சென்னை மக்கள்
குடங்களை தூக்கிக் கொண்டு தண்ணீர் லாரிகளை துரத்தும் காட்சிகளை நாம் நிறையவே
பார்த்திருக்கிறோம். இந்த பிரச்னை இன்று நேற்று உருவானதல்ல, மெட்ராஸ் என்ற நகரம்
உருப்பெறத் தொடங்கிய காலத்திலேயே தண்ணீர் பிரச்னையும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
1639இல் சென்னையில்
காலடி வைத்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வங்கக் கடலுக்கு அருகில் புனித ஜார்ஜ்
கோட்டையைக் கட்டினர். கோட்டைக்குள்தான் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளும்,
ஊழியர்களும் ஆரம்ப நாட்களில் வசித்தனர். இங்கு இவர்கள் சந்தித்த பிரச்னைகளில் முக்கியமானது
குடிநீர். கடலுக்கு அருகில் இருப்பதால், ஜார்ஜ் கோட்டையில் எங்கு தோண்டினாலும்
உப்பு நீர்தான் கிடைத்தது. குளுகுளு
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை, மெட்ராஸ் வெயில் ஒருபுறம் வாட்டி வதைக்க, தாகம்
தணிக்க நல்ல தண்ணீர் கிடைக்காதது மற்றொருபுறம் பாடாய்படுத்தியது.
அந்த காலத்தில்
கோட்டைக்கு வெளியில் இருந்த சென்னைவாசிகள் குளம், குட்டைகளில் இருந்தும், கிணறுகளில்
இருந்தும் நீர் இறைத்துக் குடித்தனர். ஆங்கிலேயர்களும் ஆரம்பத்தில் இதனையே
பயன்படுத்தினர். அருகில் உள்ள பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து மாட்டு வண்டிகளிலும், தலை சுமையாகவும் கோட்டைக்கு தண்ணீர் கொண்டு
வரப்பட்டது. ஆனால் இவ்வாறு தண்ணீர் கொண்டு வருவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள்
இருந்ததால் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
குடிநீர் பிரச்னைக்கு
முற்றுப்புள்ளி வைத்து, ALL IS WELL என்று சொல்ல வேண்டுமானால், நமக்கென தேவை ஒரு WELL என்று யோசனை சொன்னார் கேப்டன் பேகர் என்ற ஆங்கிலேயப்
பொறியாளர். அவரது யோசனையின் பேரில்தான் இன்றைய மின்ட் பகுதியில் ஏழு கிணறுகள்
தோண்டப்பட்டன. உண்மையில் மொத்தம் பத்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால் ஏழு
கிணறுகளில்தான் ஊற்று நன்றாக இருந்ததால், அந்த பெயரே நிலைத்துவிட்டது.
கோட்டையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள இந்த கிணறுகளில் இருந்து ஏற்றம் மூலம் நீர் இறைக்கப்பட்டு, குழாய் வழியாக கோட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. 1772இல் செயல்படுத்தப்பட்ட இதுதான் இந்தியாவிலேயே குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட முதல் திட்டம். இந்த கிணறுகளுக்கு காப்பாளராக ஜான் நிக்கோலஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இவர் இந்த பதவியை
எப்படிப் பெற்றார் என்பது ஒரு சுவாரஸ்யமான தனிக்கதை. மெட்ராஸ் மீது ஹைதர் அலி படையெடுத்து வந்தபோது, கோட்டைக்கு குடிநீர்
வழங்கும் கிணறுகளில் விஷம் கலக்க முயற்சிக்கப்பட்டதாம். அப்போது கிழக்கிந்திய படையில்
பணிபுரிந்த ஜான், அவ்வாறு விஷம் கலக்க முயன்ற ஹைதர் அலியின் போர் வீரனை வீழ்த்தி
அவனிடம் இருந்த குத்துவாளை பறித்ததாக கூறப்படுகிறது. அந்த குத்துவாள் தற்போதும்
ஜான் குடும்பத்தினர் வசம் இருக்கிறது. இவ்வாறு கோட்டைக்கான குடிநீர் ஆதாரத்தை
காப்பாற்றியதால், ஏழு கிணறுகளை பாதுகாக்கும் உரிமை 125 ஆண்டுகளுக்கு ஜான் குடும்பத்தினர்
வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்காக ஜானுக்கு
மாதம் 10 பக்கோடா ஊதியத்தோடு, வாடகை இல்லாமல் தங்கிக்கொள்ள ஒரு வீடும், ஒரு
குதிரையும், பல்லக்கு ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. இவரது மறைவிற்கு பிறகு இவரது
சந்ததியினர் அடுத்தடுத்து இந்த பணியை செவ்வனே செய்து வந்திருக்கின்றனர். 1925இல்
பொதுப்பணித் துறை இந்த கிணறுகளை வசப்படுத்தியபோது, இதன் காப்பாளராக இருந்த எவ்லின்
நிக்கோலஸ் (Evelyn
Nicholas), பனித்த கண்களோடும்,
கனத்த இதயத்தோடும் தன் குழந்தைகளை பிரிவதைப் போல, இந்த கிணறுகளைப் பிரிந்து சென்றிருக்கிறார்.
