திருவள்ளுவர் வீட்டு
விலாசம், ஔவையாரின் மெடிக்கல் ரிப்போர்ட் போன்ற ஆவணங்கள் எல்லாம் காணக் கிடைத்தால்
எவ்வளவு பரவசமாக இருக்கும். ஆனால் நம்மிடம் இந்த ஆவணப்படுத்துதல் என்ற பழக்கம்
குறைவாக இருந்ததால், தமிழரின் பெருமைமிகு பாரம்பரியம் குறித்த நிறைய தகவல்கள் அறியப்படாமலே
இருக்கின்றன. இலக்கிய சான்றுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் தெரிய வந்தவை சில
மட்டுமே. ஆனால் அன்றைய சாமானிய மக்களின் வாழ்க்கை முறை பற்றிய எக்கச்சக்கமான
தகவல்கள் காலக்கரையானால் அழிக்கப்பட்டுவிட்டன.
ஆனால் மெட்ராஸ் என்ற பொட்டல்வெளியில்
கிழக்கிந்திய கம்பெனியார் குடியேறிய காலத்தில் (1639) இருந்து நிகழ்ந்தவை பற்றிய
தகவல்கள் நம்மிடம் இருக்கின்றன. இதற்கு வித்திட்டவர் சர் வில்லியம் லாங்கோர்ன் (Sir William Langhorne). 1672இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்ட வில்லியம், "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்பதை நன்கு உணர்ந்திருந்தார். எனவே,
கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களை முறையாக தொகுத்து பாதுகாக்க உத்தரவிட்டார்.
இதில் கவனிக்க
வேண்டியது என்னவென்றால், இங்கிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கும்,
இங்கிலாந்து அதிகாரிகளுக்குமான கடிதப் போக்குவரத்து போன்ற ஆவணங்கள்தான் முதலில்
சேகரிக்கப்பட்டன. இவை அனைத்துமே ஆங்கிலேயர்களால் ஆங்கிலேயர்களுக்கு எழுதப்பட்டவை
என்பதால் இதில் தமிழர்களைப் பற்றிய நல்ல விஷயங்கள் எவ்வளவு இருக்கும் என்பது
சந்தேகமே. ஆனால் குறைந்தபட்சமாக அப்போது நிகழ்ந்த சம்பவங்களையாவது இவற்றின் மூலம்
அறிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது.
ஆரம்ப காலத்தில்
கோட்டைக்குள் இருந்த கவுன்சில் அறையில் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டன. பின்னர்
ஆவணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கோட்டைக்குள்ளேயே இவை இடம் மாறிக்
கொண்டே இருந்தன. பிற்காலத்தில் மெட்ராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட தென்னிந்தியப்
பகுதி முழுவதும் 1801இல் கிழக்கிந்திய கம்பெனியார் கட்டுப்பாட்டில் வந்தது. இதன்
பிறகு, ஆணவங்கள் மலை போல் குவியத் தொடங்கிவிட்டன.
எனவே 1805இல்
மெட்ராஸ் ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிக், துறைவாரியாக சிதறிக் கிடந்த தலைமைச்
செயலக ஆவணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பாதுகாக்க உத்தரவிட்டார். இதற்கென ஒரு
ஆவணக் காப்பாளரையும், சில உதவியாளர்களையும் பணியமர்த்தினார். இவர்கள் கிட்டத்தட்ட
ஒரு நூற்றாண்டு காலம் பல்வேறு ஆவணங்களையும் தொடர்ந்து சேகரித்துக் கொண்டே
இருந்தனர். ஒரு கட்டத்தில் ஆவணங்களை வைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டதும்தான்
இதற்கென தனி கட்டடம் தேவை என்பது உணரப்பட்டது.
அப்போது உருவானதுதான்
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் தற்போதைய தமிழ்நாடு ஆவணக் காப்பகம்.
1909ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடத்திற்கு அந்த காலத்திலேயே ரூ.2,20,000
செலவானதாம். இதில் ஆவணங்களை பாதுகாக்கத் தேவையான வசதிகளுக்காக தனியாக ரூ.1,17,000
செலவிட்டிருக்கிறார்கள். செக்கச் செவேலென இந்தோ - சராசனிக் பாணியில் கம்பீரமாக நின்று
கொண்டிருக்கும் இந்த கட்டடத்தை லோகநாத முதலியார் என்ற தமிழர்தான் கட்டினார். அந்த
காலத்தில் புகழ்பெற்ற கட்டுமானக் கலைஞராக விளங்கிய லோகநாத முதலியார்தான்
பிற்காலத்தில் ரிப்பன் மாளிகையை கட்டியவர்.
