என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, September 4, 2011

மூர் மார்க்கெட்

அந்தக் கால மெட்ராசில் புத்தகப் பிரியர்களின் புதையல் சுரங்கமாய் திகழ்ந்தது மூர் மார்க்கெட். புத்தகங்கள் மட்டுமின்றி பழமையான கலைப் பொருட்கள் முதல் பல்பொடி வரை இங்கு கிடைக்காததே கிடையாது என்பார்கள். அப்பா, அம்மாவைத் தவிர அனைத்தும் கிடைக்கும் இடம் என்று மூர் மார்க்கெட்டைப் பற்றி அன்றைய மெட்ராஸ்வாசிகள் பெருமை அடித்துக் கொள்வார்கள்.

சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த சிவப்பு நிறக் கட்டிடத்தில் மூர் மார்க்கெட் இயங்கி வந்தது. இந்த மார்க்கெட் உருவானதற்கு ஒரு வரலாறு உண்டு. அந்தக் காலத்தில் சென்னை பிராட்வேயில் ஒரு மெயின் மார்க்கெட் இருந்தது. அந்தப்பகுதி சாக்கடைகள் தேங்கி சுகாதார குறைவாகக் காணப்பட்டது. அப்போது முனிசிபாலிடி தலைவராக இருந்த லெப்டினட் கர்னல் சர் ஜார்ஜ் மூர், சென்னை நகரத்தின் மேம்பாட்டிலும், சுகாதாரத்திலும் மிகுந்த அக்கறை காட்டினார். அதனால் பிராட்வேயில் உள்ள மெயின் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற மூர் திட்டமிட்டார். எனவே சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் குஜ்லி பஜார் இருந்த இடத்தில் மூர் மார்க்கெட் கட்ட, 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜார்ஜ் மூர் அடிக்கல் நாட்டினார். 1900 நவம்பரில் கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய கவர்னர் ஆர்தர் ஹேவ்லாக்கால் மூர் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டது. கடைகள் வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது.

மெட்ராசில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வந்து போவோரும், தவறாமல் கால்பதிக்கும் இடமாக மூர் மார்க்கெட் திகழ்ந்தது. இந்தோ சாரசானிக் பாணியில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் பார்க்கும்போதே பரவசத்தில் ஆழ்த்தக் கூடியதாக இருந்தது. நுழைவாயில்களில் கருங்கல்களாலான வளைவுகளும், கூரைக் கைப்பிடிச் சுவர்களில் இடம் விட்டு இடமாய் கோயில் கலசங்களின் வடிவில் கல் கலசங்களும் காட்சியளித்தன. இன்று அல்லிக் குளத்தின் மேல் எழுப்பப்பட்டுள்ள புதிய மூர்மார்கெட் அங்காடியின் மாடிச் சுவர்களில் இந்த கல் வடிவங்கள் பத்திரப்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

அந்தக் காலத்து அசல் மூர் மார்க்கெட்டின் (இன்றைய சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம்) உள்ளே, மத்தியில் மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. மூர் மார்க்கெட்டில் பழைய பொருளும் கிடைக்கும், புதிய பொருளும் கிடைக்கும். பழைய புத்தகங்கள், புதிய புத்ககங்கள், எல்லா மொழிகளிலும் புத்தகங்கள், பத்திரிகைகள் என புத்தகப் பிரியர்களின் சொர்க்க லோகமாகவே இந்த மார்க்கெட் திகழ்ந்தது. அந்தக் கால மஞ்சள் பத்திரிகைகள் கூட இங்கு கிடைக்கும்.

