சென்னை மாநகரில் ஒரு பரந்துவிரிந்த
விசாலமான அரண்மனை இருந்தது, இன்னும் இருக்கிறது என்ற தகவல் நிறைய பேருக்கு
ஆச்சர்யமளிக்கக் கூடும். மெட்ராஸ் என்ற நிலப்பரப்பே கிழக்கிந்திய
கம்பெனிக்காரர்கள் வந்த பிறகுதானே மக்கள் புழக்கம் நிறைந்த பகுதியாக மாறியது...
அப்படி இருக்க, இங்கு எந்த ராஜா அரண்மனை கட்டினான்? ஏன் கட்டினான்? என நீங்கள்
கேட்பது புரிகிறது. இதற்கான பதிலை அறிந்துகொள்ள நாம் சுமார் 250 ஆண்டுகள்
பின்னோக்கிப் போக வேண்டும்.
18ஆம் நூற்றாண்டில்
வட ஆற்காடு, தென்னாற்காடு, திருச்சி, திருநெல்வேலி, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகள்
கர்நாடக நவாபின் ஆட்சியின் கீழ் இருந்தன. இவரது தலைநகரம் ஆற்காட்டில் இருந்ததால்
இவரை ஆற்காடு நவாப் என மக்கள் அழைத்தனர். 1749இல் இந்த நவாப் பதவிக்காக ஒரு போர்
நடந்தது. நவாப்பின் வாரிசுகளுக்கு இடையில் நடந்த போரில் ஒரு தரப்பை பிரெஞ்சுக்காரர்களும்,
மற்றொரு தரப்பை ஆங்கிலேயர்களும் ஆதரித்தனர். இதில் ராபர்ட் கிளைவ் தலைமையிலான
பிரிட்டீஷ் படை வெற்றி பெற்றதால், அவர்கள் ஆதரித்த வாலாஜா நவாபான முகமது அலி ஆற்காடு
அரியணையில் ஏறினார்.
ஒருவழியாக அரியாசனத்தில்
அமர்ந்துவிட்டாலும், அரசியல் ஆபத்துகள் காரணமாக ஆங்கிலேயர்கள் வசிக்கும் ஜார்ஜ்
கோட்டைக்கு இடம்பெயர்வதுதான் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வந்தார் முகமது அலி.
இதற்கு ஆங்கிலேயர்களும் ஒப்புக் கொண்டதால் கோட்டைக்குள்ளேயே நவாபுக்காக அரண்மனை
கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது.
இதனைத் தொடர்ந்து நவாப் அரண்மனைக்காக சேப்பாக்கத்தில் 117 ஏக்கர் நிலம் தனியாரிடம்
இருந்து வாங்கப்பட்டது.
1890களில் சேப்பாக்கம் அரண்மனை |
அரண்மனை கட்டும் பணி
பால் பென்ஃபீல்ட் (Paul Benfield)
என்ற கிழக்கிந்திய பொறியாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அவர் 1768இல் கட்டி
முடித்ததுதான் பிரம்மாண்டமான சேப்பாக்கம் அரண்மனை. நவாப் தனது மெகா குடும்பத்துடன்
வாழ்ந்து வந்த இதுதான் பின்னாட்களில் பிரபல கட்டட பாணியாக மாறிய இந்தோ-சராசனிக்
பாணியில் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கட்டடம். ஹூமாயுன் மஹால், கலஸ் மஹால் என
இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த கட்டடம், மெரினாவிற்கு மேலும் மெருகூட்டியது என்றே
சொல்ல வேண்டும்.
நவாப்
முகம்மது அலிக்கு கை தாராளம். ஆடம்பரப் பிரியர் வேறு. எனவே காசு இல்லாவிட்டாலும்
கலங்காமல் ஆங்கிலேயர்களிடம் தொடர்ந்து கடன் வாங்கி 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்று
வாழ்ந்திருக்கிறார். விளைவு, ஒருகட்டத்திற்கு மேல் இனி இது தாங்காது என
முடிவெடுத்த ஆங்கிலேயர்கள், நவாப் பட்ட கடனுக்காக கர்நாடகத்தில் வரி வசூலிக்கும்
உரிமையை பெற்றுக் கொண்டனர். இதனிடையே நவாப் முகம்மது அலி இறந்துவிட, அவரது மகன்
உம்தத்-உல்-உம்ராவின் தலையில் கடன் சுமை இறங்கியது. 1801இல் அவரும் இறந்ததும், கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரபு, கர்நாடகம் முழுவதையும் கிழக்கிந்தியக் கம்பெனி அரசுடன்
இணைத்துவிட்டார். எனவே நாடு இல்லாத நவாப்புகளான வாரிசுகள் சேப்பாக்கம் மாளிகையில்
இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது தான் தற்போது
ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால்.
