என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, June 19, 2011

ராணுவத்துடன் போராடிய புலி

புலி என்றால் எல்லோருக்கும் கிலிதான். ஆனால் அந்த புலியையே திட்டம் போட்டு போட்டுத் தள்ளும் 'திறமை' மனிதர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. மனிதர்களின் இந்த மெகா திறமையால் மண்ணில் இருந்து மறைந்த போன ஒரு அரிய உயிரினம் தான் காஸ்பியன் புலி.

இதற்கு பெர்ஷியன் புலி என்றும் ஒரு பெயர் இருக்கிறது. இந்த வகை புலிகள் கடந்த நூற்றாண்டு வரை இந்த பூமியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலம் வந்து கொண்டிருந்தன. உலகத்தில் இருந்த மற்றும் தற்போது இருக்கிற புலி வகைகளிலேயே இதுதான் மூன்றாவது பெரிய புலி. அதிலும் குறிப்பாக ஆண் புலி பெண் புலியை விடப் பெரியதாக இருக்கும். அதிகபட்சமாக 240 கிலோ வரை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெண் புலிகளின் அதிகபட்ச எடையே 135 கிலோ தான்.

19ஆம் நூற்றாண்டு வரை இந்த வகை புலிகள், ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், துருக்கி, மங்கோலியா உள்ளிட்ட மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பரவலாக காணப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இவற்றிற்கான அழிவுக்காலம் தொடங்கியது.

ஒரு நாட்டின் ராணுவம் இரவு பகலாக வேட்டையாடி அழித்த உயிரினம் அநேகமாக இது ஒன்றாகத் தான் இருக்கும். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்ய அரசு காடுகளை அழித்து அரிசியையும், பருத்தியையும் விவசாயம் செய்ய நினைத்தது. இதற்காக காஸ்பியன் கடலை ஒட்டி இருக்கிற பெரிய காடு அழிக்கப்பட்டது. அதில் வசித்து வந்த ஏராளமான காஸ்பியன் புலிகளும் ரஷ்ய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டன. இதேபோல மற்ற நாடுகளில் இருந்த புலிகளும் அவற்றின் தோலுக்காகவும், பல், நகம் போன்றவற்றிற்காகவும் வேகமாக வேட்டையாடப்பட்டன. விளைவு காணாமல் போனது காஸ்பியன் புலி.

பூமிப் பந்தில் இருந்து கடைசி காஸ்பியன் புலி எப்போது மறைந்தது என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. 1954ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசியாக எஞ்சியிருந்த ஒரு புலியும் பரலோகம் போய்விட்டதாக கூறப்படுவதை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் இன்னும் கூட ஆப்கானிஸ்தான், துருக்மெனிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் இந்த வகை புலிகள் கண்ணில்படுவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் அவை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Thursday, April 14, 2011

பாவம் தூங்கட்டும்..














அதிகாலையை நெருங்கும் வேளை

ஆளரவமற்ற ஏகாந்த சாலை

சோடியம்வேப்பர் வெளிச்சத்தில்

சோம்பல் முறித்து

ஆழ்ந்து தூங்கியது

அந்த தார்ச்சாலை


காயும் பகலில்

கனரக வாகனங்கள்

அரைத்து விரைந்த

அயர்வு போக

ஆழ்ந்து தூங்கியது

அந்த தார்ச்சாலை


வெளிச்ச மயக்கத்தில்

மிகமிக மெலிதாய்

மூச்சுவிடும் - அந்த

கருப்பு குழந்தையை

எழுப்ப மனமின்றி

வண்டியை அணைத்துவிட்டு

சாலையோரம் காத்திருக்கிறேன் நான்...