மூர் மார்க்கெட்டில் கிடைத்த மற்றொரு முக்கியமான பொருள் கிராமஃபோன் இசைத்தட்டுக்கள். எல்லா மொழிகளிலும் வெளிவந்த சாதாரண இசைத் தட்டுக்கள் முதல் எல்.பி ரெக்கார்டுகள் வரை இங்கு வாங்கலாம். கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாக்களின் இசைத்தட்டுக்கள் என அனைத்து இசைகளையும் வசப்படுத்தி வைத்திருந்தது இந்த கலை மார்க்கெட். ஆங்கிலோ - இந்தியர்கள் மேனாட்டு இசைத் தட்டுக்களை விற்கவும், வாங்கவும், ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றை பரிமாறிக் கொள்ளவும் எப்போதும் இங்கே அலைந்து கொண்டிருப்பார்கள். இங்கு நம்மிடமுள்ள இசைத் தட்டுக்களை கொடுத்துவிட்டு, அதற்குப் பதில் சொற்பக் காசை மட்டும் கொடுத்து வேறு இசைத் தட்டை பேரம் பேசி எடுத்துச் செல்லலாம்.

மூர் மார்க்கெட்டில் பொருட்களை பேரம் பேசி வாங்குவதே ஒரு தனிக்கலை. ஆயிரங்களில் தொடங்கி அணாக்களில் முடியும் அதிர்ச்சி தரும் பேரங்கள் எல்லாம் இங்கு சர்வசாதாரணம். மார்க்கெட் வாசலிலேயே இசைத் தட்டுகளுக்கான தரகர்கள் காத்திருப்பார்கள். இப்போது சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் ஆட்டோகாரர்கள் செய்யும் வேலையை அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்தனர். என் கடைக்கு வா, உன் கடைக்கு வா.. என கையைப் பிடித்து இழுப்பார்கள்.

மூர் மார்கெட் வளாகத்தில் நிரந்தரக் கடைகள், தற்காலிகக் கடைகள் என இருவகை கடைகள் இருக்கும். நிரந்தர கடைகளில் பழைய பர்மா தேக்கில் நேர்த்தியாய்ச் செய்து கண்ணாடிச் சட்டமிட்ட கதவுகளைக் கொண்ட பிரம்மாண்டமான பீரோக்களில் அரிதான வெளிநாட்டு - உள்நாட்டு நூல்களை அடுக்கி வைத்திருப்பார்கள். அச்சுக்கலை கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களைக் கூட இங்கு வாங்கிவிட முடியும்.

மற்றொரு வகை விற்பனையாளர் ''கேர் ஆஃப் பிளாட்பாரம்'' தினுசு. இவர் மூர் மார்க்கெட் வெராண்டாக்களில் நிரந்தர கடைக்காரர்களின் தயவில் கடை விரித்திருப்பார். பெரும்பாலும் பேப்பர் பேக் நூல்களும் பழைய பத்திரிகைகளுமாயிருக்கும். விற்காமல் தேங்கிப் போகும் நூல்களையும் பத்திரிகைகளையும் அவற்றின் தகுதியறிந்து கூறு,கூறாகப் பிரித்து அம்பாரமாக்கிக் குவித்து, ''இதெல்லாம் பத்து ரூபாய் இதெல்லாம் ஐந்து ரூபாய் அதெல்லாம் எது எடுத்தாலும் ஒரு ரூபாய் எது எடுத்தாலும் எட்டணா'' என்று எழுதிய அட்டைகளைக் குத்தி வைப்பார்கள்.

புத்தகக் கடைகள் மட்டுமின்றி ரெடிமேடு துணிக்கடைகள், பொம்மைக் கடைகள், என அனைத்து வகையான கடைகளும் இங்கிருக்கும். வண்ண மீன்கள், கிளிகள், முயல்கள் போன்ற உயிரினங்களும், அவற்றை வளர்ப்பதற்கான தொட்டி, கூண்டு என சகலமும் கிடைக்கும். கடைசி பகுதிக்கு சென்றால் ஆட்டுக்கறி, கோழிக்கறி கடைகள் இருக்கும். சுருங்கச் சொன்னால் அந்தக் கால மெட்ராசின் ஒரு பிரம்மாண்ட ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்தான் மூர் மார்க்கெட்.

