த ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஒன்றில்தான் உயர்நீதிமன்றம் சில காலம் செயல்பட்டது.

வெறும் கட்டடங்களால் மட்டுமின்றி இங்கு பணிபுரிந்த தலைசிறந்த நீதிபதிகளாலும், வழக்கறிஞர்களாலும் பல பெருமைகளைப் பெற்றிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் நீதிமன்ற வளாகத்தில் இன்று சிலையாக நின்றுகொண்டிருக்கும் நீதிபதி சர் டி. முத்துசாமி ஐயர். ஏழைக் குடும்பத்தில் பிறந்து தெருவிளக்கில் படித்த திருவாரூர் முத்துசாமி ஐயர், 1878இல் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியானார். இதன் மூலம் முதல் இந்திய நீதிபதியை அளித்த பெருமை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு கிடைத்தது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி என்ற பெருமைக்குரியவர் டாக்டர் ராஜமன்னார். இவர் 1948இல் இருந்து 1961 வரை சுமார் 13 ஆண்டுகள் தலைமை நீதிபதியாக இருந்தார். இப்படிப் பல்வேறு மரியாதைக்குரிய நீதி அரசர்களின் கால் தடங்களுடன், 150 ஆண்டுகளைக் கடந்து நீதியின் பாதையில் தொடர்ந்து கம்பீரமாகப் பயணிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றி - தினத்தந்தி


* சென்னையின் முதல் கலங்கரை விளக்கம் இங்குதான் இருந்தது. நீதிமன்றம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு இரண்டாவது கலங்கரை விளக்கம் இதன் உச்சியில் அமைக்கப்பட்டது.

* வ.உ.சிதம்பரனாருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாலிஸ் இரட்டை ஆயுள்தண்டனை வழங்கினார். பின்னாளில் அவரே தண்டனையைக் குறைக்க உதவியதுடன், வ.உ.சி.யின் வழக்கறிஞர் பட்டத்தையும் மீட்டெடுக்க உதவினார். இதனால் தனது கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி

* இது உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகமாகக் கருதப்படுகிறது.

* 2004இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தொடங்கப்பட்டது.

Sunday, December 4, 2011

பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்பன் கல்லூரி... பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மரங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் இந்த கல்வி நிலையத்திற்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இன்றிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, 1800களில் தொடங்குகிறது இதன் கதை.

தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிலையம் என்ற பெருமை இந்த கல்லூரிக்கு உண்டு. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களே கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்தி வந்த நிலையில், 1842ஆம் ஆண்டு இந்து மாணவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் பச்சையப்பன் கல்லூரி.

கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்ட அன்றைய பிராட்வேயில் முதலில் ஒரு பள்ளிக் கூடமாகத் தொடங்கப்பட்ட இது, பச்சையப்பா மத்தியக் கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தது. பின்னர் 1850இல் இப்போதைய கல்லூரி இருக்கும் இடத்திற்கு மாறியது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஹென்றி பொட்டிங்கர் இதனைத் தொடங்கிவைத்தார். ஏராளமான இந்திய மற்றும் ஐரோப்பிய பிரமுகர்கள் கலந்துகொள்ள, இதன் தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது.

ஆனால் பச்சையப்பர் என்ற ஏழைதான் இவ்வளவு பிரம்மாண்டமான கல்லூரிக்கு அடித்தளம் அமைத்தவர் என்று சொன்னால் நம்புவதற்கு சற்று கடினமாகத் தான் இருக்கும். வறுமையில் பிறந்த பச்சையப்பன், தமது கடின உழைப்பாலும், அறிவுத் திறனாலும் வள்ளல் பச்சையப்பராக விஸ்வரூபம் எடுத்த கதை, நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடம்.

காஞ்சிபுரத்தில் விசுவநாத முதலியாருக்கும் பூச்சியம்மாளுக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் பச்சையப்பர். இவர் கருவில் இருந்தபொழுதே, விசுவநாத முதலியார் இறந்துவிட்டார். அவருடைய நண்பர் ரெட்டிராயர் என்பவர், சென்னைக்கு அருகில் உள்ள பெரியபாளையத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வந்தார். எனவே அவருடைய ஆதரவை நாடி, பச்சையப்பரை வயிற்றில் சுமந்தபடி பெரியபாளையம் போனார் பூச்சியம்மாள். 1754 இல் பச்சையப்பர் அங்கு தான் பிறந்தார்.

ஆர்க்காடு சுபேதாரின் காரியக்காரராக இருந்த ரெட்டிராயரிடம் ஐந்து வயது வரை வளர்ந்தார். இராயர் மரணமடைந்தவுடன் பூச்சியம்மாள் பச்சையப்பரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, சென்னைக் கோட்டைக்கு மேற்கே ஒற்றைவாடை சாமி மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு சிறு சந்து வீட்டில் குடியேறினார்.

அடுத்து பூச்சியம்மாள் நெய்தவாயல் பெளனி நாராயண பிள்ளை என்பவரிடம் ஆதரவு கேட்டார். மொழிபெயர்ப்பாளரான அவரிடம் ஆங்கிலம் கற்ற பச்சையப்பர், பீங்கான் கடையில் வேலைக்குச் சேர்ந்து பொருள் வாங்க வரும் ஐரோப்பியர்களுக்கு மொழிபெயர்ப்பாளரானார். பின்னர் நிக்கல்ஸ் என்ற ஆங்கில அதிகாரியிடம் மொழிபெயர்ப்பாளராக இருந்து அப்படியே கிழக்கிந்தியக் கம்பெனியின் மொழிபெயர்பாளராக தம்மை உயர்த்திக் கொண்டார். அதுமட்டுமின்றி திறமையாக பலவகை வணிகத்திலும் ஈடுபட்டார்.

தொழிலுக்கு வசதியாக சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, கோமளேஸ்வரன்பேட்டை ஆகிய இடங்களிலும், தஞ்சாவூரிலும் பச்சையப்பர் குடியிருந்தார். அக்கா மகளை மணந்துகொண்டார். குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அங்குதான் விதி விளையாடியது. இரண்டு மனைவிகளுக்கும் இடையில் ஓயாத சண்டை. விளைவு, நிம்மதியைத் தொலைத்தார் பச்சையப்பர். உடல் நலம் கெட்டது. 1794 மார்ச் 31 இல் திருவையாறில் இறந்தார்.

மரணம் வரப் போவதை அறிந்தோ, அறியாமலோ, இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு உயில் எழுதினார் பச்சையப்பர். தன் குடும்பத்தினருக்கு எழுதிவைத்த சொத்துப் போக, மீதியை அறக்காரியங்களுக்கு ஒதுக்கி, அதை நாராயணப்பிள்ளை நிர்வகிக்க வேண்டும் என உயிலில் குறிப்பிட்டிருந்தார். பச்சையப்பருக்கு வாரிசு இல்லை என்பதால் உறவினர்கள் சொத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்திற்கு போனார்கள்.

