என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, September 29, 2012

எலெக்ட்ரிக் தியேட்டர்


சினிமாவில் சேர்வதற்காக எத்தனையோ பேர் கனவுகளோடு தினமும் சென்னையில் வந்து இறங்குகிறார்கள். இதற்கெல்லாம் காரணகர்த்தாவான சினிமா முதன்முதலில் சென்னைக்கு வந்த கதை உங்களுக்குத் தெரியுமா.. அந்த கதையோடு தொடர்புடைய ஒரு கட்டடம் இன்றும் அண்ணாசாலையில் இருக்கிறது என்பது தெரியுமா... இப்படி நிறைய தெரியுமாக்களுக்கு விடையாக நின்று கொண்டிருக்கிறது எலெக்ட்ரிக் தியேட்டர்.
எலெக்ட்ரிக் தியேட்டரின் இன்றைய தோற்றம்

சினிமாவுக்கும் சென்னைக்குமான தொடர்பு ஏறக்குறைய சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே தொடங்கிவிட்டது. பிரான்சைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் தான் முதன்முதலில் சலனப்படங்களை உருவாக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்தனர். சினிமாட்டோகிராப் என்ற இந்த கருவியைக் கொண்டு 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி உலகின் முதல் சினிமாவை பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டினர். அடுத்த இரண்டே ஆண்டுகளில் சினிமா சென்னைக்கு வந்துவிட்டது.
மெட்ராசில் முதன்முதலில் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான் 1897ஆம் ஆண்டு திரைப்படம் என்ற புதிய விஷயம் அரங்கேறியது. அதனை திரைப்படம் என்று கூட சொல்ல முடியாது. நிறைய புகைப்படங்கள் அடுத்தடுத்து ஸ்லைட் ஷோ மாதிரி நகரும் சலனப்படக் காட்சி என்று சொல்லலாம். இதனை எட்வர்டு என்ற ஐரோப்பியர் திரையிட்டார். ஒரு தொழிற்சாலையில் இருந்து ஊழியர்கள் வேலை முடிந்து வெளியேறுவது, ரயில் ஒன்று ரயில் நிலையத்திற்குள் நுழைவது போன்ற சில நிமிடங்களே ஓடக்கூடிய மவுனப் படங்கள்தான் இங்கு திரையிடப்பட்டன. திரையில் விரிந்த இந்த விநோதத்தை சென்னைவாசிகள் விழிகள் விரியப் பார்த்தனர்.
இந்த புதிய கலைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் பார்த்ததும் சென்னையில் சினிமாவிற்கான அடுத்தகட்ட முயற்சிகள் தொடங்கின. தெரு ஓரங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் இதுபோன்ற மவுனப் படங்கள் திரையிட்டுக் காட்டப்பட்டன. இப்படி கண்ட இடங்களில் கூட்டம் கூட்டுவதை விட, அதற்கென ஒரு அரங்கைக் கட்டினால் என்ன என இரண்டு ஆங்கிலேயர்களுக்கு தோன்றிய யோசனையின் பலன்தான் எலெக்ட்ரிக் தியேட்டர்.
வார்விக் மேஜர் மற்றும் ரெஜினால்ட் அயர் (Warwick Major & Reginald Eyre) ஆகிய இருவரும் இணைந்து, மெளன்ட் ரோடில் எலக்ட்ரிக் தியேட்டர்என்ற அரங்கை கட்டினார். இந்த தியேட்டர் 1900ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று கூறுப்படுகிறது. இதன் நூற்றாண்டை நினைவு கூறும் வகையில் 2000ஆம் ஆண்டு இந்திய தபால்துறை சிறப்பு தபால்தலை ஒன்றையும் வெளியிட்டது. ஆனால் சினிமா வரலாற்று ஆய்வாளர்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர்.
எலெக்ட்ரிக் தியேட்டர் 1913ஆம் ஆண்டுதான் கட்டப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதற்கு முன்னரே சென்னையில் சில திரையரங்குகள் இருந்திருக்கின்றன. இன்றையே பிராட்வே பகுதியில் குளூக் (Mrs. Klug) என்ற அம்மையார் 1911இல் பயாஸ்கோப் என்ற திரையரங்கை நடத்தியிருக்கிறார். உண்மையாகப் பார்த்தால் இதுதான் சென்னையின் முதல் நிரந்தரத் திரையரங்கம். ஆனால் குளூக் இதனை திரையரங்கமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டவில்லை. ஏற்கனவே இருந்த ஒரு கட்டடத்தை சற்றே மாற்றியமைத்து திரைப்படங்களை திரையிட்டார். இவர்தான் சென்னைவாசிகளுக்கு மாலையில் சினிமாவிற்கு போகும் பழக்கத்தை ஏற்படுத்தியவர்.
நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து குளூக் தனது தியேட்டரைப் பிரபலப்படுத்தினார். அந்த காலத்திலேயே மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக விளங்கிய பிராட்வேயில் தியேட்டரை அமைத்ததுடன், நிறைய பேர் பார்க்க வசதியாக ஒரு நூதன முறையையும் குளூக் பின்பற்றினார். அதாவது மாலை நேரம் முழுவதும் படங்கள் தொடர்ந்து திரையிடப்படும். யாருக்கு எப்போது வசதியோ அப்போது வந்து பார்த்து செல்லலாம். அந்த காலத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இதுதான் நடைமுறையில் இருந்தது.
குளூக்கின் இந்த திரையரங்கம் வெறும் 6 மாதங்கள்தான் நீடித்தது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் இத்தனை மாதங்கள் தொடர்ந்து தாக்குப் பிடித்ததே பெரிய விஷயமாக பேசப்பட்டது. குளூக்கிற்கு முன்பே 1907இல் மவுண்ட் ரோடில் மிஸ்குவித் அண்ட் கோ என்ற கட்டடத்தில் (Misquith & Co) லிரிக் (Lyric) என்ற திரையரங்கு இருந்திருக்கிறது. இதனைப் பற்றிய கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.
இந்த சூழலில் மவுண்ட் ரோடில் அவதரித்ததுதான் எலெக்ட்ரிக் தியேட்டர். திரையரங்கமாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கட்டப்பட்டது என்பதால் இதனையே சென்னையின் முதல் நிரந்தரத் திரையரங்கம் என எடுத்துக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் தென்னிந்தியாவின் முதல் நிரந்தரத் திரையரங்கமும் இதுதான். உறுதியான இரும்புத் தூண்களும், சாய்வான கூரையும் கொண்ட இந்த கல் கொட்டகைக் கட்டடம் அன்றைய சென்னைவாசிகளின் கனவுகளுக்கு வண்ணம் சேர்த்தது.
தியேட்டர் போஸ்டர்

