என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, September 8, 2012

புனித மேரி தேவாலயம்


ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் புராதனமான புனித மேரி தேவாலயம்தான் சூயஸ் கால்வாயின் கிழக்கே உள்ள பழமையான ஆங்கிலத் திருச்சபை. கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் கால் பதித்த 1639ஆம் ஆண்டு முதல் 1678ஆம் ஆண்டு வரை கோட்டைக்குள் இருந்த உணவு பரிமாறும் அறையில்தான் மத நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதுதவிர ஒரு சிறிய கத்தோலிக்க தேவாலயமும் இருந்தது. ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் கம்பெனியின் ஏஜெண்டாக நியமிக்கப்பட்ட பிறகுதான் இதில் மாற்றம் வந்தது.
புனித மேரி தேவாலயத்தின் பழைய தோற்றம்

கம்பெனியின் அலுவலர்கள் உள்ளம் உருகி பிரார்த்திக்க ஒரு தரமான விஸ்தாரமான தேவாலயம் தேவை என்று நினைத்த ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் அதற்கான பணிகளைத் தொடங்கினார். எனவே கம்பெனியின் ஒப்புதலைப் பெறாமலேயே தேவாலயம் கட்ட நிதி திரட்ட ஆரம்பித்துவிட்டார். முதல் ஆளாக அவரே 100 பகோடாக்கள் (அந்தக் கால பணம்) கொடுத்து வசூலைத் தொடங்கி வைக்க, விரைவிலேயே 805 பகோடாக்கள் சேர்ந்தன. புனித மேரியின் அவதார தினமான மார்ச் 25, 1678இல் கட்டுமானப் பணிகள் தொடங்கியதால், தேவாலயத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுவிட்டது.

அப்போது கோட்டையின் பீரங்கித் தலைவராக இருந்த வில்லியம் டிக்சன், பீரங்கித் தாக்குதல்களையும் தாங்கக் கூடிய அளவில் வலுவான ஒரு தேவாலயத்தை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து செங்கல், கருங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றால் நடைபெற்ற கட்டுமானம் இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்து, அக்டோபர் 28, 1680ஆம் ஆண்டு இந்த தேவாலயம் தொடங்கி வைக்கப்பட்டது.  

பிரெஞ்சுப் படைகளின் அச்சுறுத்தல் இருந்ததால், பீரங்கி குண்டுகள் துளைக்காமல் இருக்க தேவாலயத்தின் கூரை சுமார் 2 அடி கனத்தில் மிக மிக உறுதியாக அமைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி பந்து போன்ற வட்டவடிவில் இருந்த அந்தக்கால பீரங்கிக் குண்டுகள் கூரை மீது விழுந்தாலும், விழுந்த உடன் வெளியே சிதறி விடும் வகையில் மேல்புறத்தை வடிவமைத்திருந்தனர். வெளிப்புறச் சுவர்கள் சுமார் 4 அடி கனத்தில் உறுதியாக அமைக்கப்பட்டன. தீ விபத்து போன்றவை நிகழாமல் தடுக்க முடிந்தவரை மரத்தின் பயன்பாட்டையும் தவிர்த்தனர்.

தேவாலயத்திற்கு அருகில் இன்று காட்சியளிக்கும் நீண்ட கோபுரம் 1701இல் கட்டப்பட்டு, இதன் கூம்பு 1710இல் சேர்க்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பறை, கோபுரங்கள், புதிய ஆராதனை மேடை என காலப்போக்கில் நிறைய விஷயங்கள் புதிதாக இணைந்து கொண்டன. தேவாலயத்தின் முன்புறம் பதிக்கப்பட்டுள்ள ஏராளமான கல்லறைக் கற்கள் அப்படி வந்து சேர்ந்தவைதான். சென்னை நகரின் பல முக்கியப் பிரமுகர்களின் கதைகளை சொல்லும் இந்த கற்கள், இங்கு வந்து சேர்ந்ததே ஒரு தனிக் கதை.
தேவாலயத்தின் கோபுரம்