சென்ட்ரல் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக மூர் மார்க்கெட் முழுவதையுமே வேறு இடத்துக்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் இதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்தான் 1985ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவில் மூர் மார்க்கெட் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இரவு நேரம் என்பதால் தீ பிடித்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. கட்டிடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் போதுதான் தெரியவந்தது. தீயணைப்பு படையினர் 20 தீயணைப்பு வண்டிகளுடன் வந்து ராட்சத ஏணி கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள்.

ஆனால் அதற்குள் தீயின் நாக்குகள் அந்த பிரம்மாண்ட மார்க்கெட்டை அப்படியே சுருட்டி வாயில் போட்டுக் கொண்டன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஓரிரு கடைகளே தப்பின. கடைகள் எல்லாம் இடிந்த நிலையில் மூர் மார்க்கெட்டின் உள் பகுதியில் வியாபாரிகள் சோகமே உருவாக உட்கார்ந்து இருந்தனர். படையெடுப்பிற்குப் பிறகு அழிந்து போன நகரம் போல மூர் மார்க்கெட் காட்சி அளித்தது. இப்படி 85 ஆண்டுகாலம் மிகவும் பரபரப்பாக இயங்கி, தங்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட மூர் மார்க்கெட் திடீரென தீயில் மாயமானதை நம்ப முடியாமல் மெட்ராஸ்வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் ரூ.10 கோடி என்று அப்போதைய அரசு தெரிவித்தது. ஆனால், கடைசி வரை தீ விபத்துக்கான உண்மைக் காரணம் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது.

நன்றி - தினத்தந்தி

Sunday, August 28, 2011

எழும்பூர் ரயில் நிலையம்

அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரயில் நிலையமாகத் தான் இருக்கும். சென்னையின் மையப் பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத்துடன் ஓங்கி நிற்கும் இந்த ரயில் நிலையக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மிகச் சில கட்டிடங்களில் முக்கியமானது எழும்பூர் ரயில் நிலையம். கூவம் ஆற்றின் வட பகுதியில் அமைந்திருந்த எழும்பூர் என்ற கிராமத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்தனர். ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய ஆங்கிலேயர்கள், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் என அருகில் உள்ள கிராமங்களை விலைக்கு வாங்கி, மெல்ல மெல்ல தங்கள் குடியிருப்பை விஸ்தரித்தனர். அந்த வகையில் அப்போதைய மெட்ராசின் ஆளுநர் எலிஹூ யேல் (அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது), நவாப் சூல்பிகர் கான் என்ற முகலாய வைஸ்ராயிடம் இருந்து 1720ஆம் ஆண்டு விலைக்கு வாங்கிய ஊர்தான் எழும்பூர். இந்த ஊரின் பெயர் ஆங்கிலேயர்களின் வாய்க்கு வளைய மறுத்ததால், எழும்பூரை அவர்கள் எக்மோர் ஆக்கிவிட்டார்கள்.

இந்த ஊரில் ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய பிரம்மாண்டமான கட்டிடம் எழும்பூர் அருங்காட்சியகம், அடுத்தது எழும்பூர் ரயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரயில் நிலையம் கட்ட வேண்டும் என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது. முதலில் ராயபுரம் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலைமையகம் பின்னர் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்குதான் செயல்பட்டது.

இந்திய, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கலந்து உருவாக்கப்பட்ட இந்தோ-சாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.

சாமிநாதப் பிள்ளை அக்காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் மிகவும் புகழ்மிக்க காண்ட்ராக்டராக விளங்கி வந்தார். பெங்களூர் நகரில் இவர் கட்டிய பல கட்டிடங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் நற்சான்றிதழ் அளித்ததை அடுத்து, இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் கட்டும் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காக பூந்தமல்லியில் தனியாக செங்கல் சூளைகளை வைத்திருந்தார் சாமிநாதப் பிள்ளை. இங்கு பிரத்யேகமான முறையில் உறுதியான செங்கல்கள் தயாரிக்கப்பட்டன.

வழக்கமான ஸ்டேஷன் மாஸ்டர் அறை, அலுவலர்களின் அறைகளைத் தாண்டி நீண்ட, காற்றோட்டம் மிக்க காத்திருக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதி, பயணிகளின் உடமைகளை வைக்கும் அறை என எழும்பூர் ரயில் நிலையம் நன்கு விஸ்தீரணமாக கட்டப்பட்டது. இதற்கு அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானதாம்.