மயக்கம் தரும் மெல்லிய விளக்கு வெளிச்சமும், கையால் சுற்றப்படும் புரொஜெக்டரும், மெல்ல விலகும் நீல நிற சாட்டின் துணியும், திரையில் வந்து போகும் மவுனப் படக் காட்சிகளும், அரங்கின் ஒரு மூலையில் இருந்து உயிர் கசியும் பியானோ இசையும்... அன்றைய மெட்ராஸ்வாசிகளை அப்படியே அலேக்காகத் தூக்கி ஒரு கனவு உலகத்தில் உலவ விட்டது என்றே சொல்ல வேண்டும்.
படம் பார்க்க வரும் ரசிகனுக்காக வார்விக் இன்னும் சில வசதிகளையும் ஏற்படுத்தித் தந்திருந்தார். திரையரங்கிற்கு பின்புறம் குடிமகன்களுக்காக பாரும், விளையாடி மகிழ பில்லியர்ட்ஸ் டேபிள் ஒன்றும் இருந்தது. அன்றைய மெட்ராசின் புகழ்பெற்ற உணவுக் கலைஞரான டி ஏஞ்ஜெலிஸ் அருகிலேயே ஹோட்டல் வைத்திருந்ததால், அருமையான உணவு வகைகளும் எலெட்ரிக் தியேட்டரின் திறந்தவெளி பாரில் கிடைத்தன.
இத்தனை வசதிகள் இருந்தும் எலெட்ரிக் தியேட்டரின் பயணம் இரண்டு ஆண்டுகளுக்கு (21 மாதங்கள்) மேல் தொடரவில்லை. இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று 1914இல் இதன் அருகிலேயே தொடங்கப்பட்ட கெயிட்டி தியேட்டர். ரகுபதி வெங்கைய்யா என்பவர் தொடங்கிய கெயிட்டிதான் தென்னிந்தியாவில் இந்தியர் ஒருவரால் கட்டப்பட்ட முதல் திரையரங்கம். இப்படி சில பல காரணங்களால் வார்விக் மேஜர் 1915ஆம் ஆண்டு தனது எலெக்ட்ரிக் தியேட்டரை தபால் துறைக்கு விற்றுவிட்டார். அன்று முதல் இன்று வரை இது இந்திய தபால் துறையின் வசம் இருக்கிறது.
தற்போது மவுண்ட் ரோடு தபால்நிலைய வளாகத்தில் இருக்கிறது இந்த பழமையான தியேட்டர். தபால்நிலைய வளாகத்திற்குள் நுழைந்ததுமே அந்தக்கால வீடு பாணியில் நம்மை எதிர்கொள்ளும் இந்த கட்டடத்தில் இப்போது அரிய தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த கட்டடத்திற்குள் இப்போது நுழைந்தாலும் எங்கிருந்தோ மெல்லிய பியானோ இசை கசிவதைப் போலவே இருக்கிறது. ஒருவேளை, இல்லாத திரைகளில் இப்போதும் அந்த கருப்பு வெள்ளைப் படங்கள் ஓடிக் கொண்டே இருக்கலாம்.
நன்றி - தினத்தந்தி

* உலகின் முதல் தபால் தலையான பென்னி பிளாக் (Penny Black) முதல் பல அரிய தபால் தலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

* இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இந்த தியேட்டர் 1900ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகத்தான் குறிக்கப்பட்டுள்ளது.