பச்சையப்பர் இறக்கும்போது, அவரது சொத்து சுமார் ஒரு லட்சம் பகோடாக்கள், அதாவது சுமார் ரூ.3 1/2 லட்சம். சொத்துச் சண்டை காரணமாக நீதிமன்றத்தில் 47 ஆண்டுகள் இருந்த இந்தப் பணம் பின்னர் சுமார் 8 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. பச்சையப்பர் உயில்படி இதில் மூன்றரை லட்சம் ரூபாய் கோவில் மற்றும் தர்ம பணிக்களுக்கென ஒதுக்கப்பட, மீதித் தொகையை கல்வி வளர்ச்சிக்கு செலவிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை, காஞ்சி, சிதம்பரம் ஆகிய இடங்களில் முதலில் உயர்நிலைப் பள்ளிகள் தோன்றின. சென்னையில் இருந்த பள்ளி, 1880 இல் கல்லூரியாக உயர்ந்தது. இப்படித்தான் பச்சையப்பர் பெயரில் கல்வி நிலையங்கள் உருவாகின.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் கிழக்கு நுழைவாயில் அருகே பச்சையப்பர் கல்வி நிறுவனங்கள் பற்றிய கல்வெட்டு ஒன்று இருக்கிறது. 'மேற்படி லட்சம் வராகன் போக மற்ற மிகுதிப் பணத்துக்கு வரப்பட்ட வட்டியில் அனுகூலமாகும்போது மேற்படி இடத்தில் இந்துப் பிள்ளைகளுக்கு இந்த தேசத்தில் வழங்கா நின்ற விவகார சாஸ்திரங்கள் கற்பிக்கிறதற்கு மாதம் ஒன்றுக்கு 10 வராகன் சம்பளத்தில் ஒரு பண்டிதரையும், இங்கிலீஸ் பாஷை கற்பிக்கிறதற்கு 5 வராகன் சம்பளத்தில் ஒரு உபாத்தியாயரையும் நியமித்து வித்தியாசாலை ஏற்படுத்தப்படும்' என்கிறது அந்த கல்வெட்டு.

வறுமையில் பிறந்ததற்காக வாடி நிற்காமல், கடின உழைப்பால் தம்மையும் உயர்த்திக் கொண்டு, கல்வி நிலையங்கள் அமைத்து லட்சக்கணக்கானோரின் வாழ்வையும் உயர்த்திய உயர்ந்த மனிதரை இன்றும் நினைவுபடுத்தியபடியே நிற்கிறது பச்சையப்பன் கல்லூரி.

நன்றி - தினத்தந்தி

* சீனுவாச ராமானுஜம், பம்மல் சம்பந்த முதலியார், அறிஞர் அண்ணா என இந்தக் கல்லூரியின் மாண்புமிகு மாணவர்கள் பட்டியல் மிக மிக நீளமானது.

* 1947ஆம் ஆண்டு வரை இங்கு இந்து மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.

* பச்சையப்பர் தினமும் காலையில் கூவத்தில் (அப்போ கூவம் நல்லா இருந்தது) குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக அவருடைய டைரிக் குறிப்பு சொல்கிறது.

Saturday, November 26, 2011

ஸ்பென்சர் பிளாசா

சென்னைக்கு பழசு, புதுசு என நிறைய அடையாளங்கள் உண்டு. அப்படி புதிய தலைமுறையின் அடையாளமாக காணப்படும் ஒரு கட்டடம், உண்மையில் பழமையின் பிரதிநிதி என்றால் நம்ப முடிகிறதா. அதுதான் சென்னையின் நவீன அடையாளச் சின்னங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்பென்சர் பிளாசா.

இளசுகள் உல்லாசமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் இந்த ஷாப்பிங் மால், உண்மையில் சுமார் 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. புதிய ரக கார்களிலும், பைக்குகளிலும் இளைஞர்கள் படையெடுக்கும் இந்த ஷாப்பிங் மால், மவுண்ட் ரோட்டில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிய காலத்தில் இருந்து இருக்கிறது. ஆமாம், இந்தியத் துணை கண்டத்தின் (அக்காலத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கையை உள்ளடக்கியது) முதல் ஷாப்பிங் மால் என்ற பெருமை ஸ்பென்சர் பிளாசாவிற்கு உண்டு.

மெட்ராஸ் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது, 1863ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தொடங்கப்பட்டது. சார்லஸ் டுரண்டு மற்றும் ஜே.டபிள்யூ. ஸ்பென்சர் (Charles Durant and J. W. Spencer) ஆகிய இருவர் இணைந்து இந்த மெகா கடையை ஆரம்பித்தனர். அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று இவர்கள் சிந்தித்ததன் விளைவுதான் ஸ்பென்சர் பிளாசா.

இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், கடையை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே சில ஆண்டுகள் கழித்து அந்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இந்தோ - சாராசனிக் பாணியில் ஒரு அழகிய கட்டடம் கட்டப்பட்டு, ஸ்பென்சர் பிளாசா அங்கு குடியேறியது. அதுதான் மவுண்ட் ரோட்டில் இன்று ஸ்பென்சர் இருக்கும் இடம். ஆனால் அங்கிருப்பது அதே பழைய ஸ்பென்சர் இல்லை. காரணம், 1985ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு பயங்கரத் தீ விபத்து அந்த அழகிய கட்டடத்தை தின்று தீர்த்துவிட்டது.

அதன் பின்னர் அங்கு எழுந்ததுதான் இன்று நாம் பார்க்கும் ஸ்பென்சர் பிளாசா. ஸ்பென்சரில் ஃபேஸ் 1,2,3 என மொத்தம் மூன்று கட்டடங்கள் இருக்கின்றன. இதில் ஃபேஸ் 3 எனப்படும் மூன்றாவது கட்டடத்தின் உள்புறத்தை பழைய ஸ்பென்சரை நினைவூட்டும் வகையில், அதே பாணியில் மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். மேல்தளத்தில் நின்றபடி இதைப் பார்க்கும்போது, நம்மையும் அறியாமல் மெல்ல நினைவுகள் கருப்பு, வெள்ளை காலத்திற்கு நழுவிவிடுகின்றன.

அந்தக் காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் வேறு எங்கும் கிடைக்காத பொருட்கள் கூட ஸ்பென்சர் பிளாசாவில் கிடைக்குமாம். மாம்பலம், திருவல்லிக்கேணி கொசுக்களை சமாளிக்க கொசு வலை முதல் வெயிலுக்கு ஐஸ்கிரீம் வரை மெட்ராசின் சவால்களை சந்திக்க ஆங்கிலேயர்கள் இங்குதான் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களும் இங்கு கிடைக்குமாம்.