ஆவணக் காப்பகம் அந்த
காலத்தில் மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபிஸ் என்று அழைக்கப்பட்டது. 1670ஆம் ஆண்டைச்
சேர்ந்த சில ஆவணங்கள் கூட இங்கே இருக்கின்றன. இவை மட்டுமின்றி அந்த காலத்தில்
தஞ்சாவூர் மகாராஜா போன்ற இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய
கடிதங்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
தென்னிந்திய பகுதி
முழுவதையும் கைப்பற்றிய பிறகு கிழக்கிந்திய கம்பெனியார் நிர்வாக வசதிக்காக அவற்றை
பல்வேறு மாவட்டங்களாகப் பிரித்தனர். அவற்றை நிர்வகிக்க தனித்தனி அதிகாரிகள்
நியமிக்கப்பட்டனர். புதிதாக வரும் ஆங்கிலேயே அதிகாரிகள் அந்த மாவட்டத்தைப் பற்றி
அறிந்து கொள்வதற்காக புத்தகங்கள் போடப்பட்டன. மாவட்ட கையேடு என்ற பெயரில் இவை
பிரசுரிக்கப்பட்டன. முதலில் 1868இல் மெட்ராஸ் மாவட்ட கையேடு வெளியானது. இதனைத்
தொடர்ந்து தென்னாற்காடு, வட ஆற்காடு, திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட
மாவட்டங்களின் கையேடுகள் வெளியாகின.
இந்த கையேடுகளில்
உள்ள தகவல்களை புதுப்பிக்க வேண்டிய தருணம் வந்தபோது, இவற்றில் புதியவற்றை சேர்த்து
மாவட்ட கெசட்டியர்கள் (District Gazetteers) வெளியிடப்பட்டன. முதல் மாவட்ட கெசட்டியர் 1906ஆம் ஆண்டு மதுரை
மாவட்டத்தைப் பற்றி வெளியானது. அன்று தொட்டு இன்று வரை இவை தொடர்ந்து வெளியாகிக்
கொண்டே இருக்கின்றன. இவற்றின் மூலம் ஒரு மாவட்டம் பற்றிய பல்வேறு தகவல்களையும்
அறிந்துகொள்ள முடியும். இந்த கெசட்டியர்கள் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில்
விலைக்கும் விற்கப்படுகின்றன.
ஆவணங்களை
பாதுகாப்பதோடு அவை மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் ஆராய்ச்சி
மாணவர்கள் இந்த ஆவணங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்களும்
இங்கிருக்கும் ஆவணங்களில் இருந்து தங்களுக்கு தேவையான தகவல்களை கட்டணம் செலுத்தி
அறிந்து கொள்ளலாம்.
இங்கு
குவிந்திருக்கும் மலை போன்ற ஆவணங்களில் நம்மை மலைக்க வைக்கும் ஏராளமான தகவல்கள் புதைந்திருக்கின்றன.
ஜாடிக்குள் அடைபட்ட அலாவுதீன் பூதம் போல தம்மை வெளிப்படுத்த அவை தருணம் பார்த்துக்
காத்திருப்பதாகவே தோன்றுகிறது.
நன்றி - தினத்தந்தி
* சர் வில்லியம்
தனக்காக கிண்டியில் கட்டிய தோட்ட வீடுதான், ராஜ் பவன் எனப்படும் இன்றைய ஆளநர்
மாளிகையாக உருமாறி இருக்கிறது.
* பல்வேறு அதிநவீன
தொழில்நுட்பங்களைக் கொண்டு இங்கிருக்கும் ஆவணங்கள் படி எடுக்கப்பட்டு
பாதுகாக்கப்படுகின்றன.
* தெற்காசியாவிலேயே
மிகப் பெரிய ஆவணக் காப்பகங்களில் முக்கியமானதாக இது திகழ்கிறது.
No comments:
Post a Comment