* இந்த கட்டடத்தின் சில பகுதிகள் 1980களில் இடிக்கப்பட்டுவிட்டன.

Sunday, September 23, 2012

சர்ச்சை நாயகன் எலிஹூ யேல்


அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்ததே மெட்ராஸ்தான். ஆம், மெட்ராஸ் வாரித் தந்த செல்வத்தில் இருந்து ஒரு பகுதியைக் கொண்டுதான் இந்த பல்கலைக்கழகம் வளர்ந்தது. இதற்கு நன்கொடை அளித்ததன் மூலம் சரித்திரத்தில் தனது பெயரை ஆழமாகப் பதித்துக் கொண்ட எலிஹூ யேலின் கதை மிகவும் விறுவிறுப்பானது.

இங்கிலாந்தைச் சேர்ந்த யேலின் குடும்பம் உள்நாட்டு குழப்பம் காரணமாக அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தது. அங்குதான் 1649இல் எலிஹூ யேல் பிறந்தார். பின்னர் இங்கிலாந்தில் இயல்புநிலை திரும்பியதால், யேலுக்கு மூன்று வயதாகும்போது அவரின் குடும்பம் மீண்டும் தாயகத்திற்கே வந்துவிட்டது. சற்றே வசதியான குடும்பத்தைச் சேர்ந்த எலிஹூ யேல், 1671 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு செல்லும் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பலில் ஏறினார். அந்தப் பயணம் தனது வாழ்வையே மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

எலிஹூ யேல்
24 வயதில் சாதாரண எழுத்தராக மெட்ராசிற்கு வந்த யேல், 15 வருட உழைப்பில் மெட்ராசின் இரண்டாவது கவர்னராக உயர்ந்தார். 1687இல் இருந்து 1692 வரை ஆளுநராக இருந்த யேல் (1684இல் ஆறுமாத காலம் தற்காலிக ஆளுநராக பொறுப்பு வகித்தார்), மெட்ராசின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்தார். மராட்டியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பரங்கிப்பேட்டை, கடலூர், குனிமேடு போன்ற இடங்களில் ஆங்கிலேயர்கள் குடியிருக்கவும், வியாபாரம் செய்யவும் உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் யேல். முகலாயர்களிடம் இருந்து மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் போன்ற சோழமண்டலத் துறைமுகங்களின் உரிமைகளையும் யேல் பெற்றுத் தந்தார்.

1689இல் முதல் இந்தியப் பட்டாளத்தை உருவாக்கிய யேல், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளின் உரிமைகளைப் பெற தீவிரமாக முயற்சித்தார். ஆனால் அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓராண்டுக்கு பிறகுதான் இது சாத்தியமானது. இந்தப் பகுதிகள் எல்லாம் இன்று சென்னையின் முக்கிய அங்கமாகத் திகழ்வதற்கு அஸ்திவாரம் போட்டவர் எலிஹூ யேல்தான். அவரது காலத்தில்தான் இந்தியாவின் முதல் மாநகராட்சியான சென்னை மாநகராட்சி உருவானது. ஆனால் இது யேலுக்கு எதிரான நடவடிக்கையின் பலனாகப் பிறந்தது.

யேல், கவர்னராக இருந்தபோது கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனராக ஜோசைய்யா சைல்டு என்பவர் இருந்தார். அவர், யேலின் தன்னிச்சையான நிர்வாகத்தை அடக்கவும், அதிகாரத்தைக் குறைக்கவும், நகராட்சி போன்ற அமைப்பு  வேண்டும் என கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பரிந்துரை கடிதம் எழுதினார். அதற்காக வழங்கப்பட்ட உரிமை சாசனத்தால்தான் 1688 செப்டம்பர் 29-ம் தேதி சென்னை கார்ப்பரேஷன் உருவானது.

யேல் கவர்னராக இருந்த போதுதான் சென்னை அரசு பொது மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டது. எலிஹூ யேலின் திருமணம், ஜார்ஜ் கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயத்தில்தான் நடந்தது. இப்படி யேலை நினைவு கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

யேலின் திருமணச் சான்றிதழ்

ஆனால் யேலின் சாதனைகளைவிட அவர் மீதான சர்ச்சைகளே அதிகம். இளமையிலேயே இறந்துபோன யேலின் மகன் டேவிட்டின் உடல் சென்னையில்தான் அடக்கம் செய்யப்பட்டது. மகனின் நினைவாக கடலூர் அருகே உள்ள தேவனாம்பட்டினத்தில் டேவிட் கோட்டை என்ற பெரிய கோட்டை ஒன்றை இரண்டு மில்லியன் செலவில் யேல் கட்டினார். அந்தப் பணம் முறைகேடாக சம்பாதித்தது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, யேல் பதவி இழந்தார். ஆனால் அதற்குள் எக்கச்சக்கமாக சொத்து சேர்த்துவிட்டார். 27 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய யேலின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் மேல் என்கிறார்கள்.