பொருட்கள் வாங்குவது மட்டுமின்றி வெறுமனே சுற்றிப் பார்த்து பொழுதுபோக்கவும் ஸ்பென்சர் சிறந்த இடமாகத் திகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் அன்றைய மெட்ராஸ்வாசிகளின் பொழுதுபோக்கு மையங்களில் மெரினாவிற்கு அடுத்த இடத்தில் ஸ்பென்சர் இருந்தது. இரண்டு இடங்களிலும் பாக்கெட்டில் காசே இல்லாமல் வலம் வரலாம். காலம் மாறிவிட்டாலும் ஸ்பென்சரின் இந்த குணம் மட்டும் இன்றும் அப்படியே தொடர்கிறது. பாக்கெட் நிறைய பணத்துடன் வருபவரையும், பாக்கெட்டே இல்லாமல் வருபவரையும் இன்றும் ஒரே மாதிரி வரவேற்கிறது, இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்.

நன்றி - தினத்தந்தி

* போக்சன் (W. N. Pogson) என்பவர்தான் இந்த கட்டடத்தை வடிவமைத்தவர்

* ஸ்பென்சர் பிளாசா மொத்தம் 2,50,000 சதுர பரப்பளவு கொண்டது.

* கடைகள் மட்டுமின்றி பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் அலுவலகங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன.

Friday, November 18, 2011

பெரம்பூர் ராஜா

வட சென்னையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான பெரம்பூர் இன்று எப்படி இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இந்த காட்டுப் பகுதி திருத்தி அமைக்கப்பட்டு ஊராகிவிட்டது.

1752ஆம் ஆண்டு எழுதப்பட்ட 'ஆனந்தரங்கம் விஜய சம்பு' என்ற சமஸ்கிருத நூலில் பெரம்பூர் பற்றிய சுவாரஸ்யமான ஒரு செய்தி இருக்கிறது. அதாவது அந்தக் காலத்தில் கருவேந்தன் என்ற ஒருத்தர் அயனாவரத்தில் வசித்து வந்தார். சிறந்த கலா ரசிகனான கருவேந்தன் அவரைத் தேடி வரும் கலைஞர்களுக்கு நிறைய பரிசுப் பொருட்களைக் கொடுத்து கவுரவிப்பாராம். அதேபோல ஒருமுறை கொல்கொண்டாவில் இருந்து வந்திருந்த சில கவிஞர்களுக்கு கருவேந்தன் அள்ளிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவர்கள் நாடு திரும்பியதும் இவரைப் பற்றி தங்கள் அரசரிடம் ஆஹா ஓஹோவென்று புகழ்ந்திருக்கிறார்கள்.

கவிஞர்கள் போற்றும் அந்த கலா ரசிகனை பார்க்க வேண்டும் என்று கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார் கோல்கொண்டா அரசர் மகரங்கா. அரசரைப் பார்க்கப் போன இடத்தில் கருவேந்தனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். கருவேந்தனைப் பிடித்துப் போன மகரங்கா அவருக்கு பரிசாக வெட்ரபுரா என்ற இடத்தைக் கொடுத்தார். அதுதாங்க நம்ம பெரம்பூர். அதாவது வெட்ர என்றால் பிரம்பு என்று அர்த்தம். வெட்ரபுரா என்றால் பிரம்புகள் நிறைந்த ஊர் என்று பொருள். அப்படித்தான் பெரம்பூரைப் பெற்றுத் திரும்பினார் கருவேந்தன். ராஜா ஆனதும் அவர் அயனாவரத்தில் இருந்து பெரம்பூருக்கு வீட்டை மாற்றிக் கொண்டு வந்துவிட்டார்.

அதெல்லாம் சரி, இந்த கருவேந்தனுக்கும் 'ஆனந்தரங்கம் விஜய சம்பு' நூலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்வி. இரண்டுக்கும் பல தலைமுறை சம்பந்தம் இருக்கிறது. அதாவது இந்த நூலின் கதாநாயகன் ஆனந்தரங்கப் பிள்ளை. இந்த அனந்தரங்கப் பிள்ளை யார் தெரியுமா? பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேக்ஸின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். இவர் 1736 முதல் 1760 வரை கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தான் பார்த்த கேட்டவற்றை நாட்குறிப்பு போல எழுதி வைத்தார்! அந்த காலகட்டத்தை அறிந்துகொள்ள இந்த குறிப்புகள் பெருமளவில் உதவுகின்றன.

சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த ஆனந்தரங்கத்தின் கொள்ளு கொள்ளுத் தாத்தாதான் நம்ம கருவேந்தன். இதற்கும் ஆதாரம் இருக்கிறது. கருவேந்தன் பெரம்பூருக்கு வீடு மாறியதும், அவருக்கு சோலை, வடமலை, திருமலை என மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் சோலையின் மகன் பொம்மைய்யா. அந்த பொம்மைய்யாவிற்கு பெத்த பொம்மா, சின்ன பொம்மா என இரட்டைக் குழந்தைகள். இதில் சின்ன பொம்மாவிற்கு 6 மகன்கள். அதில் மூத்த மகனான பொம்மையாவிற்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் இரண்டாவது மகன் பேர் திருவேங்கடம். இவர்தான் நம்ம ஆனந்தரங்கத்தின் அப்பா. அப்பாடா... ஒருவழியா சொல்லி முடிச்சாச்சு.

இந்த திருவேங்கடத்திற்கு பிரெஞ்சு, ஆங்கிலம், டச்சு, போர்த்துகீஸ் என பல ஐரோப்பிய மொழிகள் தெரியுமாம். திறமைசாலியாக மட்டுமில்லாமல் பெரிய மனசுக்காரராகவும் இருந்திருக்கிறார் திருவேங்கடம். பெரம்பூரில் அவர் கட்டிய சத்திரமும், அருகிலேயே ஏழைப் பிரமாணர்களுக்காக அவர் உருவாக்கிய சிறிய கிராமமும் இதற்கு ஆதாரமாக விளங்கின.

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் காலூன்றி அதனை விஸ்தரித்துக் கொண்டிருந்தபோது, பெரம்பூர் ஆர்காடு நவாபின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போதைய நவாப்பாக இருந்த முகம்மது சையத், 1742ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு ஐந்து கிராமங்களை வழங்கினார். அதில் நம்ம பெரம்பூரும் இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் இங்கு குடியேறினர். அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே கம்பெனிக்காக 1856இல் இங்கு ஒரு ரயில்வே வொர்க் ஷாப் கட்டப்பட்டது. இங்கு பணிபுரிவதற்காக இன்னும் நிறைய ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இதனால் ஒரு காலத்தில் பெரம்பூர் ஒரு குட்டி வெள்ளையர் நகரம் போலவே காட்சியளித்தது. இன்றும் பெரம்பூர் பகுதியில் நிறைய ஆங்கிலோ - இந்தியர்கள் காணப்படுவதற்கு இதுதான் காரணம்.