Friday, April 8, 2011

கடல் பசு

பிரம்மாண்டமான ஸ்டெல்லர் கடல் பசுக்கள் (Steller's sea cow) ஒரு காலத்தில் வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ஏராளமாக இருந்தன. ஜார்ஜ் வில்ஹெம் ஸ்டெல்லர் (Georg Wilhelm Steller) என்பவர்தான் முதன்முதலில் 1741ஆம் ஆண்டு கமாண்டர் தீவுகள் பகுதியில் இப்படி ஒரு மெகா பசு கடலில் மிதந்து கொண்டிருப்பது பற்றி உலகிற்கு தெரியப்படுத்தினார். அதனால் இந்த வகை கடல் பசுக்களுக்கு அவருடைய பெயரையே வைத்துவிட்டார்கள்.

இப்படி ஒரு உயிரினம் இருப்பது தெரியவந்த 27 ஆண்டுகளில் ஐரோப்பியர்கள் இதன் கதையை முடித்துவிட்டார்கள். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. கடல் பயணம் மேற்கொண்டவர்கள் இதன் கறியை சாப்பிட்டுவிட்டு, தோலைப் படகு செய்யப் பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு, வெண்ணைக்கு மாற்றாக இருந்ததுடன், விளக்கு எரிக்கவும் பயன்பட்டது. புகையும், வாசனையும் இல்லாமல் நீண்ட நேரம் நின்று எரிந்ததால், இதன் கொழுப்பு எண்ணெய்க்கு அந்த காலத்தில் பயங்கர கிராக்கி இருந்தது.

இப்படி மனிதர்களுக்கு பலவிதங்களில் பயன்பட்டதால் ஸ்டெல்லர் கடல் பசுக்கள் மின்னல் வேகத்தில் வேட்டையாடப்பட்டன. 10 மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த பசுக்களால் 5 நிமிடங்களுக்கு மேல் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது. அதனால் எளிதாக வேட்டைக்காரர்களின் கண்களில் சிக்கிக் கொள்ளும். சுமார் 30 அடி நீளம் உள்ள உடலை தூக்கிக் கொண்டு இவற்றால் வேகமாக நீந்தவும் முடியாது என்பதால், மிகவும் எளிதாகவே வேட்டையாடப்பட்டன.

இவற்றிற்கு பற்கள் கிடையாது. அதற்கு பதிலாக மேல் வரிசையிலும், கீழ் வரிசையிலும் இரண்டு தட்டையான வெள்ளை நிற எலும்புகள் இருக்கும். பொதுவாக இவை கடலில் இருக்கும் பாசி, புற்கள் போன்றவற்றையே உட்கொண்டதால், பல் என்னும் கிரைண்டர் இவற்றிற்கு தேவைப்படவில்லை. இவை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட இன்றைய கடல் பசுக்கள் போலவே இருக்கும். இதனைப் பற்றிய ஸ்டெல்லரின் விவரிப்புகளைப் படிக்கும்போது, இது மிகவும் அமைதியான உயிரினம் என்றே தோன்றுகிறது. ஒரு பாவப்பட்ட உயிரினத்தை நமது சுயநலத்திற்காக பரலோகம் அனுப்பிவிட்டோம்.

Saturday, April 2, 2011

புயல்


புயல் எனை
பிடித்து உலுக்கியது
இலைகள் உதிர்ந்தன
கிளைகள் முறிந்தன
கனிகள் கழன்று
காற்றில் பறந்தன
எதிர்காலம் கேள்விக்குறியாய்
வளைந்து முறைத்தது

இருந்தும்...
நம்பிக்கை வேர்களை
நங்கூரமாய் பாய்ச்சி
புயலைப் பார்த்து
புன்னகைக்கிறேன்

Wednesday, March 30, 2011

மறுபிறவி


புதிதாய் பிறக்கிறேன் நான்...
நொடிக்கு நொடி
அன்பாய் அரவணைத்து
அடித்துத் துவைத்து
செதுக்கித் தள்ளி
எத்தனையோ கைகள்
எத்தனையோ விதங்களில்
கைம்மாறு கருதாமல்
கற்றுத் தருகின்றன
கடைத்தேற்றி விடுகின்றன
அந்நேரம் வலித்தாலும்
ஆயுளுக்கும் வலுசேர்க்கும்
புதிய புதிய சிந்தனைகளால்
புதிதாய் பிறக்கிறேன் நான்