அந்த காலத்தில் கவர்னர் பதவிக்கே வெறும் 100 பவுண்ட்தான் சம்பளமாக வழங்கப்பட்டது. அப்படி இருக்க, 100 கோடி ரூபாயை யேல் எப்படி சம்பாதித்தார்?  இதற்கு முக்கியக் காரணம் அந்த காலத்தில் சென்னையில் நடைபெற்ற அடிமை வணிகம். இதன் மூலம் யேலுக்கு நிறைய வருவாய் கிடைத்தது. இதுமட்டுமின்றி யேல், வருவாயை அதிகப்படுத்திக்கொள்ள பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களிலும் இறங்கினார். கம்பெனிக்கு தெரியாமல் வைர வணிகத்திலும் ஈடுபட்டார். உள்ளூர் வரியை மிதமிஞ்சி உயர்த்தியதோடு மக்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் செய்தார். இவரது குதிரை லாயத்தில் வேலை செய்த ஒருவன் குதிரையைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தக் காலத்​தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

யேல் பல்கலைக்கழகம்
பதவி பறிக்கப்பட்டதும் யேல் இங்கிலாந்து திரும்பினார். 1718-ம் ஆண்டு அவரின் 69-வது வயதில் காட்டன் மதேர் என்பவர்அமெரிக்காவின் கனெடிக்கெட் பகுதியில் உள்ள தங்களது இறையியல் நிறுவனத்தை கல்வி நிலையமாக மாற்ற நிதி அளிக்குமாறு வேண்டினார். யேலும்தாராள மனதுடன் தன்னிடம் இருந்த புத்தகங்கள்ஜார்ஜ் மன்னரின் ஒவியம்உடைகள், மரச் சாமான்கள் போன்றவற்றை பரிசாக அளித்தார். இவற்றை ஏலத்தில் விட்டதன் மூலம் கிடைத்த 562 டாலர் பணத்தைக் கொண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அந்த கல்வி நிறுவனத்துக்கு அவரின் பெயரும் சூட்டப்பட்டது. அதன் பிறகுஅது பெரிய பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்தது. 1745-ம் ஆண்டு முதல் அந்தப் பல்கலைக்கழகத்துக்கே யேலின் பெயர் சூட்டப்பட்டுவிட்டது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் யேலை விட அதிகமான நிதி அளித்தவர் ஜெரேமியா டம்மர் என்பவர். அவரது பெயரைத்தான் பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. டம்மர் என்றால் வாய் பேச முடியாதவர் என்று பொருள். ஆகவேபல்கலைக்கழகத்துக்கு டம்மரின் பெயரை வைக்காமல் தவிர்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. 

யேலின் கல்லறை

மொத்தத்தில் யேல் மெட்ராசில் அடித்த கொள்ளைக்கு அமெரிக்காவில் தேடிய பிராயச்சித்தம்தான் யேல் பல்கலைக்கழகம். ஆனால் கடைசியில் அதிலும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

நன்றி - தினத்தந்தி

* இந்தியாவில் யூனியன் ஜாக் கொடியை 1687-ம் ஆண்டு யேல்தான் முதன்முறையாக பறக்கவிட்டவர்.

* புனித ஜார்ஜ் கோட்டையில் இவர் நட்டுவைத்த 50 அடி உயர கொடிக் கம்பம்தான் இந்தியாவில் மிகப் பெரிய கொடிக் கம்பமாக விளங்கியது.

* அறிஞர் அண்ணா அமெரிக்கா சென்றபோது புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் உரையாற்றி இருக்கிறார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அண்ணா. இவை எதிலும் மேற்சொன்ன நான்கு எழுத்துகளும் வராது. ஆனால் நூறு என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் ’D’ என்ற எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார். 

Saturday, September 15, 2012

புனித ஜார்ஜ் பள்ளி


அண்மைக் காலமாக சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் புனித ஜார்ஜ் இலவசப் பள்ளிதான் இந்தியாவிலேயே முதன்முதலாக நிறுவப்பட்ட மேற்கத்திய பாணி பள்ளிக்கூடம். அவ்வளவு ஏன், அந்தக் கால சிவப்புக் கட்டடங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இதுதான் ஆசியாவிலேயே பழைய மேற்கத்திய பாணிப் பள்ளி என்றும் சொல்லப்படுகிறது. 300 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த பள்ளியின் ஆரம்பப் புள்ளி புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்துதான் தொடங்கியது.
புனித ஜார்ஜ் பள்ளி
கிழக்கிந்திய கம்பெனியார் வியாபாரம் செய்வதற்காகத்தான் மெட்ராஸ் என்ற நிலப்பகுதியில் குடியேறினர். எனவே ஆரம்ப நாட்களில் அவர்களின் கவனம் முழுவதும் வியாபாரத்தில் தான் இருந்தது. மற்ற எதைப் பற்றியும் அவர்கள் அதிகமாக கவலைப்படவில்லை. இந்நிலையில் வெள்ளையர் நகரத்தில் வசித்த எப்ரைம் என்ற பிரெஞ்சுப் பாதிரியார் தனது வீட்டிலேயே ஒரு சிறிய பள்ளியை தொடங்கினார்.