ஒரு கலா ரசிகனுக்கு பரிசாக கிடைத்து உருவானதாலோ என்னவோ, இப்போதும் பெரம்பூர் பல்வேறு மதத்தினரும், கலாச்சாரத்தினரும் ஒன்றுகலந்து வாழும் உயிர்துடிப்புமிக்க கலைப் படைப்பைப் போல் காட்சியளிக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* துய்ப்ளேக்ஸ் அரசாங்கத்தில் மற்றவர்களுக்கில்லாத உரிமைகளை ஆனந்தரங்கப் பிள்ளை பெற்றிருந்தார். பல்லக்கில் மேள வாத்தியத்தோடு கவர்னர் மாளிகையினுள் போகவும், தங்கப் பிடிபோட்ட கைத்தடி வைத்திருக்கவும், பாதரட்சை அணிந்து கவர்னரின் காரியாலயத்திற்குச் செல்லவும் அவருக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது,

* சாதாரண வழக்குகளை ஆராய்ந்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் பிரெஞ்சுக்காரர்கள் அவருக்கு அளித்திருந்தனர்.

* ஆனந்தரங்கப் பிள்ளை 'ஆனந்தப் புரவி' என்ற பெயரில் புதுச்சேரி - கொழும்பு இடையே வியாபாரக் கப்பலை நடத்தும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார்.

Saturday, November 12, 2011

ரிப்பன் மாளிகை

எப்போது பார்த்தாலும் பொங்கலுக்கு வெள்ளை அடித்தது போல பளிச்சென்று இருக்கும் ஒரு புராதனக் கட்டிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ரிப்பன் மாளிகைக் கட்டிடம். ஆங்கிலேயர் காலத்தைச் சார்ந்த பல கட்டிடங்களும் செக்கச் சேவல் என்று நின்று கொண்டிருக்க இது மட்டும் பவுடர் போட்ட பெரிய பாப்பா மாதிரி வெள்ளை வெளேரென்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

சென்னையின் இந்த வெள்ளை மாளிகை உருவான கதையைத் தேடிப் போனால் அது 1688இல் போய் நிற்கிறது. அப்போதுதான் இந்தியாவின் முதல் மாநகராட்சியாக மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைவராக இருந்த சர் ஜோசய்யா சைல்ட் என்பவரின் மூளையில் உதித்த யோசனைதான் இது. உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கென்றே ஒரு தனி அமைப்பு தேவை என்று அவர் கருதினார். இது குறித்து அப்போது இங்கிலந்தை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் ஜேம்சிடம் அவர் எடுத்துக் கூற, மன்னரும் உடனடியாக ஒப்புதல் அளித்துவிட்டார். இதனையடுத்து 1688ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மெட்ராஸ் மாநகராட்சி தொடங்கப்பட்டது.

நதானியேல் ஹிக்கின்சன் (Nathaniel Higginson) என்பவர் முதல் மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், யூதர்கள், இந்துக்கள் என பலதரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதே செப்டம்பர் 29ஆம் தேதி புதிய மேயர் தேர்வு செய்யப்பட்டார். இப்படித் தான் இந்தியாவின் முதல் மாநகராட்சி தனது பணியைத் தொடங்கியது. அப்போது ரிப்பன் மாளிகை கட்டப்படவில்லை. கோட்டைக்குள் இருந்த டவுன் ஹாலில் தான் முதல் மாநகராட்சி செயல்பட்டது.

உற்சாகமாகத் தொடங்கப்பட்டதே தவிர அதன் செயல்பாடுகள் அத்தனை உற்சாகமாக இல்லை. ஆறே மாதத்தில் முதல் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அடுத்ததாக லிட்டில்டன் என்பவர் மேயரானார். மாநகராட்சி தனது பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் எலிஹூ யேலுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே அதிகார மோதல்கள் வெடித்தன. அப்படியே சண்டை சச்சரவுகளுடன் போய்க் கொண்டிருந்த மாநகராட்சி நிர்வாகம் 1727இல் மறுசீரமைக்கப்பட்டது. நகரம் வளர வளர மாநகராட்சியின் பணிகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இந்நிலையில் டவுன் ஹால் பகுதியை அரசு எடுத்துக் கொண்டதால் அங்கிருந்த மாநகராட்சி அலுவலகம், ஜார்ஜ் டவுன் பகுதியின் எர்ரபாலு செட்டி தெருவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் அந்த இடம் போதவில்லை எனக் கருதப்பட்டதால் புதிய இடம் தேடும் படலம் தொடங்கியது. அப்போதுதான் பீப்பிள்ஸ் பார்க் பகுதியில் ஒரு இடத்தை ஒதுக்கி மாநகராட்சிக்கென புதிய கட்டிடம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது. அப்படித்தான் அந்தக் காலத்திலேயே ரூ. 7.5 லட்சம் செலவு செய்து தற்போதுள்ள ரிப்பன் மாளிகை கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளாக இதைப் பார்த்துப் பார்த்து இந்தோ - சாரசனிக் பாணியில் பிரம்மாண்டமாக கட்டித்தந்த லோகநாத முதலியார் கூலியாக வாங்கிய தொகை ரூ. 5.5 லட்சம்.

1913இல் இந்த கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் மூவாயிரத்திற்கும் அதிகமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி கட்டிடம் என்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயரையே இதற்கும் வைத்துவிட்டனர். அவரை நினைவு கூறும் வகையில் அவரது சிலை ஒன்றும் இங்கு நிறுவப்பட்டது.

252 அடி நீளமும், 126 அடி அகலமும் கொண்ட இந்த கட்டிடத்தின் முக்கியமான அம்சம், அதன் நடுவில் இருக்கும் கோபுரம். 132 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் நடுவில் எட்டு அடி விட்டத்தில் ஒரு பிரம்மாண்ட கடிகாரமும் அமைக்கப்பட்டது. இதற்கு தினமும் கீ கொடுப்பார்கள். அந்தக் காலத்தில் மெட்ராசிற்கு வரும் நிறைய பேர், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்த இந்த மெகா சைஸ் கடிகாரத்தை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மாநகராட்சி இந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு முதல் தலைவராக இருந்தவர் (அப்போது மேயர் பதவியை தூக்கிவிட்டார்கள்) பி.எல். மூர். பின்னர் 1919இல் தான் மெட்ராஸ் மாநகராட்சிக்கு முதல் இந்தியத் தலைவர் கிடைத்தார். அவர்தான் சர் பி. தியாகராய செட்டி. மீண்டும் 1933ஆம் ஆண்டு மேயர் பதவி உயிர் பெற்று எழுந்தது. அப்போது முதல் மேயரானவர் குமார ராஜா எம்.ஏ. முத்தையா செட்டியார். அதன் பிறகு இதுவரை மேயர் என்ற பதவி தொடர்ந்து நீடித்து வருகிறது.