அக்காலத்தில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இந்த ரயில் நிலையம் இருந்திருக்கிறது. மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக் கொண்டு கதை பேச, ஒரு பெரிய கூட்டம் கூடுமாம். கொல்லங்கோடு மகாராஜா உள்பட பல மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வச் சீமான்களும் இங்குள்ள ஓய்வு அறையில், ரயில் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர்.

அக்கால ரயில்களில் நான்கு வகுப்புகள் இருந்திருக்கின்றன. முதல் வகுப்பு, இந்தியப் பணக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமானது. அடுத்தது இரண்டாம் வகுப்பு, அதற்கடுத்தது இண்டர் கிளாஸ் எனப்படும் இடைப்பட்ட வகுப்பு. இரண்டாம் வகுப்புக்கும், இடைப்பட்ட வகுப்புக்கும் இருக்கைகள் தான் வித்தியாசம். இரண்டாம் வகுப்பில் இருக்கை குஷன் சற்று தடிமனாக இருக்கும், பிந்தையதில் மெல்லியதாக இருக்கும். கடைசியாக பெரும்பாலானோர் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு பெட்டி. இதில் நீளமான மரப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். இதுதான் அன்றைய ரயில் பயணம்.

இங்குள்ள இரண்டு நடைமேடைகளில் மட்டும் நேராக கார்களை செலுத்திக் கொண்டு போய், தேவையான கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வசதி ஒரு காலத்தில் இருந்தது. இந்தியாவிலேயே ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரயில் பாதைகள் வந்த பிறகு இந்த வசதி பறிபோய்விட்டது. இப்படி கார்களில் வந்து ரயில்களுக்கு அருகில் இறங்குபவர்களை வேடிக்கை பார்க்கவே அக்காலத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு கூட்டம் இருக்குமாம்.

எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் - தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுவிடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

சிக்காகோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக உரையை ஆற்றிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தார். அப்போது கல்கத்தா செல்லும் வழியில் அவர் சென்னைக்கு வருகை தந்தார். எழும்பூர் ரயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் வருகையை ஒட்டி ரயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

இப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விளங்கிய எழும்பூர் ரயில் நிலையம், இன்றுதானே ஒரு வரலாற்று பெட்டகமாய் நின்று கொண்டிருக்கிறது.

நன்றி : தினத்தந்தி

Saturday, August 20, 2011

புனித ஜார்ஜ் கோட்டை

சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்பவற்றில் முதன்மையானது புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George). இந்த கோட்டைதான் இன்றைய சென்னை மாநகரம் உருவாகவே காரணமாக இருந்தது. ஆம், இந்தியாவில் பிரிட்டீஷார் கட்டிய முதலாவது கோட்டை இதுதான். 1600ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனி சூரத்தில் அனுமதி பெற்று தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. வங்கக் கடலில் தனது வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் தங்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அருகில் ஒரு துறைமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என கிழக்கிந்தியக் கம்பெனியினர் கருதினர்.

அதற்காக நிலம் தேடும் பணி கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்ட் பிரான்சிஸ் டே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து, ஒரு பொட்டல்வெளியை விலைக்கு வாங்கினார். அங்கு போர்ட் ஹவுஸ் என்ற சிறிய கட்டிடத்தை கட்டினார். இதனைத் தொடர்ந்து ஒரு துறைமுகமும், கோட்டையும் கட்டப்பட்டன. இந்த கோட்டை 1640ம் ஆண்டு, ஏப்ரல் 23ந் தேதி கட்டி முடிக்கப்பட்டது. அது புனித ஜார்ஜ் நினைவு தினம் என்பதால் அந்த கோட்டைக்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிட்டனர். அந்த கோட்டைதான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

1678ல் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் மிகத்தொன்மையான புனித மேரி ஆலயம் கட்டப்பட்டது. அந்தப் பேராலயத்தில்தான் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு வித்திட்ட இராபர்ட் கிளைவின் திருமணம் 1753ல் நடைபெற்றது. 1670களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மெட்ராஸ் கவர்னராக இருந்தார். அவர் கோல்கொன்டா சுல்தானிடமிருந்து, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை,எழும்பூர் போன்ற கிராமங்களை விலைக்கு வாங்கி பிரிட்டிஷ் பகுதியின் எல்லையை விரிவுபடுத்தினார்.

பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஒரு பள்ளிக்கு தனது சொத்தில் ஒரு பகுதியை தானமாக அளித்தார். அதுதான் வளர்ந்து இன்று புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. அந்த பிரபல யேலின் திருமணமும் இந்த தேவாலயத்தில்தான் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆங்கிலேயர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை மிகவும் முக்கியமானதாக கருதியதால், இதனைப் பாதுகாக்க சுற்றிலும் சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பினர். 1695ஆம் ஆண்டு பிரான்சிஸ் டே கட்டிய போர்ட் ஹவுஸ் கட்டிடம் இடிக்கப்பட்டு, தற்போது தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் வளாகத்தின் நடுவே அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்பட்டு, அதில் ஆங்கிலேய ஆளுநர் இல்லமும், அலுவலகமும் அமைக்கப்பட்டது. அங்கு ஆங்கிலேய வணிகர்கள் வீடுகளை கட்டிக் கொண்டு குடியேறினர். செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் வெள்ளையர் நகரம் என்றும், வெளிப்புறப் பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான கலைஞர்களும், நெசவாளர்களும் வாழ்ந்த பகுதி கருப்பர் நகரம் என்றும் இரு நகரங்கள் உருவாகின. கருப்பர் நகரம்தான் பின்னர் ஜார்ஜ் டவுன் ஆனது.

1700 முதல் 1774 வரை புனித ஜார்ஜ் கோட்டைதான் ஆங்கிலேயர்களுக்கு தலைமையிடமாகத் திகழ்ந்தது. அதன்பிறகுதான் கல்கத்தா தலைமையிடமாக மாறியது. ஆங்கில பேரரசை தொடங்கி வைத்த ராபர்ட் கிளைவுடன் பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் போரிட்டு 1746இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றினர். கோட்டை பலவீனமாக இருந்ததால் எளிதில் பிரெஞ்சு படைகளிடம் வீழ்ந்துவிட்டது. அப்போது சிறைபிடிக்கப்பட்ட ராபர்ட் கிளைவ் சாதுர்யமாகத் தப்பி கடலூரில் உள்ள டேவிட் கோட்டைக்கு சென்றுவிட்டார். இது அக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

1749இல் பிரெஞ்சுகாரர்களிடம் இருந்து ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் மீண்டும் கைப்பற்றினர். இதனையடுத்து ராபர்ட் கிளைவ் மீண்டும் சென்னை திரும்பி கோட்டை பொறுப்பாளர் ஆனார். உடனடியாக கோட்டையை பலப்படுத்தும் பணி தொடங்கியது. கோட்டையைச் சுற்றி அகழி ஏற்படுத்தி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வடக்கே ஓடிக் கொண்டிருந்த எழும்பூர் ஆற்றின் பாதையை மாற்றி அதனை ஒரு அகழியாக்க முயற்சி மேற்கொண்டனர்.

1758-59இல் பிரெஞ்சுக்காரரான லாலி என்பவரால் கோட்டை மீண்டும் முற்றுகையிடப்பட்டது. இதனையடுத்து, 1783 வரை கோட்டையை புனரமைத்து, பலப்படுத்தும் பணி தொடர்ந்தது. கருப்பர் நகரப் பகுதி முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டு, பீரங்கிகள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் விரிவுபடுத்தப்பட்ட கோட்டையின் வடிவத்தில் பெரும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. 107.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் வெல்லஸ்லி இல்லம், கிளைவ் இல்லம், டவுன் ஹால், ஆங்கிலேயப் படைகள் தங்கிய பாரக்ஸ் கட்டிடம் ஆகியவை தற்போதும் உள்ளன.

இந்தக் கோட்டைதான் தமிழக சட்டசபையாக இத்தனை ஆண்டுகள் ஓய்வின்றி (திமுக அரசு இதற்கு சற்று ஓய்வு கொடுக்க முயற்சித்தது) பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் முதல் சட்டசபை 1921ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று பெயர். இந்த சட்டமன்றம் முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில், 1921ஆம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி கூடியது. கன்னாட் கோமகன் இதை தொடங்கி வைத்தார்.

முதல் உலகப் போரிலும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு பங்கு இருக்கிறது. 1914ஆம் ஆண்டு, செப்டம்பர் 22ந் தேதி இரவு 9.30 மணியளவில் ஜெர்மானிய கடற்படையைச் சேர்ந்த 'எம்டன்' கம்பல் மெட்ராஸ் நகரம் மீது பீரங்கிக் குண்டுகளை வீசியது. எம்டனிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதிமன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன.

கோட்டையைப் போன்றே அதில் கம்பீரமாக வானுயரக் காட்சியளிக்கும் கொடி மரமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. புனித ஜார்ஜ் கோட்டையின் முகப்பில் தேக்கு மரத்தினாலான கொடிக் கம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனி கொடி பறந்து கொண்டிருந்தது. அதில் கவர்னர் யேல் காலத்தில் பிரிட்டிஷ் அரசின் கொடி பறக்கவிடப்பட்டது. கடற்கரையில் தரைதட்டி உடைந்த லாயல் அட்வெஞ்சர் என்ற கப்பலில் இருந்த தேக்கு மரத்தாலான கம்பம் எடுக்கப்பட்டு கோட்டை கொத்தளத்தில் நிறுவப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட இந்தக் கொடிக் கம்பம்தான், இந்தியாவிலேயே உயரமானதாகும். இந்திய சுதந்திரத்தின் போது, இதில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. தேக்கு மரத்திலான இந்தக் கொடிக் கம்பம் பழுதடைந்ததால், 1994ஆம் ஆண்டு இரும்பு கம்பம் நிறுவப்பட்டது.

கடற்கரையோரம் பெரிய மதிற்சுவர் போலத் தோன்றும் இந்தக் கோட்டைக்குள் ஆயிரம் அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. தமிழக சட்டமன்றம், தலைமைச் செயலகம், ராணுவம் மற்றும் தொல்லியல் துறை அலுவலகங்கள் இங்கு இயங்கி வருகின்றன. இங்கு ஓர் அருங்காட்சியகமும் இருக்கிறது. ஐரோப்பிய பாணியிலான பழம்பெரும் ஓவியங்கள் இங்குள்ளன.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததும் ஆங்கிலேயர்கள் கப்பலேறிப் போய்விட்டார்கள். ஆனால் வங்கக் கடலை வெறித்தபடி தனது 370 ஆண்டு கால நினைவுகளை சுமந்துகொண்டு இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது புனித ஜார்ஜ் கோட்டை.

நன்றி: தினத்தந்தி

Saturday, August 13, 2011

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெட்ராஸ் டே கொண்டாட்டங்கள் இன்னும் சில நாட்களில் தொடங்குகின்றன. இந்த நேரத்தில், அந்தக் கால மெட்ராஸை நினைவு கூறும் கட்டுரைத் தொடர் ஒன்றை எழுத தினத்தந்தி நாளிதழ் எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். சென்னையின் புராதன கட்டிடங்கள் மற்றும் இடங்கள் பற்றி சனிக்கிழமை வெளிவரும் தினத்தந்தியின் முத்துச்சரம் இதழில் எழுத இருக்கிறேன். வரும் சனிக்கிழமை முதல் ஆட்டம் தொடங்குகிறது. படித்துவிட்டு கருத்துகளை தெரிவித்தால், எனது பயணத்தை தொடர வசதியாக இருக்கும், நண்பர்களே.