மெட்ராசில் குடியேறிய புதிதில் கிழக்கிந்திய கம்பெனியில் மணமாகாத இளைஞர்களே பெருமளவில் இருந்ததால் கம்பெனி ஊழியர்களின் குழந்தைகள் கோட்டைக்குள் குறைவாகவே இருந்தனர். இதனிடையே ரோமன் கத்தோலிக்கர்கள் சிலரும் பள்ளிகளைத் தொடங்கினர். இதனால் அச்சமடைந்த பிராடஸ்டன்டுகள், தங்கள் குழந்தைகளுக்கென ஒரு ஆசிரியர் தேவை என இங்கிலாந்து நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். இதனை ஏற்று பிராடஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த ரால்ப் ஒர்டே என்ற திறமையான ஆசிரியர் 1677இல் அனுப்பி வைக்கப்பட்டார். இவர் குழந்தைகளுக்கு கிறிஸ்துவ பிராடஸ்டன்ட் பிரிவுக் கொள்கைகளை கல்வியோடு சேர்த்து போதித்தார். இதுதான் ஆங்கில அரசு இந்தியாவில் கல்விப் பணியில் எடுத்து வைத்த முதல் அடி.

சுமார் 40 ஆண்டுகாலம் இந்த பள்ளி நடைபெற்று வந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து சென்னையில் குடியேறிய பிராடஸ்டன்ட் குழந்தைகளுக்காக அரசே ஒரு புதிய இலவசப் பள்ளியை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன்படி கோட்டையின் பாதிரியாராக இருந்த வில்லியம் ஸ்டீவன்ஸன் 1715இல், 'புனித மேரி தேவாலய தர்ம பள்ளி'-யைத் தொடங்கினார்.

இந்த காலகட்டத்தில் பிரெஞ்சுப் படை கிழக்கிந்திய படையுடன் அடிக்கடி மோதி வந்தது. எனவே கோட்டைக்குள் இருப்பது பாதுகாப்பானது அல்ல என சொல்லப்பட்டதால் பள்ளியை கோட்டைக்கு வெளியே மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளி செயல்பட்டு வந்த இடம் அரசுக்கு 300 பகோடாக்களுக்கு (அந்தக்கால பணம்) விற்கப்பட்டது. அரசு இழப்பீடாக மேலும் 400 பகோடாக்களைத் தந்தது. இதனைக் கொண்டு கோட்டைக்கு வெளியே 1751இல் தீவுத்திடலில் ஒரு வாடகை இடத்திற்கு பள்ளி மாற்றப்பட்டது.

இதனிடையே ஏற்கனவே சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த ஆண், பெண் ஆதரவற்றோர் இல்லங்களுடன் இந்த பள்ளி இணைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக உயர்ந்ததால் அந்த இடம் போதவில்லை. எனவே இப்போது எழும்பூர் ரயில் நிலையம் இருக்கும் இடத்திற்கு பள்ளி இடம்மாறியது. இப்படியே சில ஆண்டுகள் கழிந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் எழும்பூர் ரயில் நிலையத்தை விஸ்தரிக்க விரும்பியதால் மீண்டும் ஒரு இடப்பெயர்ச்சிக்கு ஆளானது இந்தப் பள்ளி. அப்படித்தான் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் இந்த இடத்திற்கு கடைசியாக வந்து சேர்ந்தது புனித மேரி இலவசப் பள்ளி.

பிரிகேடியர் கான்வே என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு சொந்தமான 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், அந்தக் காலத்தில் 29,750 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. கான்வேயின் பளிங்கு சிலை ஒன்று கோட்டைக்குள் இருக்கும் புனித மேரி தேவாலயத்தில் இன்றும் இருக்கிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள தேவாலயம் 1883 - 84 -ம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கிலாந்தின் ஒரு கிராமப்புற தேவாலயம் போல தோற்றமளிக்கும் இதனைக் கட்ட அந்தக் காலத்திலேயே 16,000 ரூபாய் வரை செலவானதாம்.

இரண்டாம் உலகப் போருக்கும் இந்த பள்ளிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. காரணம் போரின் போது, ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக இந்த பள்ளி ஒதுக்கப்பட்டது. எனவே 1945- 46 -ம் ஆண்டில் அரசு உத்தரவின்படி, கோவையில் இயங்கி வந்த ஸ்டேன்ஸ் பள்ளி வளாகத்துக்கு இந்த பள்ளி மாற்றப்பட்டது. இறுதியாக, 1954 - ல் கோவையிலிருந்து மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகுதான் இது புனித ஜார்ஜ் பள்ளி மற்றும் ஆதரவற்றோர் இல்லம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

உருண்டோடிய இந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு கல்வி பெற்றுச் சென்றுவிட்டனர். எத்தனையோ கல்விமான்கள் இங்கு தங்களின் அறிவை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் சென்றுள்ளனர். ஆங்கிலேய ஆதிக்க நாட்கள், சுதந்திரப் போராட்ட நாட்கள், சுதந்திரத்திற்கு பிந்தைய சுகமான நாட்கள் என வரலாற்று சிறப்புமிக்க பல நினைவுகளை சுமந்தபடி இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த சிவப்புக் கட்டடங்களுக்கு இடையே நடைபயிலும்போது, மெட்ராசின் சரித்திரம் சக பயணியாக உடன் வருவது போலவே இருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* ஆரம்ப நாட்களில் இந்த பள்ளியில் ஆங்கிலேயர்களின் குழந்தைகள் மட்டுமே கல்வி கற்றனர்.
* விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான மாணவர்களோடு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் இன்று 1500க்கும் அதிகமானோர் பயில்கின்றனர். 