தற்போது ரிப்பன் அலுவலக வளாகத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது நிறைவடைந்துவிட்டால், இதுவரை அருகில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்கள் வந்து செல்லும் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ரிப்பன் மாளிகை, தனது வளாகத்திற்குள்ளேயே ரயில் வந்துசெல்லும் காட்சியையும் காணலாம். ரிப்பன் மாளிகை விரைவில் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, நாமும் அதற்கு மெட்ரோ ரயிலில் சென்று பூங்கொத்து கொடுக்கலாம்.

நன்றி - தினத்தந்தி

* இந்தியாவின் முதல் பெண் மேயரைத் தந்ததும் சென்னை மாநகராட்சிதான். அவர்தான் தாரா செரியன்.

* கிழக்கிந்திய டச்சு அரசாங்கத்தின் நிர்வாகத்தைப் பார்த்துதான் சர் ஜோசய்யா சைல்ட்டுக்கு மாநகராட்சி ஏற்படுத்தும் யோசனை பிறந்ததாக கூறப்படுகிறது.

Saturday, November 5, 2011

அரசு அருங்காட்சியகம்

ஒரு சில விநாடி இடைவெளியில் வெவ்வேறு காலகட்டங்களையும், வெவ்வேறு நாகரிகங்களையும் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? அப்படி என்றால் டைம் மெஷின் எனப்படும் கால இயந்திரத்தில் சென்று பார்க்கலாம். 'என்ன கிண்டலா... அட, நடக்குற கதையைப் பேசுப்பா..' என்பவர்கள் எழும்பூரில் இருக்கும் அரசு அருங்காட்சியகத்திற்கு போய் வரலாம். ஆங்கிலேயர்கள் உருப்படியாக செய்துவிட்டுப் போன காரியங்களில் மிகவும் முக்கியமானது அருங்காட்சியகம் அமைத்தது.

'வரலாறு முக்கியம் அமைச்சரே..' என்று நினைத்த மெட்ராஸ் கல்விக் கழகத்தினர் (Madras Literary Society) சென்னை நகருக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதை ஏற்று அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் ஹென்றி பாடிங்கர் (Sir Henry Pottinger), லண்டனில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திடம் இதற்கான அனுமதியைப் பெற்றார். இதை அடுத்து 1851ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் முதன்முதலாக ஒரு அருங்காட்சியகம் உருவானது.

கல்லூரிச் சாலையில் தற்போது இருக்கும் டிபிஐ (DPI) வளாகத்தில் அந்த காலத்தில் ஒரு கல்லூரி இருந்தது. அந்த கல்லூரியின் முதலாம் மாடியில்தான் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் கல்விக் கழகத்திடம் இருந்த 1100 நிலவியல் மாதிரிகள் இங்கு வைக்கப்பட்டன.

அருங்காட்சியக அலுவலர்களின் ஆர்வம் காரணமாக அது வேகமாக விரிவடைந்தது. அதேசமயம் அது இடம்பெற்றிருந்த கட்டடமும் அதே வேகத்தில் சிதிலமடையத் தொடங்கியது. அதனால் 1854ஆம் ஆண்டு எழும்பூரில் உள்ள பாந்தியன் என்ற கட்டடத்தில் அருங்காட்சியகத்தை பால் காய்ச்சி குடி அமர்த்திவிட்டார்கள்.

பாந்தியன் தோட்டம் என்பது ஹால் பிளூமர் என்ற பொதுப்பணித் துறை காண்டராக்டருக்கு சொந்தமானது. அவர் அதை கமிட்டி ஆஃப் 24 என்ற அமைப்பினருக்கு விற்க, அவர்களிடம் இருந்து மூரட் என்ற பணக்கார ஆர்மீனிய வணிகர் அந்த இடத்தின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கினார். பின்னர் 1830ஆம் ஆண்டு அதை அப்போதைய அரசுக்கு ரூ. 28,000க்கு விற்றுவிட்டார். அங்கு 1853ஆம் ஆண்டு ஒரு பொதுநூலகம் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நமது அருங்காட்சியகம் வந்து சேர்ந்துகொண்டது.

ஒரு புலியும், சிறுத்தைக் குட்டி ஒன்றும்தான் அருங்காட்சியகத்தின் அப்போதைய கதாநாயகர்கள். இவற்றைப் பார்க்க வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். மெட்ராசுக்கு வந்தவர்கள் உயிர் காலேஜ், செத்த காலேஜ் பார்க்காமல் திரும்புவதில்லை என்ற சபதத்தோடே ஊரில் இருந்து புறப்பட்டது போல தோன்றியது.

இதைப் பார்த்த அருங்காட்சியகப் பொறுப்பாளரான மருத்துவர் பல்ஃபர், கர்நாடக நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நவாப்பும் அனுப்பி வைக்க, 1856 ஆம் ஆண்டு முதல் அருங்காட்சியகத்தில் 360 விலங்குகள் இருந்தன. பின்னர் மாநகர சபை இந்த விலங்கினக் காட்சிச்சாலையைப் பொறுப்பேற்று வேறிடத்துக்கு மாற்றியது.

சில ஆண்டுகளில் நீர்வாழ்விலங்குகள் காட்சியகம் (Aquarium) ஒன்றும் அரசு அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தும் என்ற பீதி நிலவியதால், அதற்கு பயந்து நகரத்திலிருந்து நிறுவனங்கள் அகற்றப்பட்டபோது நீர்வாழ்விலங்குகளை கை கழுவிவிட்டனர். இதனை மீண்டும் அமைப்பதற்கான முயற்சிகள் கடைசி வரை கை கூடவில்லை.