1758-59இல் பிரெஞ்சுப் படைகள் சென்னையை முற்றுகையிட்ட போது, இன்றைய சட்டக்கல்லூரி இருக்கும் இடத்தில்தான் போர் நடைபெற்றது. அந்தக் காலத்தில் இந்த பகுதி வெறும் சுடுகாடாக இருந்தது. எனவே இங்கிருந்த கல்லறை மேடைகளை பீரங்கி நிறுத்தவும், கல்லறை ஸ்தூபிகளை மறைந்துகொண்டு சுடவும் பிரெஞ்சுப் படையினர் பயன்படுத்தினர். இதனால் கடுப்பாகிப் போன கம்பெனியினர், போரெல்லாம் ஓய்ந்த பிறகு இந்த இடத்தில் இருந்த கல்லறைக் கற்களை அகற்றி புனித மேரி தேவாலயத்தின் முற்றத்தில் பதித்துவிட்டனர்.

அதன் பிறகும் அந்த இறந்த ஆன்மாக்களை ஆங்கிலேயர்கள் அமைதியாக விடவில்லை. 1782இல் ஹைதர் அலி கோட்டையை முற்றுகையிட்டபோது, பீரங்கிகளை நிறுத்துவதற்கு தேவை என அந்தக் கற்களை மீண்டும் தோண்டி எடுத்துப் பயன்படுத்தினர். இதனால் பல கற்கள் உடைந்து போயின. இந்த சோதனைகளை எல்லாம் தாண்டி இப்போது சில கற்களே பிழைத்திருக்கின்றன.

அன்றைய சென்னை மாநகரின் பல பெரிய மனிதர்களின் கல்யாண வாழ்க்கையும் இந்த தேவாலயத்தில்தான் தொடங்கி இருக்கிறது. இங்கு முதன்முதலில் திருமண மோதிரம் அணிவித்தவர் திருவாளர் எலிஹூ யேல். இவர் தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு அஸ்திவாரம் போட்டவர். அதேபோல பிரிட்டீஷ் - இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நபரான ராபர்ட் கிளைவின் திருமணமும் இந்த தேவாலயத்தில்தான் நடைபெற்றது. இப்படி 1680இல் இருந்து இங்கு நடைபெற்ற திருமணங்கள், ஞானஸ்நானங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றின் விவரம் இங்குள்ள குறிப்பேட்டில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு பார்வைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையின் புகழ்பெற்ற ஆளுநர்களாக இருந்த லார்ட் பிகட், தாமஸ் மன்றோ ஆகியோர் இங்குதான் ஆழ்துயிலில் ஆழ்ந்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி கல்கத்தா நகரை நிர்மாணித்த ஜாப் சார்னாக்கிற்கும் இந்த தேவாலயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவரது மூன்று மகள்களுக்கு இங்கு தான் ஞானஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. பிகாரில் கணவனின் சிதையில் விழுந்து இறக்க முயன்ற ஒரு இந்து விதவையை காப்பாற்றி வாழ்க்கை கொடுத்தவர் இந்த ஜாப் சார்னாக். இவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்குத்தான் இங்கு ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது.

இப்படி இன்னும் ஏராளமான கதைகள் இங்குள்ள காற்றில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன. சென்னையின் ஆரம்ப நாள் கதைகளைப் பேசும் இந்த தேவாலயத்திற்குள் வெறுங்காலில் நடக்கும்போது, சரித்திரம் கால்களுக்கு அடியில் ஒரு அமைதியான நதியாக நழுவிச் செல்வதை உணர முடிகிறது.

நன்றி - தினத்தந்தி

* தேவாலயம் தொடர்பான பல பழம்பொருட்கள் அருகில் இருக்கும் கோட்டை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பலிபீடத்தின் மேல் இருக்கும் 'கடைசி இரவு உணவு' ஓவியம் ரஃபேல் பாணியில் வரையப்பட்டுள்ளது. ஆனால் வரைந்தவர் யார் எனத் தெரியவில்லை. இதன் ஒரு பகுதியை ரஃபேலே வரைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
* பலி பீடத்தின் இரும்புத் தடுப்புகள் தஞ்சாவூர் இளவரசியால் 1877இல் பரிசாக அளிக்கப்பட்டவை.

No comments:

Post a Comment