ஒரு நூற்றாண்டுக்கும்
மேலாக இந்த கிணறுகளோடு வாழ்ந்து மறைந்த நிக்கோலஸ் குடும்பத்தினரின் கல்லறைகள்
சென்னையில்தான் இருக்கின்றன. ராயபுரம் செயின்ட் ரோக்ஸ் (St. Roque’s
cemetery) கல்லறைக்கு சென்றால், இந்த குடும்பத்தினர் அமைதியாக உறங்கிக்
கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இப்படி நிக்கோலஸ்களால் நிறைந்திருப்பதால், இந்த
பகுதியை நிக்கோலஸ் சதுக்கம் என்றும் உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள்.
இவ்வாறு 1772இல் தொடங்கப்பட்ட
ஏழு கிணறு திட்டம், கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி, வெளியில் இருந்த
பூர்வகுடிகளின் தாகத்தையும் தீர்த்து வைத்தது. இந்த கிணறுகளில் இருந்து ஒரு நாளைக்கு
சுமார் 1,40,000 கேலன் (ஒரு கேலன் = 3.79 லிட்டர்) தண்ணீர் இறைத்திருக்கிறார்கள்.
புழல் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு, அது சென்னையின் குடிநீர் ஆதாரமாக மாறும் வரை, இந்த
ஏழு கிணறுகள்தான் மெட்ராஸ் என்ற மாநகரின் தாகம் தீர்த்த அமுத சுரபியாக விளங்கி
இருக்கிறது. ராணுவ குடியிருப்பு பகுதிக்குள் இருக்கும் இந்த கிணறுகளில் சில,
இப்போதும் தொடர்ந்து தண்ணீர் வழங்குகின்றன. ஒரு நீரேற்று நிலையமும் இங்கு
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இனி இதில் விஷம்
கலக்க ஹைதர் அலியின் படை இல்லை என்ற போதும், இந்த கிணறுகளை கூரை போட்டு மூடி
இருப்பதோடு, சிறிய கதவுகளை அமைத்து பூட்டியும் வைத்திருக்கிறார்கள். பூட்டப்பட்ட
இந்த கிணறுகளுக்குள் தண்ணீரோடு, 200 ஆண்டுகளுக்கும் மேலான மெட்ராசின் நினைவுகளும்
தளும்பிக் கொண்டே இருக்கின்றன.
நன்றி - தினத்தந்தி
* ஏழு கிணறு வெட்டிய கேப்டன் பேகரின் நினைவாக
அவரது பெயர் பிராட்வே பகுதியில் ஒரு தெருவுக்கு வைக்கப்பட்டுள்ளது.
* இந்த கிணறுகள்
இருப்பதால், தங்கசாலையை ஒட்டி இருக்கும் இந்த பகுதியே ஏழு கிணறு பகுதி என்று
அழைக்கப்படுகிறது.