1984 ஆம் ஆண்டு சமகால ஓவியங்களுக்கான புதிய கட்டிடம் ஒன்று திறக்கப்பட்டது. இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பனவற்றுள் ராஜா ரவிவர்மாவின் அற்புதமான ஓவியங்களும் அடங்கும். 1988 ஆம் ஆண்டில் இங்கு ஒரு சிறுவர் அருங்காட்சியகமும் தொடங்கப்பட்டது. சிறுவர்களின் கற்பனைகளை சிறகடிக்க வைக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

கற்கால மனிதர்களில் தொடங்கி சேர, சோழ, பாண்டியர்கள் வரை நமக்கு அழகாக அறிமுகப்படுத்துகிறது இந்த அருங்காட்சியகம். அரிய வரலாறுகளை சுமந்து நிற்கும் கல்வெட்டுகள், மீண்டும் மீண்டும் காணத் தூண்டும் கலைப் படைப்புகள், பிரபஞ்ச ரகசியங்களை கற்றுத் தரும் விண்கற்கள் என இங்குள்ள ஒவ்வொரு பொருளும் விலை மதிக்கமுடியாதவை. கொஞ்சம் நேரத்தை மட்டும் செலவழித்தால், பிரபஞ்சம் எத்தனை பிரம்மாண்டமானது, வாழ்க்கை எவ்வளவு அழகானது, அர்த்தமுள்ளது என்பதை புரிய வைக்க ஆர்வமுடன் காத்திருக்கிறது இந்த அருங்காட்சியகம்.

தினத்தந்தி - பார்த்திபன்

---------------------

* 16.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் ஆறு கட்டிடங்களும், அவற்றில் 46 காட்சிக் கூடங்களும் உள்ளன.

* எம்டன் போர் கப்பல் சென்னையில் தாக்குதல் நடத்தியதில் கண்டெடுக்கப்பட்ட வெடித்து சிதறிய உலோக சிதறல்கள், வெடிக்காத குண்டுகள் ஆகியவையும் இங்கு இருக்கின்றன.

* கடற்கரையில் ஆவேசமாக நின்று கொண்டிருந்த கண்ணகி கூட, சில காலம் இந்த அருங்காட்சியகத்தில் ஓய்வெடுத்தார்.

* அருங்காட்சியக வளாகத்தில் கலையரங்கம் ஒன்றும் இருக்கிறது

Sunday, October 30, 2011

பேங்க் ஆஃப் மெட்ராஸ்

கடற்கரை ரயில்நிலையத்திற்கு எதிரில் பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஒரு சிகப்பு கட்டடத்தில் தற்போது பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டதே ஒரு வங்கிக்காகத்தான். அந்த வங்கிதான் மெட்ராஸ் ராஜதானியின் தலைமை வங்கியாக ஒரு காலத்தில் செயல்பட்டு வந்த பேங்க் ஆஃப் மெட்ராஸ். அன்றைய மெட்ராஸ்வாசிகளின் கைகளில் புரண்டு கொண்டிருந்த ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகித்த அந்த புராதன வங்கியின் கதையைத் தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்.

இந்தியாவில் பண்டைய காலந்தொட்டு வசதி படைத்த சில தனியார் தான் வங்கித் தொழில் செய்து வந்தனர். பொதுவங்கிகள் என்ற விஷயமே பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தொடங்கப்பட்டது. 1786ஆம் ஆண்டு தி ஜெனரல் பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் பேங்க் ஆப் ஹிந்துஸ்தான் ஆகியவை முதலில் துவங்கப்பட்டன. ஆனால் அவ்வங்கிகள் தற்பொழுது செயல்பாட்டில் இல்லை. இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருப்பவற்றில் மிகப்பழமையான வங்கி பாரத ஸ்டேட் வங்கியாகும் (State Bank of India).

அப்படிப் பழம்பெருமை பெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் தாய்தான் பேங்க் ஆப் மெட்ராஸ். இதன் கதை சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர்கள் மெட்ராசில் குடியேறி நிர்வாக வசதிகளுக்காக பல்வேறு விஷயங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தபோது, நிதி விவகாரங்களை கையாள ஒரு வங்கி தேவை என்பதை உணர்ந்தனர்.

முதன்முதலில் 1683இல் ஆளுநர் வில்லியம் ஜிப்போர்டும், அவரது குழுவினரும் மெட்ராசில் ஒரு வங்கியை தொடங்கினர். இதன் அடுத்த கட்டமாக 1805இல் அப்போதைய ஆளுநர் சர் வில்லியம் பெண்டிக் நிதிக் குழு ஒன்றை கூட்டினார். அக்குழுவின் ஆலோசனையின்படி 1806இல் ஒரு வங்கி உருவாக்கப்பட்டது. அதுதான் மெட்ராஸ் வங்கி (பேங்க் ஆப் மெட்ராஸ் என்பது வேறு), இதனை அரசு வங்கி என்றும் மக்கள் அழைத்தனர்.

அந்தக் காலத்தில் இதைப் போல வேறு சில வங்கிகளும் செயல்பட்டு வந்தன. பின்னர் 1843ஆம் ஆண்டு, மெட்ராஸ் வங்கி, கர்நாடிக் வங்கி, பிரிட்டிஷ் பேங்க் ஆஃப் மெட்ராஸ், ஆசியாடிக் வங்கி ஆகிய நான்கையும் இணைத்து ரூ.30 லட்சம் முதலீட்டில் ஒரு மத்திய வங்கி தொடங்கப்பட்டது. அதுதான் பேங்க் ஆஃப் மெட்ராஸ்.

கிட்டத்தட்ட சென்னை மாகாணம் முழுவதற்குமான ரிசர்வ் வங்கியைப் போன்று இது செயல்பட்டது. இதேபோல பம்பாய் மற்றும் வங்காள மாகாணங்களுக்காக பேங்க் ஆஃப் பம்பாய், பேங்க் ஆஃப் பெங்கால் ஆகிய வங்கிகள் உருவாக்கப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி வழங்கிய உரிமை சாசனத்தின் கீழ், மூன்று தலைமை மாகாணங்களுக்குரிய வங்கிகளாக இவை நிறுவப்பெற்றன.

பேங்க் ஆஃப் மெட்ராஸிற்கு கோவை, நாகை, தூத்துக்குடி, பெங்களூர், மங்களூர், கொச்சி, ஆலப்புழை, குண்டூர் என தென்னிந்தியா முழுவதும் கிளைகள் இருந்தன. இதுமட்டுமின்றி இலங்கையின் கொழும்பு நகரிலும் இந்த வங்கி கிளை விரித்திருந்தது. ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது உள்பட சென்னை மாகாணத்தின் அனைத்து நிதித் தேவைகள் மற்றும் சேவைகளை இந்த வங்கி கவனித்துக் கொண்டது.

