நடந்து முடிந்த
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்வதற்காக நினைவுத்
தூண்களும், கட்டடங்களும் கட்டப்படுவதைத்தான் வரலாறு இதுவரை பார்த்திருக்கிறது.
ஆனால் இதற்கு நேர் எதிராக, நடைபெறாத ஒரு விஷயத்தை நினைவுகூர மக்கள் கைக்காசைப் போட்டு
கட்டடம் கட்டியது அநேகமாக மெட்ராசில் மட்டும்தான் இருக்க முடியும். அப்படி உருவானதுதான்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் மெமோரியல் ஹால்.
மெமோரியல் ஹால் |
இந்தியாவின் முதல்
சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கப்படும் சிப்பாய் கலகம், கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய சிப்பாய்களால் 1857ஆம் ஆண்டு, மே 10ந் தேதி, மீரட் நகரில் தொடங்கியது. ஒரு மூலையில் பற்றிய தீ மளமளவென
மற்ற இடங்களுக்கும் பரவுவது போல, மீரட்டையும் மீறி பிற நகரங்களையும் இந்த கலகம்
கபளீகரம் செய்தது. குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில் பரவிய கலகத்தில்
சிப்பாய்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் பங்கெடுத்துக் கொண்டனர்.
முக்கிய கிளர்ச்சி
இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, குர்காவுன் ஆகிய இடங்களை மையம் கொண்டிருந்தது. கிளர்ச்சியாளர்கள் கிழக்கிந்திய படையினருக்கு
பெரும் சவாலாக விளங்கினர். ஓராண்டு
கடும் போராட்டத்திற்கு பிறகு ஜூன் 20, 1858இல்தான் கலகத்தை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வர
முடிந்தது.
இந்த கலகம்
முடிவுக்கு வந்ததும், இதனை நினைவுகூறும் வகையில் லக்னோ, கான்பூர், டெல்லி போன்ற
இடங்களில் நினைவகங்கள் அமைக்கப்பட்டன. காரணம், இந்த நகரங்கள் சிப்பாய் கலகத்தின் தாக்கத்தை
நேரடியாக உணர்ந்தன. இந்நகரத் தெருக்களில் கலகத்தின்போது ரத்த ஆறு ஓடியது. மக்கள்
பதற்றத்துடனும், பயத்துடனும் ஆங்காங்கே பதுங்கிக் கிடந்தனர். ஆனால் இந்த கலகத்தால்
மெட்ராஸ் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.
கலகம் செய்த சிப்பாய் களுக்கான தண்டனை |
திருவல்லிக்கேணி,
ஜார்ஜ் டவுன் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான கலவரங்கள் வெடித்தன. அதுவும்
உடனடியாக அடக்கப்பட்டு விட்டன. எனவே மெட்ராஸ் ராஜ்தானியில் சிப்பாய் கலகத்தால் ஒரு
ஆங்கிலேய உயிர்கூட பறிபோகவில்லை. இதற்காக நிச்சயம் ஆண்டவருக்கு நன்றி சொல்ல
வேண்டும் என்று சென்னையில் கூடிய ஒரு ஆங்கிலேய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து மெட்ராசில் ஒரு நினைவகம் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டு, அதற்காக
மெட்ராசில் வசித்த ஆங்கிலேயர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது.
அண்ணா
பல்கலைக்கழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரியின் அன்றைய முதல்வர் கர்னல் ஜார்ஜ்
வின்ஸ்காம் (Col.George Winscom)
இதற்கென ஒரு அழகிய கட்டடத்தை வடிவமைத்துக் கொடுத்தார். இதனையடுத்து கட்டுமானப் பணி
1858ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் மக்களிடம் பணம் வசூலித்து கட்ட
வேண்டியிருந்ததால், பணி மெல்ல ஆமை வேகத்தில் நடைபெற்றது. இதனிடையே கர்னல் ஹார்ஸ்லி
என்பவர் வின்ஸ்காமின் வடிவமைப்பில் சில பல மாற்றங்களை செய்ய, ஒருவழியாக 1860களின்
தொடக்கத்தில் இந்த பணி நிறைவடைந்தது.
இப்படித்தான்
மெட்ராசிற்கு மெமோரியல் ஹால் என்ற அழகிய கட்டடம் கிடைத்தது. உயரமான மேடை, அதன்
மீது ஐயானிக் பாணியில் பிரம்மாண்ட தூண்களுடன் கூடிய போர்ட்டிக்கோ என மிக
நேர்த்தியாக கட்டப்பட்ட மெமோரியல் ஹால், மெட்ராசின் அழகிய கட்டடங்களுள் முக்கியமானதாக
கருதப்படுகிறது. கட்டடத்தின் முகப்பில், ஆண்டவருக்கு நன்றி சொல்லும் வகையில் “The
Lord has been Mindful of us: He will bless us.” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டன.
ஆரம்ப நாட்களில் இந்த
கட்டடம் பைபிள் பிரசங்கங்கள், கிறிஸ்துவக் கூட்டங்கள் போன்றவற்றிற்காக மட்டுமே
பயன்படுத்தப்பட்டது. மெட்ராசின் பைபிள் சொசைட்டி இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்தது.
பின்னர் காலப்போக்கில் இந்த அரங்கு, ஆடைகள் விற்பனைக் கண்காட்சி, கைவினைப் பொருள்
கண்காட்சி என பல்வேறு பயன்பாடுகளுக்காக வாடகைக்கு விடப்பட்டது.
இதன் எதிரில்
அரங்கேறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, 150 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இந்த
ஹால் தினமும் செய்திகளில் அடிபடுகிறது. இந்தியர்களிடையே எழுந்த ஒரு பெரிய புரட்சியால்
பாதிக்கப்படவில்லை என்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கட்டப்பட்ட கட்டடம்,
இன்று தினமும் புரட்சி முழக்கங்களை கண் எதிரில் பார்த்துக் கொண்டிருக்கிறது. வரலாறு
விசித்திரமானது என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்?
நன்றி - தினத்தந்தி
* மெமோரியல் ஹால்
வளாகத்தில் அருகிலேயே பாரம்பரிய பாணியில் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. இதுதான்
கிறிஸ்துவ இலக்கிய சங்கத்தின் தலைமையகமாக இருந்தது. இந்த பழைய கட்டடம் சில
ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டு தற்போது அங்கு ஒரு புதிய கட்டடம்
முளைத்திருக்கிறது.
No comments:
Post a Comment