Saturday, September 8, 2012

புனித மேரி தேவாலயம்


ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் புராதனமான புனித மேரி தேவாலயம்தான் சூயஸ் கால்வாயின் கிழக்கே உள்ள பழமையான ஆங்கிலத் திருச்சபை. கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் கால் பதித்த 1639ஆம் ஆண்டு முதல் 1678ஆம் ஆண்டு வரை கோட்டைக்குள் இருந்த உணவு பரிமாறும் அறையில்தான் மத நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதுதவிர ஒரு சிறிய கத்தோலிக்க தேவாலயமும் இருந்தது. ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் கம்பெனியின் ஏஜெண்டாக நியமிக்கப்பட்ட பிறகுதான் இதில் மாற்றம் வந்தது.
புனித மேரி தேவாலயத்தின் பழைய தோற்றம்

கம்பெனியின் அலுவலர்கள் உள்ளம் உருகி பிரார்த்திக்க ஒரு தரமான விஸ்தாரமான தேவாலயம் தேவை என்று நினைத்த ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் அதற்கான பணிகளைத் தொடங்கினார். எனவே கம்பெனியின் ஒப்புதலைப் பெறாமலேயே தேவாலயம் கட்ட நிதி திரட்ட ஆரம்பித்துவிட்டார். முதல் ஆளாக அவரே 100 பகோடாக்கள் (அந்தக் கால பணம்) கொடுத்து வசூலைத் தொடங்கி வைக்க, விரைவிலேயே 805 பகோடாக்கள் சேர்ந்தன. புனித மேரியின் அவதார தினமான மார்ச் 25, 1678இல் கட்டுமானப் பணிகள் தொடங்கியதால், தேவாலயத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுவிட்டது.

அப்போது கோட்டையின் பீரங்கித் தலைவராக இருந்த வில்லியம் டிக்சன், பீரங்கித் தாக்குதல்களையும் தாங்கக் கூடிய அளவில் வலுவான ஒரு தேவாலயத்தை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து செங்கல், கருங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றால் நடைபெற்ற கட்டுமானம் இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்து, அக்டோபர் 28, 1680ஆம் ஆண்டு இந்த தேவாலயம் தொடங்கி வைக்கப்பட்டது.  

பிரெஞ்சுப் படைகளின் அச்சுறுத்தல் இருந்ததால், பீரங்கி குண்டுகள் துளைக்காமல் இருக்க தேவாலயத்தின் கூரை சுமார் 2 அடி கனத்தில் மிக மிக உறுதியாக அமைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி பந்து போன்ற வட்டவடிவில் இருந்த அந்தக்கால பீரங்கிக் குண்டுகள் கூரை மீது விழுந்தாலும், விழுந்த உடன் வெளியே சிதறி விடும் வகையில் மேல்புறத்தை வடிவமைத்திருந்தனர். வெளிப்புறச் சுவர்கள் சுமார் 4 அடி கனத்தில் உறுதியாக அமைக்கப்பட்டன. தீ விபத்து போன்றவை நிகழாமல் தடுக்க முடிந்தவரை மரத்தின் பயன்பாட்டையும் தவிர்த்தனர்.

தேவாலயத்திற்கு அருகில் இன்று காட்சியளிக்கும் நீண்ட கோபுரம் 1701இல் கட்டப்பட்டு, இதன் கூம்பு 1710இல் சேர்க்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பறை, கோபுரங்கள், புதிய ஆராதனை மேடை என காலப்போக்கில் நிறைய விஷயங்கள் புதிதாக இணைந்து கொண்டன. தேவாலயத்தின் முன்புறம் பதிக்கப்பட்டுள்ள ஏராளமான கல்லறைக் கற்கள் அப்படி வந்து சேர்ந்தவைதான். சென்னை நகரின் பல முக்கியப் பிரமுகர்களின் கதைகளை சொல்லும் இந்த கற்கள், இங்கு வந்து சேர்ந்ததே ஒரு தனிக் கதை.
தேவாலயத்தின் கோபுரம்

1758-59இல் பிரெஞ்சுப் படைகள் சென்னையை முற்றுகையிட்ட போது, இன்றைய சட்டக்கல்லூரி இருக்கும் இடத்தில்தான் போர் நடைபெற்றது. அந்தக் காலத்தில் இந்த பகுதி வெறும் சுடுகாடாக இருந்தது. எனவே இங்கிருந்த கல்லறை மேடைகளை பீரங்கி நிறுத்தவும், கல்லறை ஸ்தூபிகளை மறைந்துகொண்டு சுடவும் பிரெஞ்சுப் படையினர் பயன்படுத்தினர். இதனால் கடுப்பாகிப் போன கம்பெனியினர், போரெல்லாம் ஓய்ந்த பிறகு இந்த இடத்தில் இருந்த கல்லறைக் கற்களை அகற்றி புனித மேரி தேவாலயத்தின் முற்றத்தில் பதித்துவிட்டனர்.

அதன் பிறகும் அந்த இறந்த ஆன்மாக்களை ஆங்கிலேயர்கள் அமைதியாக விடவில்லை. 1782இல் ஹைதர் அலி கோட்டையை முற்றுகையிட்டபோது, பீரங்கிகளை நிறுத்துவதற்கு தேவை என அந்தக் கற்களை மீண்டும் தோண்டி எடுத்துப் பயன்படுத்தினர். இதனால் பல கற்கள் உடைந்து போயின. இந்த சோதனைகளை எல்லாம் தாண்டி இப்போது சில கற்களே பிழைத்திருக்கின்றன.

அன்றைய சென்னை மாநகரின் பல பெரிய மனிதர்களின் கல்யாண வாழ்க்கையும் இந்த தேவாலயத்தில்தான் தொடங்கி இருக்கிறது. இங்கு முதன்முதலில் திருமண மோதிரம் அணிவித்தவர் திருவாளர் எலிஹூ யேல். இவர் தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு அஸ்திவாரம் போட்டவர். அதேபோல பிரிட்டீஷ் - இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நபரான ராபர்ட் கிளைவின் திருமணமும் இந்த தேவாலயத்தில்தான் நடைபெற்றது. இப்படி 1680இல் இருந்து இங்கு நடைபெற்ற திருமணங்கள், ஞானஸ்நானங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றின் விவரம் இங்குள்ள குறிப்பேட்டில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு பார்வைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையின் புகழ்பெற்ற ஆளுநர்களாக இருந்த லார்ட் பிகட், தாமஸ் மன்றோ ஆகியோர் இங்குதான் ஆழ்துயிலில் ஆழ்ந்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி கல்கத்தா நகரை நிர்மாணித்த ஜாப் சார்னாக்கிற்கும் இந்த தேவாலயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவரது மூன்று மகள்களுக்கு இங்கு தான் ஞானஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. பிகாரில் கணவனின் சிதையில் விழுந்து இறக்க முயன்ற ஒரு இந்து விதவையை காப்பாற்றி வாழ்க்கை கொடுத்தவர் இந்த ஜாப் சார்னாக். இவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்குத்தான் இங்கு ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது.

இப்படி இன்னும் ஏராளமான கதைகள் இங்குள்ள காற்றில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன. சென்னையின் ஆரம்ப நாள் கதைகளைப் பேசும் இந்த தேவாலயத்திற்குள் வெறுங்காலில் நடக்கும்போது, சரித்திரம் கால்களுக்கு அடியில் ஒரு அமைதியான நதியாக நழுவிச் செல்வதை உணர முடிகிறது.

நன்றி - தினத்தந்தி

* தேவாலயம் தொடர்பான பல பழம்பொருட்கள் அருகில் இருக்கும் கோட்டை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பலிபீடத்தின் மேல் இருக்கும் 'கடைசி இரவு உணவு' ஓவியம் ரஃபேல் பாணியில் வரையப்பட்டுள்ளது. ஆனால் வரைந்தவர் யார் எனத் தெரியவில்லை. இதன் ஒரு பகுதியை ரஃபேலே வரைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
* பலி பீடத்தின் இரும்புத் தடுப்புகள் தஞ்சாவூர் இளவரசியால் 1877இல் பரிசாக அளிக்கப்பட்டவை.

Saturday, September 1, 2012

கவர்னரான வைர வியாபாரி


வந்தாரை வாழ வைக்கும் மதராசபட்டினம் எத்தனையோ பேருக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. சாமானியர்களாய் வந்தவர்களை சரித்திர ஏடுகளில் சாகாவரம் பெற்றவர்களாய் நிலைக்கச் செய்திருக்கிறது. அப்படி மெட்ராசால் மேன்மை பெற்ற ஒருவர்தான் கவர்னர் தாமஸ் பிட்.
தாமஸ் பிட்

1653இல் இங்கிலாந்தில் பிறந்த தாமஸ் பிட், தனது இருபத்தியோராவது வயதில் இந்தியா வந்தார். ஒரிசாவின் பாலாசூர் நகரில் தங்கியிருந்த பிட், கிழக்கிந்திய கம்பெனியின் ஒப்புதலைப் பெறாமலே கிழக்கிந்திய நாடுகளுடன் வணிகம் செய்து வந்தார். இதனால் கம்பெனிக்கும் இவருக்கும் அடிக்கடி முட்டிக் கொண்டது. இவரை ஒடுக்க கம்பெனி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் பிட் அவை அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டே இருந்தார்.

இதனிடையே 1683இல் இங்கிலாந்து சென்ற பிட்டை அங்கேயே மடக்கிப் பிடித்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான அவரது செயல்களுக்காக 400 பவுண்டுகள் அபராதம் விதித்தார்கள். ஆனால் அதற்குள் பிட் இந்தியாவில் எக்கச்சக்கமாக சம்பாதித்து விட்டதால், அந்த தொகையை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கட்டிவிட்டார். இருந்தாலும் சிறிது காலம் அடக்கி வாசிக்க முடிவு செய்த அவர், இங்கிலாந்திலேயே சில ஆண்டுகள் தங்கி இருந்தார். அங்கு நிறைய நிலங்களை வாங்கிப் போட்ட பிட், எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

பின்னர் 1693இல் மீண்டும் இந்தியா வந்த தாமஸ் பிட், இம்முறை கிழக்கிந்திய கம்பெனியுடன் சமாதானம் செய்து கொண்டார். அவரது திறமையை புரிந்துகொண்ட கம்பெனி அவருக்கு தலைவர் பதவி கொடுத்து மெட்ராசிற்கு அனுப்பியது. அடுத்த ஆண்டே அவர் புனித ஜார்ஜ் கோட்டையின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் தளபதியான தாவூத் கான், 1702ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையை மூன்று மாதங்களுக்கும் மேலாக முற்றுகையிட்டிருந்தபோது, கோட்டையின் கவர்னராக தாமஸ் பிட்தான் இருந்தார். அவரது சமரச முயற்சிகளின் பலனாக முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர் வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க உள்ளூர் வீரர்களை கம்பெனியின் படையில் சேர்த்து கோட்டைக்கு வலுசேர்த்தார் தாமஸ் பிட்.

மெட்ராஸ் நகரை முதன்முறையாக துல்லியமாக சர்வே எடுக்க ஏற்பாடு செய்தது போன்ற நடவடிக்கைகளால் தாமஸ் பிட்டின் ஆட்சிக் காலத்தை மெட்ராசின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1708இல் திருவொற்றியூர், கத்திவாக்கம், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, சாத்தங்காடு ஆகிய கிராமங்களை தாவூத் கானிடம் இருந்து மானியமாகப் பெற்று மெட்ராசுடன் இணைத்ததும் தாமஸ் பிட்தான்.

தனக்கு இவ்வளவு செய்த பிட்டிற்கு, மெட்ராஸ் ஒரு பெரிய வைரத்தை பரிசளித்தது. ஆம், இந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில் முக்கியமானது ரீஜென்ட் வைரம். இந்த வைரத்திற்கு மற்றொரு பெயர் என்ன தெரியுமா?... பிட் வைரம் (Pitt Diamond). இந்த வைரம் கோல்கொண்டாவின் பர்க்கால் சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

வெட்டி எடுத்தபோது 410 காரட்டாக இருந்த இந்த வைரத்தை 1701ஆம் ஆண்டு கவர்னர் தாமஸ் பிட் 48,000 பகோடாக்கள் விலை கொடுத்து வாங்கினார். பின்னர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு பட்டை தீட்டப்பட்டதும் இது 137 காரட்டாக குறைந்தது.  பிட் வைரம் என்று அழைக்கப்பட்ட இதனை பிரெஞ்சு அரசுக்கு 1,35,000 பவுண்டுகளுக்கு விற்று மிகப் பெரிய ஜாக்பாட் அடித்தார் தாமஸ் பிட்.
ரீஜென்ட் வைரம்

1717-ல் பிரெஞ்ச் மன்னரால் ரீஜென்ட் என்று பெயர் மாற்றப்பட்ட இந்த வைரத்தைத்தான் நெப்​போலியன் தன்னுடைய வாளின் கைப்பிடியில் பதித்து வைத்திருந்தார் என்கிறார்கள். நெப்போலியனுக்கு பணக் கஷ்டம் வந்தபோது, 40 லட்சம் டாலருக்கு இதை அடகு வைத்து பிறகு மீட்டார் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ ரீஜென்ட் வைரம் தற்போது பாரீஸ் நகரில் உள்ள லூவர் மியூசியத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1709இல் தனது பதவிக்காலம் முடிந்ததும் பெரும் செல்வத்துடன் இங்கிலாந்து திரும்பிய தாமஸ் பிட், பல பகுதிகளில் அரண்மனை போன்ற வீடுகளை கட்டி அம்சமாக செட்டிலாகிவிட்டார். அப்போதும் சும்மா இல்லாமல் மீண்டும் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துவிட்டார். இதனிடையே அவரது மகனும் எம்.பி.யாகி விட்டதால் அப்பாவும், மகனும் சேர்ந்தே நாடாளுமன்றத்திற்கு சென்று வந்தனர்.

நன்றி - தினத்தந்தி

* இவரது பேரனான வில்லியம் பிட் சீனியரும், கொள்ளுப் பேரனான வில்லியம் பிட் ஜூனியரும் இங்கிலாந்தின் பிரதமர்களாக இருந்தவர்கள்.

* இறுதி நாட்களில் அவர் ஜமைக்காவின் கவர்னராக நியமிக்கப்பட்டார். ஆனால் சில காரணங்களால் பிட் அந்த பதவியில் சேரவில்லை.