இந்த வங்கியின் தலைமை அலுவலகம் கட்டுவதற்காக 1895ஆம் ஆண்டு மெரினா கடற்கரைக்கு எதிரில், தெற்கு கடற்கரைச் சாலையில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நிலம் வாங்கப்பட்டது. அங்கு நம்பெருமாள் செட்டி என்ற மெட்ராசின் புகழ்பெற்ற காண்ட்ராக்டரைக் கொண்டு ரூ.3 லட்சம் செலவில் ஒரு பிரம்மாண்ட கட்டடம் கட்டப்பட்டது. பாரிமுனையில் உள்ள ஐகோர்ட், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவற்றை எல்லாம் கட்டியவர் இந்த நம்பெருமாள் செட்டிதான். கர்னல் சாமுவேல் ஜேக்கப் வடிவமைப்பில் கட்டப்பட்ட பேங்க் ஆஃப் மெட்ராஸ் கட்டிடம், விக்டோரியா காலத்து இந்தோ சாராசனிக் கட்டடக் கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

1921ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி, பேங்க் ஆஃப் மெட்ராஸ், பேங்க் ஆஃப் பெங்காள், பேங்க் ஆஃப் பம்பாய் ஆகிய மூன்று மாகாண வங்கிகளையும் இணைத்து இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா (Imperial Bank of India) உருவாக்கப்பட்டது. இம்பீரியல் வங்கி நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர் யார் தெரியுமா? நம்பெருமாள் செட்டிதான். இந்த வங்கி 1955இல் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனப்படும் இன்றைய பாரத ஸ்டேட் வங்கியாக மாறியது.

கடற்கரை ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் இந்த பழைய பேங்க் ஆஃப் மெட்ராஸ் கட்டடம் சென்னையின் பல முக்கிய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள். உலகப் போர்களுக்கும் இந்த வங்கிக்கும் ஒரு எதிர்பாராத தொடர்பு ஏற்பட்டது. 1914ஆம் ஆண்டு, முதல் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது, ஜெர்மனின் எம்டன் கப்பல் சென்னை துறைமுகம் மீது குண்டு வீசியது. ஒரு சில நிமிடங்களில் 125 குண்டுகளை எம்டன் அள்ளி வீசியது. இந்த தாக்குதலில் ஒரு குண்டு சிதறல், சென்னை உயர்நீதிமன்றத்தின் பின்புற சுற்றுச்சுவரில் விழுந்த இடம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எம்டன் வீசிய ஒரு குண்டு கடற்கரையில் விழுந்து சிதறி பேங்க் ஆப் மெட்ராசின் சுவற்றில் மண்ணை அப்பியது. எம்டன் போய்விட்டாலும் வங்கியின் சுவற்றில் அது விட்டுச் சென்ற அடையாளம் மெட்ராஸ்வாசிகளை கதிகலங்க வைத்தது. சுவற்றில் அப்பியிருந்த மணலை அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அச்சத்துடன் பார்த்துச் சென்றனர்.

இரண்டாம் உலகப் போரின்போது மெட்ராஸ் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. குறிப்பாக துறைமுகப் பகுதியில் அவை குண்டுகளை வீசின. இந்த தாக்குதலையும் பேங்க் ஆஃப் மெட்ராஸ் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தது. இப்படி சென்னையுடன் தொடர்புடைய பல அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை இந்த புராதன கட்டடம் பார்த்திருக்கிறது, இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

---------

* 1969ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி நாட்டின் மிகப்பெரிய 14 வங்கிகள் நாட்டுடைமைக்கப்பட்டன. அப்போது நாட்டிலிருந்த வங்கிக் கிளைகள் 8260 மட்டுமே.

* பேங்க் ஆஃப் மெட்ராஸ் வெளியிட்ட ரூபாய் நோட்டுகளில் மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்ரோவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

Wednesday, October 26, 2011

பிரசிடென்சி கல்லூரி

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாயாக கருதப்படும் பிரசிடென்சி கல்லூரி எனப்படும் மாநிலக் கல்லூரி சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. மெரினா கடற்கரைக்கு எதிரில் வங்கக் கடலை வேடிக்கை பார்த்தபடி கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் இந்த சிகப்பு நிறக் கட்டிடத்திற்கு 140 வயதாகிறது. எத்தனையோ அறிஞர் பெருமக்களை உருவாக்கி இருக்கும் இக்கல்லூரி, சென்னைக்கு கிடைத்த மாபெரும் வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தாலிய அரண்மனை போல் காட்சியளிக்கும் இந்த கல்லூரியின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 1826இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த தாமஸ் மன்றோ, Committee of Public Instruction என்ற குழு ஒன்றை அமைத்தார். பத்து ஆண்டுகள் கழித்து 1836இல் இந்த குழுவின் பணிகளை Committee of Native Education என்ற கல்விக் குழு ஏற்றுக் கொண்டது. அந்தக் குழு கல்வி தொடர்பாக சில யோசனைகளை முன்வைத்தது. ஆனால் அவை அப்போதைய ஆளுநர் லார்ட் எல்ஃபின்ஸ்டோனுக்கு பிடிக்கவில்லை. அதற்கு பதில் அவரே 19 தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றினார். அதில் முக்கியமான தீர்மானம், மெட்ராசில் ஒரு பல்கலைக்கழகத்தை தொடங்குவது என்பது.

இதன் முதல்படியாக, 1840ஆம் ஆண்டு அக்டோபர் 15ந் தேதி, எழும்பூரில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் பிரசிடென்சி பள்ளி தொடங்கப்பட்டது. கல்வி ஆர்வம்மிக்க தனியார் சிலர் சேர்ந்து இந்த பள்ளியைத் தொடங்கினர். இந்த பள்ளியின் நிர்வாகம் அன்று மெட்ராஸில் வசித்த ஆங்கிலேய மற்றும் முக்கிய இந்தியப் பிரமுகர்கள் அடங்கிய குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த பள்ளியின் முதல்வராக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ஹானர்சில் தேர்ச்சி பெற்ற இ.பி. பவுல் என்பவரை நியமிக்க எல்ஃபின்ஸ்டோன் விரும்பினார். ஆனால் விதி விளையாடியதில் பவுலுக்கு அந்த வரலாற்றுப் பெருமை கிடைக்காமல் போய்விட்டது.

எல்ஃபின்ஸ்டோனின் அழைப்பை ஏற்று உடனடியாக இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு வந்த பவுல், 1840 செப்டம்பர் 20ந் தேதி பம்பாய் துறைமுகத்தை அடைந்துவிட்டார். ஆனால் அங்கிருந்து மெட்ராஸ் துறைமுகம் வருவதற்கு அவருக்கு 4 வார காலம் ஆகிவிட்டது. அதுவரை பொறுக்க முடியாத கல்விக் குழுவினர், கல்கத்தா ஹூக்லி கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த கூப்பர் என்பவரை தற்காலிக முதல்வராக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவரும் மாதம் ரூ.400 சம்பளத்திற்கு பிரசிடென்சி பள்ளியின் முதல்வராக வந்து சேர்ந்தார்.

பவுல் வந்த பிறகு சில மாதங்களிலேயே கூப்பர் மீண்டும் கல்கத்தா சென்றுவிட்டார். 1841ல் பிரசிடென்சி பள்ளி, உயர்நிலைப் பள்ளியானது. இடமும் எழும்பூரில் இருந்து பிராட்வேவிற்கு மாறியது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து 1853இல் பிரசிடென்சி பள்ளி, பிரசிடென்சி கல்லூரியாக உயர்ந்தது. சிறுவர், சிறுமியர் உலவிக் கொண்டிருந்த வளாகத்தில் வளர்இளம் பருவ பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கத் தொடங்கின. 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, அதன் கீழ் இந்த கல்லூரி இணைந்தது. அப்போதும்கூட பிரசிடென்சி கல்லூரி பிராட்வேயில் தான் இருந்தது.

கல்லூரிக்கு இந்த சிறிய இடம் போதாது என்பது சில ஆண்டுகளிலேயே உணரப்பட்டது. எனவே பெரிய கட்டிடம் ஒன்றை மெரினா கடற்கரைக்கு எதிரில் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த கட்டடத்திற்காக சிறப்பான வரைபடம் தயாரித்துக் கொடுப்பவருக்கு ரூ.3000 சன்மானம் அளிக்கப்படும் என 1864இல் ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 3000 என்பது எவ்வளவு பெரிய தொகை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அருமையான ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என விரும்பியதால், இத்தனை பெரிய சன்மானம் கொடுக்க முன்வரப்பட்டது. இந்த ஜாக்பாட் பரிசு யாருக்கு என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க, அந்த பரிசைத் தட்டிச் சென்றார் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணரான ராபர்ட் சிஸ்ஹோம்.

இதனைத் தொடர்ந்து கல்கத்தாவில் இருந்த அவர் மெட்ராஸ் வந்தார். மெட்ராசில் ராபர்ட் சிஸ்ஹோம் வடிவமைத்துக் கொடுத்த முதல் கட்டடம் பிரசிடென்சி கல்லூரி. பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், விக்டோரியா பப்ளிக் ஹால், தலைமைத் தபால் நிலையம் என அந்தக் கால மெட்ராசின் பல கட்டடங்கள் இவரது கைவண்ணத்தில் உருவாகின. அவர் மெட்ராஸ் வந்த புதிதில் வடிவமைத்துக் கொடுத்த கட்டிடம் என்பதால், பிரசிடென்சி கல்லூரி கட்டடத்தில் இத்தாலிய பாணியின் தாக்கம் அதிகம் இருக்கும். காரணம், அப்போதைய இங்கிலாந்தில் இத்தாலிய பாணி கட்டடங்கள் பிரபலமாக இருந்தன. பின்னர் அவர் வடிவமைத்த கட்டிடங்களில் பலவகை பாணிகள் காணப்படுகின்றன.

1867இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட் நேப்பியர் அடிக்கல் நாட்ட கட்டுமானப் பணி தொடங்கியது. மூன்று ஆண்டு கால கடும் உழைப்பில் கட்டி முடிக்கப்பட்ட பிரசிடென்சி கல்லூரி கட்டடத்தை 1870ஆம் ஆண்டு மார்ச் 25ந் தேதி எடின்பர்க் கோமகன் திறந்துவைத்தார்.

1940இல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, கல்லூரி கட்டடத்தில் நான்கு முகங்களைக் கொண்ட கடிகார கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த தானியங்கி எலெக்ட்ரிக் கடிகாரத்தில் சிறப்பு தானியங்கி விளக்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் பரமேஸ்வரன் தலைமையில் இயற்பியல் துறையிலேயே அந்த கடிகாரம் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் மணிக்கொரு தரம் இந்த கடிகாரம் இசைக்கும் இனிய இசை திருவல்லிக்கேணி முழுவதும் எதிரொலிக்குமாம்.

பிரசிடென்சி கல்லூரியின் மற்றொரு சிறப்பு இங்கு பணிபுரிந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர்கள். கரையானுக்கும், செல்லரிப்புக்கும் பலியாகிக் கொண்டிருந்த அரிய தமிழ் சுவடிகளைக் காப்பாற்றிக் கொடுத்ததால், தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் உ.வே. சாமிநாத அய்யர், இங்கு 16 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கல்லூரியின் முன்புறத்தில் 1948ஆம் ஆண்டு அவருக்கு சிலை வைக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வள்ளலாரின் திருவருட்பா வெளியாகக் காரணமாக இருந்த தொழுவூர் வேலாயுதம் முதலியார், இலங்கை தமிழறிஞர் சி.வை. தாமோதரன் பிள்ளை, பேராசிரியர் சி. இலக்குவனார் (இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தொல்காப்பியத்தை அண்ணா யேல் பல்கலைக்கழகத்திற்கு செல்லும்போது கொண்டு சென்றார்) என பலப் பிரபலங்கள் இங்கு ஆசிரியர்களாக பணிபுரிந்திருக்கின்றனர்.

அக்காலத்தில் நிலவிய சாதிய ஏற்றத் தாழ்வுகள் பிரசிடென்சி கல்லூரியையும் விட்டுவைக்கவில்லை. இங்கு தமிழ்ப் பேராசிரியராக வேலை பார்த்த கா. நமச்சிவாயம் முதலியார் அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.81 ஆகவும், அதே நேரத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக வேலை பார்த்த குப்புசாமி சாஸ்திரி அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.300 ஆகவும் இருந்திருக்கிறது. இதுகுறித்து அறிந்ததும், இந்தக் கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் எழுத அதன் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் அந்த வேறுபாட்டை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

நோபல் பரிசு பெற்ற சர். சி.வி.ராமன், டாக்டர் சுப்பிரமணிய சந்திரசேகர் ஆகியோர் இந்த கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள். சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், மூதறிஞர் ராஜாஜி, இந்தியாவின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன், என இக்கல்லூரியின் பிரபலமான மாணவர்கள் பட்டியலும் மிக மிக நீளமானது.

இப்படி எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியபடி, தனது 200வது பிறந்தநாளை நோக்கி அதே இளமையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது சென்னை மாநிலக் கல்லூரி.

நன்றி : தினத்தந்தி

* 1891இல் இந்த கல்லூரியின் பொன்விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி முதல்வரான டாக்டர் டேவிட் டங்கன், கல்லூரியின் 50 ஆண்டு சாதனைகளை புத்தகமாக வெளியிட்டார். இதுதான் கல்லூரியின் வரலாறை நன்கு அறிந்துகொள்ள இப்போது நமக்கு உதவுகிறது.

* இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆரம்பித்த இரண்டு பிரசிடென்சி கல்லூரிகளில் இதுவும் ஒன்று. மற்றொன்று கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி

* 1987ஆம் ஆண்டு இந்த கல்லூரிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.