நவாப் முகம்மது அலி |
1855இல் சேப்பாக்கம் அரண்மனையை பிரிட்டீஷ்
அரசு ஏலம் விட்டது. ஆனால் இதை ஏலத்தில் எடுக்கும் அளவிற்கு யாரிடமும் பணம் இல்லை.
எனவே அரசே இதை கையகப்படுத்தி, அரசு அலுவலகமாக மாற்றியது. இதனிடையே 1860இல், பிரபல
கட்டடக் கலைஞரான ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Fellowes Chisholm) ஹூமாயுன் மற்றும் கலஸ் மஹால்களுக்கு இடையில் ஒரு கோபுரத்தை
நிர்மாணித்தார். கர்நாடக பகுதி முழுவதையும் பிரிட்டீஷார் கைப்பற்றியதன் நினைவாக
இது எழுப்பப்பட்டது.
பின்னர்
சிஸ்ஹோம், இந்த அரண்மனைக்கு முன்புறம், மெரினாவைப் பார்த்தபடி, ஸ்காடிஷ் பாணியிலான
பொதுப்பணித் துறை கட்டடம், வாலாஜா சாலையைப் பார்த்தபடி, இந்தோ-சராசனிக் பாணியிலான ஆவணக் காப்பகம் மற்றும் வருவாய்துறை கட்டடங்களைக் கட்டினார். இதனால்
சேப்பாக்கம் அரண்மனை இந்த கட்டடங்களுக்குள் மெல்ல மறைய ஆரம்பித்தது. பின்னர்
1950களில் எழிலகம் கட்டப்பட்டதும் கொஞ்ச நஞ்சம் தெரிந்த அரண்மனையும் முற்றிலுமாக
மறைந்துவிட்டது.
ஒருகாலத்தில்
அரண்மனைக்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களை துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்ற
மைதானத்தில், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் இல்லம் கட்டப்பட்டுவிட்டது. அதேபோல
நவாப்பின் நீச்சல் குளமும் இடிக்கப்பட்டு பல்கலைக்கழக கட்டடங்கள் முளைத்துவிட்டன. அரண்மனையின்
பிரதான அரைவட்ட நுழைவு வாயில் வாலாஜா சாலையில் இருந்திருக்கிறது. முக்கிய
நிகழ்வுகளின்போது, இங்கிருந்த மாடத்தில் இருந்தபடி இசைக்கலைஞர்கள் தங்களின்
இசையால் காற்றில் இனிமை சேர்த்திருக்கிறார்கள்.
இன்றைய
திருவல்லிக்கேணி காவல்நிலையம் கூட சேப்பாக்கம் அரண்மனையின் ஒரு பகுதிதான்.
குதிரைக்காரர்களுக்கும், விருந்தினர்களின் உதவியாளர்களுக்கும் உணவு பரிமாறும்
இடமாக இது இருந்திருக்கிறது. அதேபோல அரண்மனையின் பின்புறம் யானைக்குளம் ஒன்று
இருந்திருக்கிறது. அரண்மனை யானைகளை இங்குதான் குளிப்பாட்டி இருக்கிறார்கள். இன்று
குளமும் இல்லை, அதில் குளித்த யானைகளும் இல்லை. ஆனால் மெட்ராசின் ஒரே ஒரு
அரண்மனையைச் சுற்றி இதுபோன்ற இனிய நினைவுகள் மட்டும் நிறைந்திருக்கின்றன.
நன்றி - தினத்தந்தி
* 2007 மார்ச்சில் இங்கு இயங்கி வந்த தோட்டக்கலை
இயக்குநர் அலுவலகத்தின் முதல் மாடியின் கூரை இடிந்து விழுந்தது.
* 2012 ஜனவரியில்
கலஸ் மஹாலின் ஒரு பகுதியை தீ தின்றுவிட்டது.
* பராமரிப்பின்றி
சிதிலமடைந்திருக்கும் இந்த அரண்மனையை உரிய முறையில் சீரமைக்க அரசு ஆவண செய்ய வேண்டும்
என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
நல்லதொரு தகவலுக்கு நன்றி !
ReplyDeleteஆச்சரியமான அற்ப்புத தகவலுக்கு நன்றி !!!
ReplyDeleteI'm really excited... really interesting .... ப்ளீஸ் சகோ எனக்கு சேப்பாக்க அரண்மனை பற்றி முழு வரலாறு கொடுக்க முடியுமா?
ReplyDeletealexnivvy@gmail.com