புலி என்றால் எல்லோருக்கும் கிலிதான். ஆனால் அந்த புலியையே திட்டம் போட்டு போட்டுத் தள்ளும் 'திறமை' மனிதர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. மனிதர்களின் இந்த மெகா திறமையால் மண்ணில் இருந்து மறைந்த போன ஒரு அரிய உயிரினம் தான் காஸ்பியன் புலி.
இதற்கு பெர்ஷியன் புலி என்றும் ஒரு பெயர் இருக்கிறது. இந்த வகை புலிகள் கடந்த நூற்றாண்டு வரை இந்த பூமியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலம் வந்து கொண்டிருந்தன. உலகத்தில் இருந்த மற்றும் தற்போது இருக்கிற புலி வகைகளிலேயே இதுதான் மூன்றாவது பெரிய புலி. அதிலும் குறிப்பாக ஆண் புலி பெண் புலியை விடப் பெரியதாக இருக்கும். அதிகபட்சமாக 240 கிலோ வரை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெண் புலிகளின் அதிகபட்ச எடையே 135 கிலோ தான்.
19ஆம் நூற்றாண்டு வரை இந்த வகை புலிகள், ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், துருக்கி, மங்கோலியா உள்ளிட்ட மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பரவலாக காணப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இவற்றிற்கான அழிவுக்காலம் தொடங்கியது.
ஒரு நாட்டின் ராணுவம் இரவு பகலாக வேட்டையாடி அழித்த உயிரினம் அநேகமாக இது ஒன்றாகத் தான் இருக்கும். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்ய அரசு காடுகளை அழித்து அரிசியையும், பருத்தியையும் விவசாயம் செய்ய நினைத்தது. இதற்காக காஸ்பியன் கடலை ஒட்டி இருக்கிற பெரிய காடு அழிக்கப்பட்டது. அதில் வசித்து வந்த ஏராளமான காஸ்பியன் புலிகளும் ரஷ்ய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டன. இதேபோல மற்ற நாடுகளில் இருந்த புலிகளும் அவற்றின் தோலுக்காகவும், பல், நகம் போன்றவற்றிற்காகவும் வேகமாக வேட்டையாடப்பட்டன. விளைவு காணாமல் போனது காஸ்பியன் புலி.
பூமிப் பந்தில் இருந்து கடைசி காஸ்பியன் புலி எப்போது மறைந்தது என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. 1954ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசியாக எஞ்சியிருந்த ஒரு புலியும் பரலோகம் போய்விட்டதாக கூறப்படுவதை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் இன்னும் கூட ஆப்கானிஸ்தான், துருக்மெனிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் இந்த வகை புலிகள் கண்ணில்படுவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் அவை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment